முட்டாள்களின் உலகமடா சாமி!

பாரிஸ் ஹில்டன் சமீபத்தில் 'என்ன காரணத்திற்காகவோ' ஆப்பிரிக்க தேசம் வந்திருக்கிறார். அவரிடம் "what you thought of South Africa" என்ற கேள்விக்கு பாரிஸ் அளித்த பதிலான, "I love Africa in general — South Africa and West Africa, they are both great countries." கேட்டு கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டேன். அது இருக்கட்டும் பாரிஸ் ஹில்டன் High School dropout ஆமே. உண்மையா?



PS: புகைப்படம் மாற்றியிருக்கிறேன் அதற்கான சோதனைப் பதிவு.
PS: செய்தி கிடைத்தது இங்கேயிருந்து

Mothers brother dont rotate my brain



ஐய்யோ! ஐய்யோ!!!

Strictly boys talk

The problems with GUYS என்றும் அதைத்தொடர்ந்து 26 Things That A Perfect Guy Would Do என்றும் ஃபார்வேர்ட் மெயில்கள் வந்து நேற்று என்னை வெறுப்பேற்றியதைப் பற்றி எழுதியிருந்தேன். இன்று சட்டென்று கண்ணில் பட்ட இந்த 10 Guy Movies You’ve Probably Never Seen, 100 Great Movies Every Guy Must Seeஇரண்டும் கொஞ்சம் அந்த மனநிலையை மாற்றியது. நல்ல பதிவு என்பதால் காப்பி-பேஸ்ட் செய்து போட்டிருந்தேன்.

எனக்குத் தெரிந்து அந்த ஃபார்வேர்ட் மெயில்கள் உங்களில் பல ஆண்மக்களுக்குச் சென்றிருக்க வாய்ப்பிருக்கிறது என்பதால் இந்த பதிவு. Enjoy madi.

PS: இப்படி என்னுடைய ஒரு பதிவிற்கே லிங்க் கொடுப்பது பயங்கர கடுப்பாகயிருந்தாலும், பதிவு பெரியது என்பதாலும் ஆங்கிலத்தில் இருப்பதாலும் வேறு வழியில்லாமல் லிங்க் அடித்திருக்கிறேன்.

நாத்தீகமும் கல்யாணமும் கூடவே கொஞ்சம் ஆண்டாளும்

"அப்பா நீங்க பாத்த மாப்பிள்ளையை நான் கல்யாணம் செய்துக்க முடியாது," நான் சொல்லி முடிக்க, அப்பாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கத் தொடங்கியது.

"என்னம்மா ஷைலு இது; இப்படி சொன்னா எப்படி; நான் பாத்த மாப்பிள்ளைக்கு என்ன குறைச்சல்; நல்லா சம்பாதிக்கிறாரு; அமேரிக்காவில வேலை பார்க்கிறாரு. எந்தக் கெட்டபழக்கமும் கிடையாது. ஏம்மா வேணாங்கற; அவருக்கு மண்டை கொஞ்சம் வழுக்கையா இருக்கே அதனாலயா? இப்ப என்னைப்பாரு நானும் கூட வழுக்கைதான் அதுக்கா என்னை, உன்னோட அப்பா இல்லைன்னு சொல்லிருவியா?"

"என்னப்பா இது, தப்பு தப்பா புரிஞ்சிக்கிட்டு. வழுக்கையா இருக்கிறதா பிரச்சனை? அதுயில்லை! அவரைப் பற்றி நான் ஒன்னு கேள்விப்பட்டேன். அதனாலத்தான்..." நான் முடிக்காமல் இழுத்தேன்.

"சொல்லும்மா என்ன கேள்விப்பட்ட?"

"இல்லை அவரு நாஸ்திகருன்னு யாரோ சொன்னாங்க, கடவுள்னு சொன்னாலே சண்டைக்கு வந்திருவாருன்னும் சொன்னாங்க. எப்பிடிப்பா என்னால அவரு கூட வாழமுடியும். நம்ம வீட்டிலையோ கடவுளை நினைச்சுக்காம எதையுமே செய்ய மாட்டோம். அதனாலத்தான் நான் அப்படி சொன்னேன்." மெதுவாக, ஒருவாரமாய் என்னுள் உறுத்திக் கொண்டிருந்த அந்த விஷயத்தை அப்பாவிடம் சொல்லிவிட்டேன்.

நான் சொன்னதைக் கேட்ட அப்பா முதலில் சிரித்தார். பின்னர் நெருங்கிவந்து என் தலையைத் தடவிக் கொடுத்தவர்.

"அய்யோ ஷைலும்மா, உங்கம்மாத்தான் அடிக்கடி சொல்லிக்கிட்டேயிருப்பா, நீ ஒரு குழந்தைன்னு அது சரியாத்தான் இருக்கு. இதெல்லாம் ஒரு பிரச்சனையா. அவரு கடவுள் இல்லைன்னு சொன்னா என்ன? உனக்கு தெரியுதுள்ள கடவுள் இருக்குறாருன்னு. அதுபோதும். அவங்கவங்க நம்பிக்கைம்மா இது. இதைப்போய் பிரச்சனையா பாத்துக்கிட்டு."

"இல்லைப்பா இப்பப் பாருங்க, நம்ப வீட்டில நல்லநேரம் கெட்டநேரம் பார்த்துட்டுத்தான் ஒரு விஷயத்தை ஆரம்பிப்போம். வாரத்தில் மூணு நாளாவது கோயிலுக்கு போவோம். செவ்வாய், வெள்ளிக் கிழமைன்னா நானும் அம்மாவும் விரதம் இருப்போம். தீபாவளி, பொங்கள், ஆடிப் பதினெட்டு கொண்டாடுவோம். இதெல்லாம் இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியலை. அதனாலத்தான் நான் இவரை கல்யாணம் பண்ணிக்கலைன்னு சொன்னேன்."

நான் சொன்னதும் சிறிது யோசித்த அப்பா, "ஷைலும்மா, நான் ஒன்னு சொன்னா தப்பா நினைச்சுக்க மாட்டியே. நான் ஒரு ஏற்பாடு பண்ணுறேன். நீயும் மாப்பிள்ளையும் தனியா சந்திச்சு இதைப்பத்தி பேசுங்க. உனக்கு என்னென்ன சந்தேகம் இருக்கோ அவருகிட்டையே கேட்டுக்கோ. பின்னாடி அவரை பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்கோ, இல்லைன்னா வேண்டாம். வேற மாப்பிள்ளை பார்ப்போம். என்ன சொல்ற?"

எனக்கும் ஒருவாறு இந்த யோசனை சரியாகப்பட்டது; அதனால் ஒப்புக்கொண்டேன். அடுத்தவாரம் ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள தாயார் சந்நதியில் நானும் அவரும் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

"தம்பி, அந்தப்பொண்ணு உன்கிட்ட ஏதோ தனியா பேசணுமாம்."

நான் அவசரமாய் லேப்டாப்பில் ஒரு டாக்குமெண்டை படித்துக்கொண்டிருக்கும் பொழுது அம்மா இப்படிச் சொல்ல, "என்னம்மா இது, இப்படி மொட்டையா சொன்னா எப்படி. எந்தப் பொண்ணு, எதுக்கு என்கிட்ட பேசணுமாம்?"

"அதாண்டா உனக்கு பார்த்துருக்கோம்ல, அந்தப் பொண்ணு தான். அவங்க அப்பா ஃபோன் பண்ணியிருந்தாரு. அந்தப் பொண்ணுக்கு என்னவோ சந்தேகமாம். உன்கிட்ட பேசி கிளியர் பண்ணிக்கச் சொன்னாராம். அதான்."

எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது.

"பின்ன என்னடா? பொண்ணு பார்க்கவும் வரமாட்டேன்னுட்ட; நீங்க பார்த்து ஒரு பொண்ணை முடிவு பண்ணுங்க, கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்ட; ஒரு பொண்ணுக்கு மேலயும் உன்கிட்ட காண்பிக்கக்கூடாதுன்னும் சொல்லிட்ட, என்னதான் உன் கொள்கையோ. புடலங்காய் கொள்கை. அவங்க வீட்டில் உன்னை பார்க்க வேண்டாம்? இப்பல்லாம் அமேரிக்கா மாப்பிள்ளைன்னாலே பயப்படுறாங்க," அம்மா சொல்லிவிட்டுச் சிரிக்க, அப்பா உடனே, "ஏண்டி பொய் சொல்ற, இங்கப்பாருடா, நீ நாஸ்திகம் பேசிக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கேல்ல, அது அந்தப் பொண்ணுக்கு தெரிஞ்சிருச்சாம். அவங்க வீட்டில் கடவுள் நம்பிக்கை ரொம்ப ஜாஸ்தி. அதனால அந்தப் பொண்ணு பயப்படுதாம்; அவங்க அப்பா சொன்னாரு. நீ நல்ல பையனா தெரியுரியாம், அதனால அந்தப் பொண்ணை பார்க்கப்போ மட்டும் நாஸ்திகம் பேசவேண்டாம்னு சொல்லச் சொன்னார்.

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம், எனக்கும் உங்கம்மாவுக்கும் பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. எல்லா விஷயத்திலும் உனக்கேத்த பொண்ணு அவ. அதனால உன் நாஸ்திகத்தையெல்லாம் தூக்கி குப்பைல போட்டுட்டு. அவக்கிட்ட ஒழுங்கா பேசி கல்யாணம் பண்ணுற வழியை பாரு." சொல்லிவிட்டு நடையைக் கட்டினார்.

நான் அம்மாவிடம்,

"இங்கப்பாரு நான் உன் புருஷன் சொல்றமாதிரி பொய்யெல்லாம் சொல்லமாட்டேன். நான் அந்தப் பொண்ணுக்கிட்ட பேசுறப்போ எனக்கு உண்மைன்னு என்ன படுதோ அதை நிச்சயமா சொல்லிடுவேன். ஒரு பொண்ணை ஏமாத்துறதுல எனக்கு நம்பிக்கையே கிடையாது. அதனால் தான் ஒரே ஒரு பொண்ணைத்தான் நீங்க காட்டணும் அது யாராயிருந்தாலும் எனக்கு ஓக்கேன்னு சொன்னேன். நீங்க பார்த்து முடிவு செய்து சொன்னவுடன் தான் போட்டோவே பார்த்தேன். ஞாபகமிருக்கில்லை."

நான் சின்ன வயசிலேயே சபதம் மாதிரி எடுத்துக்கொண்டது இது, பொண்ணு பார்க்கப்போறேன்னு போய் பஜ்ஜி சொஜ்ஜியெல்லாம் சாப்பிடுட்டு, லெட்டர் போடுறேன், ஃபோன் பண்ணுறேன்னு எல்லாம் சொல்லி அந்த பொண்ணு மனசை கஷ்டப்படுத்தாம, அம்மா அப்பாவையே நல்ல பொண்ணா பார்த்து செலக்ட் பண்ண சொல்லி, என்னென்ன விசாரிக்கணுமோ விசாரிச்சு, புடிச்சிருந்தா மட்டும் பொண்ணு பார்க்கப்போய் சம்மதத்தை தெரிவிச்சுட்டு வரணும்னு யோசிச்சு வைச்சேன். இதுல எங்க அம்மா அப்பாவுக்கும் ரொம்ப சந்தோஷம். பையன் அமேரிக்கா போய்ட்டு வந்தாலும் மரியாதை தரானேன்னு, ரொம்ப ஆராய்ச்சி பண்ணி இந்தப் பொண்ணை செலக்ட் பண்ணியிருக்காங்க. இப்ப இப்படியொரு பிரச்சனை. ஆனால் இதில் கூட சந்தோஷம்தான்; பொண்ணோட அப்பாவே நல்ல மனசு வைச்சு, சந்தேகத்தை தீர்த்துக்கோம்மான்னு சொல்றது ரொம்ப நல்ல விஷயம். அந்தப் பொண்ணுக் நம்மைப் பிடிக்கலைன்னு சொன்னா தப்பில்லை. நாம அந்தப் பொண்ணோட மனசை நோகடிக்கலை அதுபோதும்.

நான் வழக்கம்போல் பெர்முடாஸ் டி-ஷர்ட் போட்டுக்கிட்டு ரெடியாகி நின்றேன்.

"சார் எங்க கிளம்பிட்டீங்க?"

"என்னப்பா மறந்திட்டீங்களா, இன்னிக்கு அந்தப் பொண்ணை நான் இன்னிக்கு பார்க்கணும்தானே."

"பார்க்கணும்தான்; ஆனா இப்படியா, போய் ஒழுங்கா வேட்டி சட்டை போட்டுட்டு வா."

எனக்கு இதைப்பத்தி அப்பாகிட்ட சண்டை போடணும்னு ஆசைதான். இருந்தாலும் பரவாயில்லைனு நினைத்துக்கொண்டே, வேஷ்டி சட்டை போட்டுக்கொண்டு ஸ்ரீரங்கநாதர் கோவிலுக்கு கிளம்பினேன். அந்தப்பொண்ணை நானும் ஃபோட்டோவில் பார்த்திருந்ததால் நாங்களே அறிமுகம் செய்து கொள்வதாக ஒரு முடிவு.

அமேரிக்காவில் வேலை செய்பவர் என்பதால், எச்சரிக்கை நடவடிக்கையாக சில விஷயங்களை தோழிகளும் அம்மாவும் சொல்லியிருந்தார்கள். நாங்கள் ஏற்கனவே புகைப்படத்தில் ஒருவரை ஒருவர் பார்த்திருந்ததால் யாரும் அறிமுகம் செய்து வைக்க வேண்டாமென்றும் நாங்களாகவே அறிமுகம் செய்து கொள்வதாகவும் ஒரு ஏற்பாடு. எனக்கு ஆச்சர்யமே நாஸ்திகவாதி கோயிலுக்கெல்லாம் வருவாரா என்பதுதான்.

நான் கோயிலுக்கு வந்து தாயாரை சேவித்துவிட்டு, பிரசாதத்தோடு பிரகாரத்துக்கு வர, அங்கே நின்று கொண்டிருந்த நபரை அடையாளம் தெரிந்தது. அவரேதான். என்னயிது வேட்டி சட்டை, திருநீறு என்று பக்திப் பழமா இருக்கிறாரே இவரா நாஸ்திகர்? புரியாமலேயே அவருக்கருகில் சென்றேன். பக்கத்தில் வரவரத்தான் அவர் என்னையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அருகில் சென்றதும்... "நீங்க ஷைலஜா தானே?"

"ஆமாம்." சொல்லிவிட்டு, அவரையே உற்றுப் பார்த்தேன். புகைப்படத்தில் பார்த்தது போல் வழுக்கையெல்லாம் ஒன்றும் கிடையாது. கொஞ்சம் பெரிய நெத்தி அவ்வளவுதான்.

"இல்லை, நீங்க என்கிட்ட ஏதோ கேக்கணும்னு சொன்னீங்கன்னு உங்கப்பா சொன்னாரு." அவர் கேட்டதும் தான் நினைவே வந்தது. நான் பேச வாய் எடுக்கும் முன்பே, "நீங்க தப்பா நினைச்சுக்கலைன்னா ஒன்னு சொல்றேன். போட்டோல பாத்ததுக்கு, நேர்ல நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க." அவர் சொல்ல, என் முகம் சிவப்பதை உணர முடிந்தது. என்னடா இது வெட்கங்கெட்ட ஆளாய் இருப்பார் போலிருக்கிறது. முதன் முதலில் நேரில் பார்க்கும் பெண்ணிடம் இப்படித்தான் வழிவதா என்று நினைத்துக்கொண்டே, "இல்லை நீங்க கோவிலுக்கெல்லாம் வருவீங்களா?"

"என்னது வருவீங்களாவா? நல்லா கேட்டீங்க போங்க, இந்தியாவில நான் பார்க்காத கோயில்களே ரொம்ப கம்மியாத்தான் இருக்கும். அதுமட்டுமில்லாம ஸ்ரீரங்கம் கோவில் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏன்னா ஆண்டாள் கடைசியா ரங்கநாதரிடம் சேர்ந்தது இங்கதானே. அந்தப் பெண்ணிடம் தான் என்ன ஒரு காதல்.

வானிடை வாழும் அவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் தரிவது ஓர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதும் ஒப்ப,
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க் என்று
உன்னித்து எழுந்த என தடமுலைகள்
மானிடர்க் கென்று பேச்சுப் படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே

இப்படி ஒரு கவிதையெழுத யாராலங்க முடியும். அதே மாதிரி,

உள்ளே உருகி நைவேனை
உள்ளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளஇக் குறும்பனை
கோவர்த்தனனைக் கண்டக்கால்
கொள்ளும்பயன் ஒன்றில்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளஇப் பறித்திட்டு அவன் மார்பில்
எறிந்தேன் அழலை நீர்வேனே

இந்தக் கவிதை புரியுதுங்களா, இதை படிச்சிட்டு நான் ஸ்ரீவில்லிப்புத்தூர், ஸ்ரீரங்கம்னு அலைஞ்சிருக்கேன் தெரியுமா. ஆமாங்க உங்களுக்கு காதல்னா புடிக்குங்களா?"

எனக்கு ஒன்றுமே புரியவில்லை, அப்பா இவரை பற்றி விசாரித்த வரையில் நாஸ்திகர்னு தானே சொன்னாங்க, ஆனா இவரென்னன்னா, ஆண்டாள்ங்றாரு, ஸ்ரீவில்லிப்புத்தூர்ங்றாரு, காதல்ங்றாரு. என்கிட்ட வேற காதல் பத்தியெல்லாம் பேசுறாரே, என்ன பண்ணுறதுன்னு நினைச்சிக்கிட்டே,

"இல்லைங்க, ஆண்டாளோட காதல் தெய்வீகமானது. அதுல எனக்கு உடன்பாடு உண்டு. மற்றபடிக்கு காதல்லயெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லைங்க; அப்பா அம்மா பாக்கிற பையனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்," சொல்லிவிட்டு நிமிர்ந்து பார்த்தேன். அவரும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.

"நீங்க நாஸ்திகர்னு அப்பா சொன்னாங்களே..." நான் முடிக்காமல் இழுத்துக் கொண்டிருக்க.

"ஆமாங்க நான் நாஸ்திகன் தான். எனக்கு கடவுள் பத்திய நம்பிக்கை கிடையாது. வேணும்னா கடவுளுடைய இருப்பு விளங்காம இருக்கேன்னு வைச்சுக்கோங்களேன். மற்றபடிக்கு கோவிலுக்கெல்லாம் போவேன், கடவுள் நம்பிக்கை இருக்கிறவங்கள கிண்டல் பண்ண மாட்டேன். அது அவங்களோட நம்பிக்கை. இது என்னோடது." சொல்லிவிட்டு சிரித்தார்.

பிறகு அவருடைய வேலையை பற்றியும் கல்யாணத்திற்கு பிறகு, என்னை அமேரிக்கா அழைத்துச் செல்ல விசா வாங்குவது பற்றியும் என் பாஸ்போர்ட் பற்றியும், எனக்கு கார்வோட்ட தெரியுமா என்பது பற்றியும் அவர் பேசிக்கொண்டிருக்க நான் பதிலளித்துக்கொண்டே யோசித்துக் கொண்டிருந்தேன். யாரோ தொடுவது போலிருந்ததால், நினைவு மீண்டு பார்க்கையில் என் கை அவரிடம் இருந்தது.

"இந்த மெகந்தி நீங்க போட்டதா, ரொம்ப அழகாயிருக்கு." அவர் கையையே பார்த்துக் கொண்டிருக்க, நான் மெதுவாக என் கையை அவரிடம் இருந்து விலக்கிக் கொண்டு, "அம்மா சொல்லியிருக்காங்க, இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான். நான் கிளம்புறேன்." சொல்லிவிட்டு எதிரில் இருக்கும் ராமாநுஜர் சந்நதியில் உட்கார்ந்திருந்த அப்பா அம்மாவிடம் வந்தேன்.

"என்னம்மா சொல்றாரு மாப்பிள்ளை. உனக்கு சம்மதம் தானே?"

"சம்மதம்தான்பா. எனக்கு நம்பிக்கையிருக்கு அவருக்கு கூடிய சீக்கிரமே கடவுள் நம்பிக்கை வந்திடும்," நான் சொல்லிவிட்டுச் சிரித்தேன்.

அம்மாவும் அப்பாவும் தாயார் சந்நதிக்கு எதிரில் உள்ள ராமாநுஜர் சந்நதிக்கு செல்ல நான் மட்டும் தாயார் சந்நதிக்குச் சென்றேன். அவள் அதற்குள் வந்திருப்பாளோன்னு நினைத்துக்கொண்டே பிரகாரத்துக்கு வர, அப்பொழுதுதான் தாயாரை சேவித்துவிட்டு வந்து கொண்டிருப்பவளைப் பார்த்தால், அந்தப் பெண்ணைப் போல்தான் இருந்தது.

அவள் கட்டியிருந்த புடவையும், கூந்தலில் வைத்திருந்த மல்லிகையும், கையில் வைத்திருந்த பிரசாதத்தட்டையும் பார்த்தால் எனக்கென்னமோ ஆண்டாள் ஞாபகம் வந்தது. அவள் எனக்கானவள் என்ற உணர்வுவேறு வந்து பாடாய்ப்படுத்த நான் அவளையே உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவளும்தான். மெதுவாக என்னருகில் வந்தவளிடம். நான், "நீங்க ஷைலஜா தானே?" என்று கேட்க, "ஆமாம்." என்றாள். என்னையே மேலும் கீழும் பார்க்கத்தொடங்கினாள். எனக்கென்னவோ அவள் என் தலையையே பார்ப்பது போல் ஒரு உணர்வு.

எனக்கு மண்டை கொஞ்சம் பெரிதாக இருக்குமாதலால் யாரும் பக்கத்தில் பார்க்கும் பொழுது, மண்டையை கவனித்தால் கோபம் வரும். இந்தப் பெண் அப்படிப் பார்த்ததும், என்னடா இது கொஞ்சம் கூட மேனர்ஸ் தெரியாத பெண்ணாய் இருப்பாள் போலிருக்கிறதே. கொஞ்சம் வழுக்கயாய் இருந்தால் இப்படியா பார்ப்பது என்று தோன்றியது. எனவே, "இல்லை, நீங்க என்கிட்ட ஏதோ கேக்கணும்னு சொன்னீங்கன்னு உங்கப்பா சொன்னாரு," சொல்லிவி ட்டு அவளையே பார்த்தேன். பரவாயில்லை, வீட்டில் நல்லாத்தான் செலக்ட் பண்ணியிருக்கிறார்கள். பெண்ணு ஃபோட்டோவில் பார்த்ததைவிட அழகாய் இருக்கிறாளேன்னு நினைத்தவன், "நீங்க தப்பா நினைச்சுக்கலைன்னா ஒன்னு சொல்றேன். ஃபோட்டோல பாத்ததுக்கு, நேர்ல நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க!" அப்படின்னு சொல்லிட்டேன். என்னடா இது, இந்தப் பொண்ணை பார்த்ததில் இருந்து தப்பு தப்பா நடக்குதே. நம்ம வாய் நாம் சொல்றத கேட்க மாட்டேங்குது, நினைச்சதையெல்லாம் சொல்லுது, அய்யோ பாரு அந்தப் பொண்ணோட முகமெல்லாம் சிவந்து போய்விட்டது.

அந்தப் பொண்ணு என்ன நினைக்கும்; சரியான வழிசல் கேசாயிருக்கும்னு நினைக்க மாட்டாளா. கஷ்டகாலம்னு நான் நினைக்க, அந்தப்பெண், "இல்லை நீங்க கோவிலுக்கெல்லாம் வருவீங்களா?" கேட்டாள்.

இதுக்கு நான் என்ன சொல்றதுன்னே தெரியலை, அப்பா சொன்னமாதிரி ஏதாவது பொய் சொல்லலாமா இல்லை, உண்மையை சொல்லலாமான்னு நான் யோசித்தேன். இல்லை பரவாயில்லை உண்மையையே சொல்லிடலாம்னு நினைத்து, "என்னது வருவீங்களாவா நல்லா கேட்டீங்க போங்க, இந்தியாவில நான் பார்க்காத கோயில்களே ரொம்ப கம்மியாத்தான் இருக்கும். அதுமட்டுமில்லாம ஸ்ரீரங்கம் கோவில் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏன்னா ஆண்டாள் கடைசியா ரங்கநாதரிடம் சேர்ந்தது இங்கத்தானே. அந்தப் பெண்ணிடம் தான் என்ன ஒரு காதல்.

வானிடை வாழும் அவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் தரிவது ஓர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதும் ஒப்ப,
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க் என்று
உன்னித்து எழுந்த என தடமுலைகள்
மானிடர்க் கென்று பேச்சுப் படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே

இப்படி ஒரு கவிதையெழுத யாராலங்க முடியும். அதே மாதிரி,

உள்ளே உருகி நைவேனை
உள்ளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளஇக் குறும்பனை
கோவர்த்தனனைக் கண்டக்கால்
கொள்ளும்பயன் ஒன்றில்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளஇப் பறித்திட்டு அவன் மார்பில்
எறிந்தேன் அழலை நீர்வேனே

இந்தக் கவிதை புரியுதுங்களா, இதை படிச்சிட்டு நான் ஸ்ரீவில்லிப்புத்தூர், ஸ்ரீரங்கம்னு அலைஞ்சிருக்கேன் தெரியுமா. ஆமாங்க உங்களுக்கு காதல்னா புடிக்குங்களா?"

நான் என் கான்செப்டையும் இடிக்காமல் அதற்காக பொய்யும் சொல்லாமல் ஒருவாறு இப்படி சொல்லிவிட்டேன். அவளை பார்த்ததிலிருந்தே ஆண்டாள் ஞாபகமாக இருந்ததால். அதைப்பற்றி சொன்னேன், நான் காதல் புடிக்குங்களான்னா கேட்டதும் அந்தப்பொண்ணு, திருதிருன்னு முழித்தது. ரொம்ப நேரம் என்னத்தையோ யோசித்துவிட்டு, "இல்லைங்க, ஆண்டாளோட காதல் தெய்வீகமானது. அதுல எனக்கு உடன்பாடு உண்டு. மற்றபடிக்கு காதல்லயெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லைங்க; அப்பா அம்மா பாக்கிற பையனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்!" அப்படின்னு சொல்ல, நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன பிரகாசமான முகம்!!! கொஞ்சம் கொஞ்சமாய் அவள் என்னுடையவள் என்ற எண்ணம் எனக்குள் ஆழமாய் வேர்விடத் தொடங்கியிருந்தது.

"நீங்க நாஸ்திகர்னு அப்பா சொன்னாங்களே..." அந்தப் பொண்ணு எதைக் கேட்பதற்காக என்னை பார்க்க வந்தாளோ அதை நேரடியாகக் கேட்கநினைத்து, முடிக்காமல் இழுத்துக்கொண்டிருந்தாள்.

"ஆமாங்க நான் நாஸ்திகன் தான். எனக்கு கடவுள் பத்திய நம்பிக்கை கிடையாது. வேணும்னா கடவுளுடைய இருப்பு விளங்காம இருக்கேன்னு வைச்சுக்கோங்களேன். மற்றபடிக்கு கோவிலுக்கெல்லாம் போவேன், கடவுள் நம்பிக்கை இருக்கிறவங்கள கிண்டல் பண்ண மாட்டேன். அது அவங்களோட நம்பிக்கை. இது என்னோடது." நான் சொல்லிவிட்டு சிரித்தேன்.

நான் சொன்னதில் அவளுக்கு நம்பிக்கை வந்திருக்க வேண்டும், அவள் முகமே அதைச்சொன்னது. நான் அதன்பின் எங்களுக்கு கல்யாணம் ஆனபிறகு செய்யவேண்டியதைப் பற்றியெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தேன். விசாவிற்கு அப்ளை செய்வதைப்பற்றியும் அவளது பாஸ்போர்ட் பற்றியும் நான் பேசிக்கொண்டிருக்க, அவள் கேட்டுக்கொண்டிருந்தாள். ஆனால் வேறு எதையோ யோசித்துக்கொண்டிருந்தாள் என்று அவள் முகஜாடை சொல்லியது.

அப்பொழுதுதான் நான் அவள் கைகளை கவனித்தேன். அழகாக மெகந்தி போட்டிருந்தாள். அவளுடைய வெளுத்த உடம்பில் நன்றாய் சிகப்பேறியிருந்த அந்தக் கைகள் என்னை கவர்ந்தன. நான் ஒரு கையை எடுத்து என் கையில் வைத்து பார்த்துக்கொண்டே, "இந்த மெகந்தி நீங்க போட்டதா, ரொம்ப அழகாயிருக்கு!" சொல்லிவிட்டு கைகளையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் என் கைகளிலிருந்த அவள் கையை சாமர்த்தியமாய் எடுத்துக்கொண்டு, "அம்மா சொல்லியிருக்காங்க, இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான். நான் கிளம்புறேன்," சொல்லி என்னைப் பார்த்து சிரித்துவிட்டு நகர்ந்தாள்.

நான் ஏதேதோ ஞாபகங்கள் மேலிட ராமாநுஜர் சந்நதிக்குச் சென்றேன். அங்கே பிரகாரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த அம்மா, "என்னடா கேட்டா என் மருமகள், ஒன்னும் குழப்பம் பண்ணிடலையே நீ?" பயந்துகொண்டே கேட்டார்.

"இல்லைம்மா அந்தப் பொண்ணுக்கும் சம்மதம்னு நினைக்கிறேன்."

"உன் நாஸ்திகத்தையெல்லாம் அவமேல நீ திணிக்கலையே."

"இல்லைப்பா, என்னைப் பொறுத்தவரை கடவுள் நம்பிக்கையோ, கடவுள் மேல் நம்பிக்கையின்மையோ தன்னால வரணும், கட்டாயப்படுத்தி வரக்கூடாது. அதுமட்டுமில்லாம, எல்லா விஷயத்திலேயும் அந்தப் பொண்ணுக்கு என்று தனியா கருத்து இருக்கணும். என்கருத்தே அந்தப் பொண்ணுக்கிட்டையும் இருக்கணும்னு நினைக்கிறது முட்டாள்தனம். அதனால ஒன்னும் பிரச்சனையில்லை. அந்தப் பொண்ணுக்கு சம்மதம்னா சீக்கிரமே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணீருங்கப்பா."