அங்கத நாடகத்துக்கு அணிந்துரை எழுத வேண்டியவர்கள் - ஹிந்து பற்றி இளந்திரையன்

‘ஆபரேஷன் எல்லாளன்!’ - புலிகளின் ராணுவ பேச்சாளர் இளந்திரையன் பேட்டி

அக்டோபர் 22ம் தேதி திங்கள்கிழமை அதிகாலை.... விடுதலைப்புலிகளின் சிறப்பு கமாண்டோ படையின் 21 கரும்புலிகள், இலங்கை அரசின் அநுராதபுரம் படைத்தளத்தை தரைப்படையாலும் விமானப்படையாலும் தாக்கி அழித்தது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இந்தத் தாக்குதலுக்குப் புலிகள் வைத்த பெயர் ‘எல்லாளன் நடவடிக்கை’. எல்லாளன் என்பவன் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அநுராதபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட தமிழ் மன்னன். நாற்பத்தி நான்கு ஆண்டு காலம் ஆட்சி செய்த இந்த எல்லாளனை போரில் வெல்ல முடியாமல் சூதில் வென்றிருக்கிறான் சிங்கள மன்னன் துட்டகைமுனு என்பவன். இந்த தமிழ் மன்னனை கவுரவிக்கும் விதமாகத்தான் புலிகளின் தலைவர் பிரபாகரன், இந்த ஆபரேஷனுக்கு எல்லாளன் பெயரைச் சூட்டினாராம்.

இதில் பலியான இருபது புலிகளின் உடல்களையும் இலங்கை அரசு


நிர்வாணமாக்கி, தெருவில் மக்கள் பார்வைபட வைத்தது. அதோடு பிரேத பரிசோதனைக்குப் பிறகு செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டிய அந்த உடல்களை புதைத்துவிட்டதாகவும் தெரிவித்தது. இந்த செய்கை ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், புலிகளின் ராணுவப் பேச்சாளர் ராசைய்யா இளந்திரையனை மின்னஞ்சல் மூலம் நாம் தொடர்பு கொண்ட போது...

‘‘எமது கரும்புலிகளின் உடல்களைச் சிதைத்து நிர்வாணப்படுத்திய தன் மூலம் ஜெனீவா உடன்படிக்கையை மட்டுமின்றி உலகெங் கும் பண்புள்ள சேனைகள் கடைப்பிடித்துவரும் கண்ணியங்கள் அனைத்தையும் மீறியிருக்கிறது இலங்கை அரசு. ஒருமுறை சிங்களப் போர்க்கைதி ஒருவர் எங்களிடம் இருந்தார். அவருடைய மனைவி கருவுற்றிருக்கிறார் என்று தெரிந்ததும் தாயுள்ளத்தோடு எமது தலைவர் அந்தக் கைதியை விடுவித்தார். அதுபோல ஒரு குழந்தை எமது தலைவருக்கு எழுதிய கடிதத்தால் மனம் கசிந்து இன்னொரு கைதியையும் விடுவித்தார். அது மட்டுமல்ல, மண்டைத்தீவில் இருந்த சிங்கள படைத்தளத்தைத் தாக்கத் திட்டமிட்டபோது, தாக்குதல் தளபதியிடம் அங்கிருக்கும் சிங்கள வீரர்களுக்கான நினைவுத் தூபிகளை தவறுதலாகக்கூட அழித்துவிடாதபடி நான்கு போராளிகளை காவல் வைக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். எமது தேசியத் தலைவரின் கம்பீரத்தையும், சிங்கள சிப்பாய்களின் உடல்களை உறவினருக்குத் தர முடியாத பொழுதுகளில்கூட உரிய மரியாதையோடு அடக்கம் செய்யும் எங்கள் வீரர்களின் பண்பையும் நினைத்துப் பார்க்கிறேன். இறந்த உடல்கள் மீது கொடூரம் காட்டும் எங்கள் எதிரிகள் எவ்வளவு கொடூரமானவர்கள் என்பதை மக்கள் இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்’’ என்றவரிடம்,

‘‘இலங்கை அரசின் வான் படைத்தளத்தின் மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டதன் நோக்கம் என்ன? உங்களுடைய பார்வையில் சேத விவரம் சொல்ல முடியுமா?’’

‘‘சிங்களப் பேரினவாதத்தின் முதுகெலும்பு போன் றது அநுராதபுரம் வான்தளம். இங்கிருந்துதான் வன்னி போர்முனைக்கு யுத்தத் தளவாடங்கள் எடுத்துச் செல்லப்படுவதும் கொண்டுவரப்படுவதும் நடந்தது. காயமடையும் ராணுவத்தினருக்கு சிகிச்சை செய்யும் தளமாக இருந்ததோடு தமிழர்களின் வாழ்விடங்களில் குண்டு வீசித் தமிழர்களைக் கொல்லும் முக்கிய படைத்தளமாகவும் அநுராதபுரம் இருந்தது. பல வெளிநாட்டுப் பயிற்சியாளர்கள் இங்குதான் சிங்கள ராணுவத்துக்குப் பயிற்சி கொடுக்கிறார்கள். புலனாய்வுக்கும் இந்த தளம் அவர்களின் தலைமை யிடங்களில் ஒன்றாக விளங்கியது. நாங்கள் நிகழ்த்திய தாக்குதலில் சிங்கள அரசின் வான்படை விமானங்கள் நிறுத்தும் கூடங்கள் அனைத்தும் அந்தந்த விமானங்களுடன் எரிந்து போயின. கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய் இழப்பு அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. எரிந்துபோன போர் விமானங்களின் எண்ணிக்கை பதினேழு. பல மணிநேரம் நின்று போராடி புலி வீரர்கள் அந்த தளத்தையே தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்து அவர்களின் இதயப் பகுதிக்குள்ளே நடந்த முக்கியமான தாக்குதல் இது!’’

‘‘இதற்குப் பதிலடியாக ஈழத் தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு தாக்குதலைத் தொடங்கினால் அதை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?’

‘‘தமிழ் மக்கள் மீது தொடர்ந்து குண்டு வீசி எமது மக்களை அழித்ததன் பின் விளைவுதான் இந்தத் தாக்குதல். எப்போதும் எங்கள் மக்களைப் பாதுகாக்க தற்காப்பு தாக்குதலைத்தான் நாங்கள் நிகழ்த்தியிருக்கிறோம். எங்கள் மக்கள் மீது கைவைத்தால் அதற்குரிய பின் விளைவுகளை சந்தித்தே தீரவேண்டும். எப்போதும் எமது முப்படைகளும் மக்களைக் காக்கத் தயார் நிலையில் இருக்கிறது. இந்தத் தாக்குதலில் இருந்து மீள அவர்களுக்கு சில மாதங்கள்வரை ஆகும். இலங்கையின் போர் வரலாற்றில் இதுவரை இப்படியரு பொருளாதார சேதத்தை அவர்கள் சந்தித்ததில்லை என கொழும்பு ஆய்வாளர்களே சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இவ்வளவு சேதத்தைச் சந்தித்த பிறகும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது மாதிரிதான் நடந்துகொள்கிறார்கள். சிங்களப் பேரின வாதிகளுக்கு புலிகள் சொல்லிக்கொள்வதெல்லாம், ‘இலங்கைத் தீவின் எந்தப் பகுதியும் எங்கள் இலக்குக்கு அப்பாற்பட்டதல்ல என்கிற யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள்’ என்பதுதான்!’’

‘‘தொடர் தோல்விகளையும் மிக அதிக அளவிலான உயிர்ச் சேதங்களையும் சந்தித்து புலிகள் இப்போது பலவீனமாகி இருப்பதாக சொல்கிறார்களே?’’

‘‘போர் உக்கிரம்பெறும் தருணங்களில் இழப்புகள் இரு தரப்பிலும் நிகழ்வதுதான். எமது தேசிய வானொலியிலும் தொலைக்காட்சியிலும் பத்திரிகையிலும் எங்கள் தரப்பு இழப்புகளை விவரமாக வெளியிட்டுவருகிறோம். இலங்கை அரசு கோயபல்ஸ் பாணியில் இழப்புகளை மறைத்து அரசியல் வணிகத்தில் ஈடுபடுகின்றது. அரசு தரப்பு ஊடகங்களையும் செய்திகளையும் பார்ப்பவர்களுக்கு எங்கள் இழப்புகள் அதிகம் என்பதாகவே தோன்றும். இப்போது நடந்த தாக்குதலில் கிட்டத்தட்ட பதினேழு விமானங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன; முப்பத்தைந்து சிங்கள வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால், இரண்டு விமானங்களும் எட்டு பேரும் மட்டும் இறந்ததாகச் சொல்கிறது இலங்கை அரசு. ஆனால் ரத்தம் சிந்தாமல் விடுதலைப் போராட்டம் இல்லை. எமது மண்ணின் விடுதலைக்காக கொடையாகிற புலி வீரன் சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தமும் எமது மக்களின் அமைதிக்காகத்தான். எங்களது பலம், பலவீனம் இரண்டையும் கொழும்பு செய்திகளின் அடிப்படையில் அணுகாமல் புலிகள் அமைப்பின் செயலாற்றல் வழியாகத்தான் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.’’

‘‘நவம்பரில் மாவீரர் தினம் நெருங்கிவரும் சூழலில் ஒரு தரப்பாக சுதந்திரத் தமிழ் ஈழத்தை நீங்கள் பிரகடனம் செய்யப்போவதாக இலங்கை அரசு உங்கள் மீது குற்றம் சுமத்தியிருக்கிறதே?’’

‘‘சிங்களப் பேரினவாதம் ஆழம் பார்க்கிறதா, அஞ்சி நடுங்குகிறதா... என்பது தெரியவில்லை. எமது தமிழீழ தேச விடுதலைக்காக இதுவரை பல்லாயிரக்கணக்கான புலி வீரர்கள் தங்கள் உயிரைக் கொடையாகக் கொடுத் திருக்கிறார்கள். அந்த மாவீரரின் திருவிழாதான் எமது தேசியத் திருவிழா. அந்த நாளில் எமது தலைவனின் கட்டளைக்காகக் காத்திருக்கிறோம். தலைவனின் கட்டளைகளை நிறைவேற்றுவதுதான் எங்கள் லட்சியம்.’’

‘‘புலிகள் அமைப்பில் வாரிசு அரசியல் உருவாகியிருப்ப தாகவும் அதன் விளைவாக அமைப்பில் பிளவு ஏற்பட்டிருப்பதாகவும் செய்திகள் கசிந்தனவே..?’’

‘‘அங்கத நாடகத்துக்கு அணிந்துரை எழுத வேண்டிய வர்கள் அரசியல் ஆய்வுக்குள் அறியாமல் நுழைந்ததன் எதிரொலிதான் இம்மாதிரி பரப்புரைகள்’’ என்று முடித்தார் இளந்திரையன். டி.அருள்எழிலன்

நன்றி - ஜூனியர் விகடன்