Twitter, தமிழ் விக்கிபீடியா இன்னும் பல

பதிவெழுதுவதை விடவும் twitter உபயோகிப்பது சுலபமாக இருக்கிறது என்றாலும் twitter, தினப்பதிவுகளின் நீட்சியாகப் பார்க்கலாம். உலகைப் புரட்டிப்போடப்போகும் வலை உலகின் நீட்சியாக எல்லாம் இதைக் கருத முடியாது, அதனால் கடப்பாரையாக பதிவைக் கருதாத எவரும் சுலபமாக twitterராக மாறமுடியும். Javaவிற்கும் சேர்த்து API கொடுத்திருக்கிறார்கள். கொஞ்சம் விளையாடிக் கொண்டிருந்தேன். நல்லா வருது, ஆனால் கைவசம் dynamic application ஒன்று இல்லாத குறையை உணர்கிறேன். முன்பொருமுறை ப்ளாக்கர் API வைத்து பின்னூட்ட விளையாட்டு விளையாண்டது நினைவில் வருகிறது.

தீவிரமாக பதிவெழுதாமல் இருக்கும் பொழுதெல்லாம் எனக்கு தமிழ் விக்கிபீடியா நினைவிற்கு வரும், அதுபோல் தான் தற்சமயமும். ஜூலை 2006ல் தொடங்கியது என்றாலும் என்னுடைய தமிழ் விக்கி பங்களிப்பு அங்கையோடு நின்றது ஒரு சோகம் என்று தான் சொல்வேன். ஆதித்த கரிகாலன் பற்றி எழுதியது தான் முதல் கட்டுரை, விக்கிநடை பற்றி தெரியாத கணம், இன்னும் சொல்லப்போனால் என் நடையில் காதல் வர ஆரம்பித்த தருணம், வேகவேகமாகத் தட்டிப்போட்ட கட்டுரை என் நடையிலும், சிறிது எழுத்துப் பிழையுடனும் இருந்தது போலும் அதற்கு தமிழ் விக்கி மக்களிடம் இருந்து வந்த ரெஸ்பான்ஸ் என்னை ஒரு வருடம் அந்தப் பக்கம் அண்ட விடாமல் செய்தது. அது அவர்கள் தவறும் இல்லை சொல்லப்போனால் என் தவறும் இல்லை. விக்கிக்கு செய்வது/எழுதுவது என்பது 'வறட்சியான' ஒன்று.

சொல்லப்போனால் என்னைப் போன்ற ஒரு ஆள் அதனை செய்திருக்கவே முடியாது. Gone in 60 seconds படத்தில் நிக்கோலஸ் கேஜ் கடைசியில், 49 கார்களை கடத்திவிட்டு கடைசி ஒன்றையும் கொண்டு வந்து நிறுத்து, I need some appreciation என்பார் அதைப் போல் எனக்கு அந்தக் காலத்தில் தேவைப்பட்டது appreciation என்று சொல்ல முடியாது ஒரு கட்டுரைக்கு என்ன அப்ரிஷேஷன் வேண்டிக்கிடக்கு. இன்னும் சாதாரணமான மொழியில் எப்படி எழுதுவது என்று புரியும் படி சொல்லியிருக்கலாம்(ஈகோ உச்சக்கட்டத்தில் இருந்த சமயம் என்ன சொல்லியிருந்தாலும் விளங்கியிருக்காது! :)), சோழர்கள் பற்றி எழுதும் ஆவல், ஆதித்த கரிகாலன் பற்றி எழுதும் ஆவல் என்று வெறியுடன் வந்தால் அப்படி ஒரு பதில். இப்பொழுது சிரிப்பாக இருந்தாலும் அன்றைக்கு நினைத்தது அப்படித்தான். மற்றவர்களைப் பற்றித் தெரியாது எனக்கும் விக்கிநடை என்று புழக்கத்தில் இருக்கும் ஒரு விஷயத்திற்கும் பெரும் தொலைவு உண்டு.

பின்னர் எனக்கு நானே தமிழ் விக்கிபீடியா படும் அவஸ்தைகளைப் புரிந்து கொண்டு என் ஈகோவைக் கடாசிவிட்டு திரும்பவும் இறங்கிய பொழுது ஒரு வருடம் ஓடியிருந்தது. முதல் கட்டுரை 28 ஜூலை 2006, இரண்டாவது கட்டுரை 17 மே 2007. நான் மட்டுமல்ல விக்கிபீடியாவும் மாறியிருந்ததாகத் தெரிந்தது. ஏற்கனவே எழுதி இருந்த சோழர் வரலாறு பத்திகளை, கொஞ்சம் போல் விக்கிநடைக்கு மாற்றி போட ஆரம்பித்தேன். பின்னர் தொடர்ச்சியாக என்று சொல்லாவிட்டாலும் ஏதோ என்னால் ஆன, நேரம் செலவு செய்ய முடிந்த அளவிற்கு தமிழ் விக்கிக்கு எழுதினேன். சொல்லப்போனால் நானெல்லாம் இன்னும் ஒன்றும் செய்யவே ஆரம்பிக்கலை. இப்போதைக்கு சோழர்கள் பற்றி ஆங்கில விக்கிபீடியா அளவிற்கு இல்லை அதற்கும் மேல் விவரம் சேர்க்க வேண்டும் என்ற ஆசை மட்டும் இருக்கிறது.

ஆழ உழுவது என்றும் அகல உழுவது என்றும் பதிவுகளிலேயே பேச்சு உண்டு, பதிவுலகில் அகல உழுவதையே நான் தேர்ந்தெடுத்தாலும் தமிழ் விக்கியில் ஆழ உழுவதைத் தேர்ந்தெடுத்தேன். ஆங்கில விக்கிபீடியாவை நாளொன்றுக்கு இருபது இருபத்தைந்து முறைக்கு மேல் உபயோகிப்பவன் என்ற முறையில் இதை நான் செய்ய வேண்டியது என் கடமை என்றே நினைக்கிறேன். இப்போதைக்கு கொஞ்சம் "நீலகண்ட சாஸ்திரி" நடையில் வருகிறது சோழர் கட்டுரைகள் என்றாலும் ஓரளவிற்கு முடித்துவிட்டு எழுதிய எல்லாக்கட்டுரையையும் இன்னும் பொது நடைக்கு கொண்டு வரவேண்டும். ஆச்சர்யமாகயிருக்கிறது, விரும்பி ஏற்றுக் கொண்ட என் நடையை விட்டு விலகி இதைச் செய்கிறேன் எனும் பொழுது ஆனால் முன்னர் சொன்ன காரணம் தான் மீண்டும் மீண்டும் நினைவில் வருகிறது. என்னைக் கேட்டால் தமிழ் விக்கிபீடியாவிற்கு பதிவர்கள் இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்றே சொல்வேன்.

எடுத்துக் கொள்ள விஷயமா இல்லை, உங்களுக்கு பிடித்த புத்தகங்களைப் பற்றி எழுதலாம்(தனித்தனி புத்தகங்களாக), எழுத்தாளர்களைப் பற்றி, சினிமாக்களைப் பற்றி ஆனால் ஒரேயொரு பிரச்சனை தான் நடை பொதுவாக இருக்க வேண்டும் appreciation பதிவுலகத்தில் கிடைக்கும் அளவிற்குக் கிடைக்காது அதனால் பின்வரும் ஒரு சந்ததிக்கு விஷயம் கொடுத்தவர்களாயிருப்பீர்கள்.

சமீபத்தில் மாற்றங்கள் செய்த மூன்று கட்டுரைகள்.

இராஜராஜ சோழன்
இராஜேந்திர சோழன்
புதுக்கோட்டை(பாதியில் நிற்கிறது)

ஏற்கனவே mohandoss.in என்ற இணையதளம் என்னிடம் தான் இருந்தது/இருக்கிறது, அதற்கு இணைப்பு கொடுத்திருந்த ஜாவா, டேட்டாபேஸ் சப்போர்ட் வாய்ந்த என் மற்றொரு இணையதளம் மறதியில் கைவிட்டுப் போனதால் mohandoss.in ன்னும் அப்படியே நின்றது. இப்பொழுது mohandoss.com வாங்கி, blog.mohandoss.comல் செப்புப்பட்டயம் ஏற்றப்பட்டுவிட்டது. எனக்கு ப்ளாக்கர் விட்டுச் செல்ல அத்தனை ஆசையில்லை, சொல்லப்போனால் kundavai.wordpress.com நான் கொஞ்ச காலமாகவே உபயோகித்துவரும் ஒரு இணையதளம் தான் என்றாலும். ப்ளாக்கர் ஃபீவர் இன்னும் போகலை. முழுசும் சொந்தமா code எழுதி Java, J2EE, structs, springs என்று கையில் கிடைச்சதையெல்லாம் போட்டு ஒரு சொந்த இணையதளம் வைச்சிக்கணும்னு ரொம்ப ஆசை. சொல்லப்போனால் இது திரும்பவும் சக்கரம் கண்டுபிடிக்கிற கதைதான்னாலும் அப்படி ஒரு வெறி இருந்தது, இப்ப ரொம்ப கொஞ்சமா இருக்கு. :)

Adventure tourism என்று சொல்லி கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவர் வயநாட்(கேரளா) போகலாமா என்று கேட்டிருந்தார் என் பெயர் எல்லாம் டீபால்ட்டாகவே உண்டென்றாலும் வேறு எதுவும் ப்ளான் இருக்கக்கூடாதென்பதற்கான ஒரு அப்படி ஒரு கேள்வி. யார் யார் வருவார்கள் என்று தெரிந்தாலும் டீம் முழுவதற்கும் மெயில் அனுப்பப்பட்டது. பதில் எப்பொழுதும் போலத்தான் bachelor எல்லாம் in, married எல்லாம் out. :))))) கல்யாணம் செய்துக்கிறதைப் பத்தி தீவிரமா யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

PS: தமிழ்மணத்தில் இன்னமும் புதிய பதிவின் உரல் சேர்க்கப்படாததால் பூனைக்குட்டியை எழுப்பி விட்டிருக்கிறேன்.