மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.
புணர்ச்சிவிதும்பல் - காமத்துப்பால் - திருவள்ளுவர்
அகிலாவும் ஜெயஸ்ரீயும் வந்ததில் இருந்தே சிரித்துக் கொண்டு குசு குசு என்று ரகசியம் என்னமோ பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிந்தாலும் நேற்று ஜெயஸ்ரீயிடம் அடித்த கூத்தால் என்னால் அவளிடம் முகம் கொடுத்தே பார்க்க முடியவில்லை. ஜெயஸ்ரீ, அகிலாவிடம் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்த பொழுதும் என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் முறைத்துக் கொண்டிருந்தாள். அகிலாவிற்கு ஆப்பிள் ஜூஸும் எனக்கும் ஜெயஸ்ரீக்கும் கோல்ட் காப்பியும் ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தோம்.
நான் நேரடியாய் அவளிடம் "ஜெயா சாரி, நான் அப்படி சொல்லியிருக்கக்கூடாது! மன்னிச்சிக்கோ." சொன்னதும் தான் தாமதம்.
"அது பரவாயில்லை இன்னிக்குப் பொழச்சிப்போங்க, இன்னொரு நாள் வைச்சிக்கிறேன் அதுக்கு. எப்ப ட்ரீட்?". அந்தப் பிரச்சனையை அதற்கு மேல் அவள் இழுக்க விரும்பவில்லை என்பது எனக்கு தெரிந்துதான் இருந்தது.
"எதுக்கு ட்ரீட்." எதற்கென்று தெரிந்தாலும் வேண்டுமென்றே அவளை வம்பிழுக்கக் கேட்டேன்.
"உங்களுக்குத் தெரியாதா?" இந்த முறை அகிலா குறுக்கே வந்து அவளைக் கிள்ளினாள்.
"ஏன் நீ தான் சொல்லேன்" அகிலா இந்தப் பிரச்சனையில் வருவதும் வெட்கப்பட்டு நிற்பதும் என்னை இன்னும் குஷியாக்க நான் அவளையும் சேர்த்து வம்பிழுக்க ஜெயஸ்ரீயிடம் கேட்டேன்.
"defloration" பெரிய ஆள் தான் அழகான வார்த்தையைக்க் கொண்டுவந்து திணித்தாள். அகிலா ஜெயஸ்ரீயை முறைக்க நான் மெதுவாய் அகிலாவிடம், "அப்படியா?" என்று கேட்க அப்பொழுது தான் வந்து சேர்ந்திருந்த ஆப்பிள் ஜூஸை என் தலையில் கவிழ்த்துவிட்டு போயேவிட்டாள். இருள் கவிழத் தொடங்கியிருந்த நேரம் ஜீஸ் கடையில் பெரிய கூட்டமில்லை, நான் வழியும் ஜூஸுடன் சிரித்துக் கொண்டிருந்தேன்.
ஜெயஸ்ரீ, "ஆனாலும் இப்படியா கேப்பாங்க. லூஸுங்கிறது சரியாத்தான் இருக்கு!"
---------------------------
நகர்ந்துவிடுவதற்கான எல்லைகள்
இல்லாமல் போன பொழுதொன்றில்
அவளுடனனான முயக்கம்
வற்புறுத்தலுக்கு வெளியே நான்
ஒப்புக்கொள்ளவே முடியாததாயிருக்கிறது
சாத்தியங்களற்றுப்போய் இசைந்தாளென்பதை
சொல்கேளா ஆச்சர்யமளித்த
நினைத்ததும் துளிர்க்கும் ஆண்மை
காமம் தீண்ட மறுத்த
நிர்வாணத்தில் உறங்கும் பெண்மை
அள்ளித் தெளிக்கும் பதிலளிக்க விரும்பாத கேள்விகள்
---------------------------
"கொடுக்கப்படாதெல்லாம் எடுத்துக் கொள்ள முடியாது என்றே நினைக்கிறேன்." என்று நான் அகிலாவிற்கு அவள் காதலின் நீட்சியாய் பார்க்காத காமத்தையும் வலிந்து மறுப்பது போன்றிருக்கும் செயற்கைத்தன்மையையும் விவரித்து கடிதம் எழுதி அனுப்பிய நான்காவது நாள் அவள் அதைப்பற்றி நிறைய யோசித்ததாகவும் தனக்கும் சம்மதம் என்று சொல்லி எனக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருந்தாள்.
நாங்கள் ஊட்டி செல்லத் தீர்மானித்தோம், என் பள்ளி இறுதி வரை அங்கே தான் படித்தேன் என்பதாலும் பெங்களூரில் இருந்து இரண்டு நாள் ஊர் சுற்ற சென்று வருவதற்கான இடங்களில் முக்கியமான ஒன்று என்பதாலும். புதிதாய் வாங்கியிருந்த ஹுண்டாய் கெட்ஸிலேயே சென்று வரலாம் என்ற என் திட்டதற்கு மறுப்பொன்றும் சொல்லவில்லை, அவள் முகத்தில் என் ஓட்டுநர் திறமையைப் பற்றிய சந்தேகம் இருந்தது மட்டும் பிரகாசமாய் தெரிந்தது. அவள் என்னுடன் வெளியில் இதுவரை வந்ததேயில்லை என்ற எண்ணம் என் மனதில் சட்டென்று ஒட்டிக் கொண்டது. திட்டமிட்டது போலவே ஆறுமணிக்கு அல்சூர் பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தாள், பேருந்து நிலையத்தில் இருந்து அவள் வீடு கூப்பிடு தூரம் தான். ஷோல்டர் பேக் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு வந்திருந்தாள், நான் பயந்தது எங்கே சென்று பின் சீட்டில் உட்கார்ந்துவிடுவாளோ என்று தான், நான் எதிர்பார்த்தது போலவே காரை நெருங்கியவள் பின் சீட்டைத் திறந்ததும் நான் கொஞ்சம் போல் அதிர்ந்து தான் போனேன். ஆனால் அவள் தன் பையை மட்டும் அங்கே வைத்துவிட்டு முன் சீட்டில் வந்தமர்ந்தாள், அவள் உதட்டில் புன்னகை அரும்பியிருந்தது.
"ஒரு நிமிஷத்தில் உன் மூஞ்சி என்ன கோணத்துக்கெல்லாம் போகுது, இப்பல்லாம் நீ என்ன நினைக்கிறேன்னு என்னால் சுலபமா கண்டுபிடிக்க முடியுது! தெரியுமா?"
எனக்கு அவள் குஷி மூடில் இருந்ததே மகிழ்ச்சியளித்தது. என்ன தான் அவள் என் ஏற்பாட்டிற்கும் ஆசைக்கும் ஒப்புக் கொண்டிருந்தாலும் அவள் சந்தோஷமாய் இல்லாமல் என்னவோ போல் இருந்தால் மற்ற ப்ளானைத் தள்ளிப் போட்டு விட்டு சும்மா ஊர் மட்டும் சுற்றிவிட்டு வரலாம் என்று நினைத்திருந்தேன். நல்லவேளை அதற்கான அவசியம் இருக்காது போலிருந்தது.
"இப்ப என்ன தெரிஞ்சிக்கிட்ட?"
பெரும்பாலும் இது போன்ற கேள்விகளுக்கு அகிலா பதில் சொல்ல மாட்டாள். நான் அவள் பின்சீட்டில் உட்கார்ந்துவிடுவாளோ என்று பயந்தது அவளுக்குத் தெரிந்திருக்கும்.
"ம்ம்ம் உன் மொகரைக்கட்டை!"
என் மனம் துள்ளிக் குதிக்கத் தொடங்கியது, அவளுக்கும் அது தெரிந்திருக்க வேண்டும். சட்டென்று தலையில் தட்டி,
"ரோட்டைப் பார்த்து வண்டி ஓட்டு! என்னா?" என்றாள்.
அவள் என்னைத் தொட்டுப் பேச மாட்டாள், மூன்றாண்டுகளில் நான் சில முறை தொட்டுப் பேசியிருப்பேன், வெகுசில சமயம் கைகளை பிடித்துக் கொண்டு விளையாடியிருப்பேன். ஆனால் சுவரிலிருந்து நீண்ட இன்னொரு குட்டிச் சுவர் போல் உணர்ச்சியற்றதாய் அவள் கைகள் இருக்கும் அப்பொழுதுகளில். அவள் தலையில் தட்டி சொன்னதன் அர்த்தம் புரிந்ததும் என் கண்கள் தானாய் அவள் மார்பு பக்கம் திரும்பியது. நான் பெரும்பாலும் அப்படிச் செய்வதில்லை, அதுவும் அகிலாவிடத்தில் கொஞ்சம் இதைப்பற்றிய ஜாக்கிரதை உணர்வுடனேயே இருப்பேன். பெரும்பாலும் அட்டிட்டியூட் காண்பிக்கும் பெண்களிடம் கொஞ்சம் சீரியஸாய் வம்பிழுக்க அவர்களுக்குத் தெரியும்படி மார்புகளை வெறிப்பேன் சிறிது நேரம். ஆனால் அகிலாவிடம் அதுவரை செய்ததில்லை, அதாவது அவளுக்கு தெரியும் வகையிலோ அல்லது அவள் உணர்ந்து கொள்ளும் வகையிலோ அவள் மார் பகுதியை நோட்டம் விட்டதில்லை, ஆனால் அவளுக்குத் தெரியாமல் செய்திருக்கிறேன். இப்பொழுது அவளாய்ச் சீண்ட செய்திருந்தேன்.
அகிலா கைகள் நீட்டி நான் லாவகமாக இருக்கட்டும் என்று அணிந்து வந்திருந்த பெர்முடாஸால் மறைக்கப்படாத என் தொடைப் பகுதியில் கிள்ளினாள். அவளுடைய வலது கை விரல்களில் பராமரிக்கப்பட்ட நகங்கள் இருந்ததால், உண்மையிலேயே வலித்தது. நான் "அம்மா" என்று கத்தினேன் தொடர்ச்சியாய்.
"நீ செஞ்சது தப்பு, அப்படிப் பார்ப்பது அநாகரீகமாயிருக்கு! எந்தப் பொண்ணு கிட்டையும் அப்படி நடந்துக்கக்கூடாது" கொஞ்சம் சீரியஸாகவே சொன்னாள்.
"நான் சரிங்க மேடம்" என்று சொன்னதும் சகஜ நிலைக்கு வந்தவள். நான் அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம் கண்களிலிருந்து என் பார்வை மார்பகத்திற்கு நீளத் தொடங்குவதும் பின்னர் நான் பெரு முயற்சி செய்து கட்டுப் படுத்துவதையும் பார்த்து, சப்தமாய் சிரித்தாள்.
"எத்தனை நாளுக்கு இதைச் செய்யப்போற நீ, இன்னும் இரண்டு நாளைக்கு? அப்புறம் 'சீ'ன்னு சொல்லி விடப்போற! எனக்கென்ன?" என்றவாறு மறுபக்கம் பார்க்கத் தொடங்கினாள். எனக்கென்னமோ பார்த்துத் தொலை என்று சொல்லிவிட்டது போலிருந்தது. அவள் எப்பொழுதும் அணியும் கொஞ்சம் தொல தொலா சுகிதார் அல்ல அன்று அவள் அணிந்திருந்தது, ப்ரேசியர் அதன் மேல் டாப்ஸ் ஒன்று அணிந்து மேல் அவள் சுகிதார் அணிவது தான் வழக்கம் இன்றும் அப்படித்தான் என்றாலும் இறுக்கமான சுகிதார் அவள் மார்பகங்களை இன்னும் எடுப்பாய்க் காட்டியது. கல்லூரிக் காலத்தில் இருந்தே பெண்களின் மார்புகளை நோட்டம் விடுவது தான் வேலை என்றாகியிருந்ததால், அகிலாவினுடையவை சராசரிக்கும் குறைவானவை என்று என்னால் நிச்சயமாய்ச் சொல்ல முடியும். சுகிதார் அவள் அளவில் இல்லையென்பதால் தோள்பட்டையில் அவள் பிராவினுடையதும் டாப்ஸினுடையதுமாய் இரண்டு வெவ்வேறு வகையான உப்பல்களுடன் கண்களைத் துருத்துக் கொண்டிருந்தது.
"இந்த சுடி நீ போட்டு நான் பார்த்ததில்லையே! புதுசா?'
சட்டென்று கேட்ட கேள்வியால் திரும்பியவள்,
"என்னைய நீ அவ்வளவு நோட் பண்ணுவியா? ஆமாம் இது என் தங்கச்சியோடது! அவள் தான் கொடுத்தாள் போட்டுக்கோன்னு. ஏன் நல்லாயில்லையா?"
இன்பத்தேன் வந்து காதில் பாய்ந்தது போலிருந்து, அவள் உடுத்தும் உடையைப் பற்றிக் கேட்டால் சொல்ல ஆயிரமாயிரம் உரையாடல்களைத் தயார் செய்து வைத்திருந்தேன், ஒன்றும் உதவவில்லை.
"ச்ச, சூப்பராயிருக்கு. நீதான் என் டைரி படிச்சியே! எனக்கு நீ பண்ணுற ட்ரெஸ்ஸிங்க் சுத்தமா பிடிக்காது. இந்த ட்ரெஸ்ஸில் நீ ரொம்ப அழகாயிருக்க!" என் கண்கள் தானாய் அவள் கண்களில் இருந்து டைவ் அடித்தது. இந்த முறை அவள் ஒன்றும் சொல்லவில்லை, முகத்தை திருப்பிக் கொள்ளவில்லை. ரசித்தாள். அவள் அழகை நான் ரசிப்பதை ரசித்தாள்.
நாங்கள் பெங்களூரை விட்டு வெளியில் வந்திருந்தோம், இனி மைசூர் போய் ப்ரேக் பாஸ்ட் சாப்பிட்டால் போதும் என்று நினைத்தேன். என்றைக்கும் இல்லா அதிசயமாய் ரோடு கொஞ்சம் ட்ராஃபிக்கா இருந்தது அதிகாலையிலேயே. நான் அகிலாவிடம்,
"அகிம்மா உனக்கு தூக்கம் வந்தா தூங்கு என்ன!" என்றேன்
"சரி" என்றவள் தூங்கப்போவதில்லை போலத்தான் இருந்தது, ரொம்ப தீவிரமாய் இரண்டு பக்கங்களையும் வேடிக்கைப் பார்த்தபடி வந்து கொண்டிருந்தாள். நான் எனக்குத் தெரிந்த கடக்கும் ஊரைப்பற்றிய விவரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தேன். அவளும் எதுவும் தெரியவேண்டுமென்றால் கேட்டுக் கொண்டிருந்தாள். நாங்கள் மைசூர் வந்து காலை உணவு முடித்த பிறகு குண்டல்பேட் வழியாக ஊட்டி செல்லும் பாதையை எடுத்தேன். கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டிய சாலையாகையால் விளையாட்டுத்தனங்களை விடுத்து பக்கத்தில் அமர்ந்திருக்கும் தேவதையை மறந்து கவனமாக வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன் அகிலா தூங்கவேயில்லை, அவள் கண் அசந்து கூட நான் பார்க்கவில்லை. ஆனால் எனக்கு கொஞ்சம் டயர்டாக தோன்றத் தொடங்கியது, பெரும்பாலும் நண்பர்களுடன் செல்லும் பொழுது சிறிது நேரம் கழித்து யாரிடமாவது ஸ்டேரிங்கைக் கொடுத்துவிட்டு தூங்கப் போய்விடுவதுண்டு. பெங்களூரில் இருந்து ஊட்டி வரை இதுதான் முதல் முறை தனி ஆளாய் ஓட்டிக் கொண்டிருந்தேன்.
சிறிது நேரத்திற்குப் பிறகு அகிலா என்னைத் தொந்தரவு செய்யவில்லை, நான் சீரியஸாய் ஓட்டிக் கொண்டிருப்பது தெரிந்து அமைதியாகிவிட்டிருந்தாள். நான் கொஞ்சம் போல் டயர்டாகியது தெரியத் தொடங்கியது டீ குடிக்கலாம் என்றாள், அவள் அத்தனை டீ குடிப்பவள் இல்லை என்பதால் எனக்காகத் தான் கேட்கிறாளென்று புரிந்தது. நாங்கள் ஒரு வழியாய் கொண்டை ஊசி வளைவுகளைத் தாண்டி ஊட்டி வந்த பொழுது மதியம் இரண்டாகியிருந்தது, பெங்களூரில் இருந்து கொண்டை ஊசி வளைவு வரை என் டிரைவிங் பற்றி எதுவும் சொல்லாதவள், வளைவொன்றில் ஓரங்கட்டி நிறுத்தி வியூ பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது கேட்டாள், "நல்லா வண்டி ஓட்டுறீங்க! இங்க நிறைய தடவ வந்திருக்கீங்களோ?!"
அவள் கண்களில் சில்மிஷம் இல்லை, ஆனால் நான்,
"வந்திருக்கேன் இதான் முத தடவையா ஒரு பெண்ணோட!" இதற்கு நான் அகிலாவிடம் இருந்து லேசான கோபப்பார்வையை எதிர்பார்க்க அவளோ,
"ம்ம்ம் நம்பிட்டேன்" என்று சிரித்தபடி சொல்லி கலவரப்படுத்தினாள்.
நான் பரிதாபமாய் "அகிலம் நான் பொய் சொல்லலை, உண்மையிலேயே இதான் மொத தடவை ஒரு பொண்ணு கூட ஊட்டி வர்றேன். ஊட்டி மட்டுமில்லை எங்கையுமே என்னை நம்பு".
அவள் கொஞ்சம் இறங்கிவந்து, "ச்ச சும்மா சொன்னேன் தாஸ், உன்னைத் தெரியாதா?" என்று சொல்லி குடலுக்கு பியர் வார்த்தாள்.
"ஹாங் வண்டி ஓட்டுறதைப் பத்தி கேட்டள்ல, நான் இங்கத்தான் வண்டி ஓட்டவே கத்துக்கிட்டேன் அதனால எனக்கு ஹில் ஸ்டேஷன் ஒன்னும் பெரிய விஷயம் கிடையாது!" கொஞ்சம் படம் காட்டியிருந்தேன்.
ஏற்கனவே ரிசர்வ் செய்திருந்த ஹோட்டல் பிருந்தாவனில் ஒரு டபுள் ரூம் கன்ப்ஃர்ம் செய்துவிட்டு ஹோட்டல் அறைக்குள் நுழையும் முன் ஒரு பரீட்சை அறைக்குள் நுழையப் போகும் மாணவனைப் போன்ற பயம் வந்தது, வயிற்றுத் தசைப் பகுதி இறுக்கிப் பிடிக்கப்பட்டது போல் இருந்தது. அதுவரை இருந்த டயர்ட்னஸ் காணாமல் போயிருந்தது, திரும்பி அகிலாவைப் பார்த்தேன் வேறெதையோ பார்ப்பதைப் போல் அவள் முகத்தில் அந்தப் பதற்றம் இல்லை.
அறைக்குள் வந்து தாழிட்ட பொழுது ஏனோ மனசுக்குள் தவறு செய்வது போன்ற ஒரு உணர்வு, கதவுக்குப் பின்னிருந்த குப்பைத் தொட்டியில் அந்த எண்ணத்தைப் போட்டுவிட்டு வந்து கட்டிலில் உட்கார்ந்தேன். அகிலா பாத்ரூம் சென்றுவிட்டு அப்பொழுது தான் வந்தாள், வந்ததும் வராததுமாய் மொத்த அறையையும் நோட்டம் விட ஆரம்பித்தாள். நான் அவளாய் செட்டில் ஆகட்டும் என்று பெட்டில் இருந்த ரிமோட்டை எடுத்து டிவியை துவக்கினேன். சேனல்கள் மாற்றிக் கொண்டிருக்கும் பொழுது இடைப்பட்ட ஈஎஸ்பிஎன் டிவியில் ஆஸ்திரேலியா இந்தியா கிரிக்கெட் மாட்ச் போய்க் கொண்டிருந்தது. சிறிது நேரத்திற்கு நான் அகிலாவை மறந்து மேட்சில் ஆழ்ந்துவிட்டேன்.
"உங்களுக்குப் பிடிச்ச கிரிக்கெட் ப்ளேயர் யார் தாஸ்?" கவனம் கலைந்து பார்க்க அகிலா கட்டிலில் என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள், என்னால் அந்தப் பொழுதை நம்பமுடியவில்லை.
"அகிம்மா, எனக்கு மார்க் வாஹ் தான் பிடிக்கும், நான் ஒரு தீவிர ஆஸ்திரேலிய சப்போர்ட்டர்!"
அவள் அப்படியா என்பதைப் போல் பார்த்தாள், பின்னர் மேட்சில் ஆழ்ந்துவிட்டாள், ஆனால் என்னால் தான் மீண்டும் கிரிக்கெட் பக்கம் கவனத்தை திருப்ப முடியவில்லை. எனக்கும் அவளுக்கும் இடையில் ஒன்றரை அடிதான் வித்தியாசம் இருந்தது. மூன்றாண்டுகளில் இந்த நொடியைப் பற்றி நிறைய கற்பனையை வளர்த்திருந்தேன், திருமணத்திற்கு முன் / பின் என்ற எல்லைகளில் வைத்து விரிந்திருந்த கற்பனை ஒரு முடிவை நோக்கி நகர்த்தவே முடியாததாய் இருந்தது. இந்தப் பொழுதில் அவள் நிராகரித்தாள், அடுத்தக் கணத்தில் அவள் நிராகரித்தாள் என்று மனம் பல்வேறு கணக்குகளை போட்டபடிதான் முடிந்திருக்கிறது. அவளுடைய நிராகரிப்பு என்பது எங்கள் கம்ப்யூட்டர் சைன்ஸ் ப்ளோ சாட்டில் வரும் Endஐப் போல. அவளை வற்புறுத்தும் எண்ணம் துளியும் கிடையாது, இப்பொழுதைக்கு மட்டுமல்ல திருமணத்திற்குப் பிறகும் கூட அப்படியே தொடர வேண்டுமென்றே நினைத்திருந்தேன்.
நான் மெல்ல அவளருகில் நகர்ந்து உட்கார்ந்தேன். அவள் ஒரு நொடி திரும்பி என்னைப் பார்த்தாள், அப்பொழுது அவள் கண்களை என்னால் படிக்க முடியவில்லை. ஒரு வெறுமை மட்டுமே இருந்தது அதிலிருந்து என்னால் எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. பின்னர் டிவி பக்கம் திரும்பிவிட்டாள். நான் அவள் கைகளை அவளிடமிருந்து விடுவித்து என்னிடம் வைத்துக் கொண்டேன். இதற்கு முன் இப்படிச் செய்தது வெகு சில முறைதான் என்றாலும் என்னால் வித்தியாசத்தை உணர முடிந்தது. அவள் கைகள் காய்ச்சல் வந்தவளின் கரங்கள் போல் சூடேறியிருந்தன, என் கைகளின் தொடுதலால் அவள் கையில் இருந்த மயிர்க்கால்கள் சிலிர்த்துக் கொண்டு நின்றன. அவளுக்கு பின்புறம் முதுகை நோக்கி அமர்ந்தவாறு இருந்தாலும் அவள் கண்களை மூடிக் கொண்டதை உணர முடிந்தது. மெதுவாய் அவள் முதுகில் விரல்களை ஓட்டினேன். அவள் கைகள் மரக்கத் தொடங்கியது, அது நான் எதிர்பாராதது அவள் தன்னை கூட்டுக்குள் கொண்டு செல்கிறாள் என்று உணரமுடிந்தது. நானாய் கைகளை எடுத்துவிடவே நினைத்தேன் ஆனால் மறுப்பு அவள் பக்கத்தில் இருந்து வரட்டும் என்று விட்டது என் தவறு தான்.
"தாஸ் இப்பவே இதைச் செய்தாகணுமா?" முடிந்தது, இதற்கு மேல் ஒரு வார்த்தை கூட என்னால் இதைப்பற்றி பேச முடியாது. என் கைகள் தானாய் அவள் முதுகிலலிருந்து அகன்றன, அவள் கைகளை விடுவித்தேன், அந்த மாற்றம் அவளுக்குத் தெரிந்திருக்கவேண்டும், இயலாமையால் என்னைத் திரும்பிப் பார்த்தாள். என்னால் அவளைப் புரிந்து கொள்ள முடிந்தது, அவள் மேல் கொஞ்சம் கோபம் வந்தாலும் அது நான் வண்டி ஓட்டிக் கொண்டு வந்த களைப்பால் வந்ததாகத்தான் இருக்க முடியும், என்னால் அகிலாவை கோபிக்க முடிந்தது கூட ஆச்சர்யமாக இருந்தது. அவள் கண்கள் என்னைக் கெஞ்சின, 'ப்ளீஸ் கல்யாணத்துக்குப் பிறகு இதைச் செய்து கொள்ளேன்' என்று. உண்மையில் எனக்கு அதில் பிரச்சனை இல்லை, நானே கூட என்னைக் காதலிக்கிறாய் என்றால் நாம் வீட்டில் பேசி திருமணம் செய்து கொள்வோம் என்று சொல்ல நினைத்த பொழுது தான் அவள் இதற்கு சம்மதம் தெரிவித்திருந்தாள். ஆண் மனம் கலவிக்கு அலைந்தது. என்னால் அகிலாவை அப்படிப் பார்க்க முடியவில்லை, நான் மெதுவாய் படுக்கையில் சாய்ந்த படி கண்களை மூடினேன் அவ்வளவுதான் தெரியும்.
கண்களைத் திறந்த பொழுது நினைத்துக் கொண்டேன், மன்மதன் தான் எழுப்பியிருக்க வேண்டுமென்று. அகிலா ஒரு டர்க்கி டவல் மட்டும் உடுத்தி என் முன்னால் நின்று கொண்டிருந்தாள், ஹமாம் சோப்பின் மணம் நாசிகளைத் துழைத்தது. அவள் ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் நின்று தலை கோதிக் கொண்டிருந்தாள். நான் எழுந்ததைப் பார்த்ததும் என் பக்கம் திரும்பிச் சிரித்தவள் அசப்பில் பாலு மகேந்திரா படத்து ஹீரோயின்களைப் போலிருந்தாள் அவள் மாநிறம் இல்லை என்றாலும் கூட, அவளுக்குப் பின்னால் இருந்த கண்ணாடியில் தெரிந்த பிம்பமும் அவள் அசலும் சேர்ந்து என்னை நிலை கொள்ள முடியாதபடி ஆக்கின. எனக்கு இவை நிஜத்தில் தான் நடக்கிறது என்று தெரிந்தாலும் வேடிக்கைக்காக கைகளைக் கிள்ளிக் கொண்டேன், அவள் கைகளில் வைத்திருந்த சீப்பை என் மேல் வீசினாள்.
"மணி என்னாகுது தெரியுமா?" எனக்கு அப்பொழுது தான் நான் அதிக நேரம் தூங்கிவிட்டிருந்தது தெரிந்தது, என்னால் இது சனிக்கிழமை இரவா இல்லை ஞாயிற்றுக் கிழமை விடியலா என்ற குழப்பம் இருந்தது. கைகளில் கட்டியிருந்த வாட்சில் மணி பார்க்க ஒன்பதரை காட்டியது. ஜன்னல்களுக்கு வெளியில் வெளிச்சம் இல்லாத காரணத்தால் சனி இரவுதான் என்பது உறுதியாக. கிட்டத்தட்ட ஏழு மணிநேரம் தூங்கியிருக்கிறேன் என்பது தெரிந்தது, தேவதை போல் ஒரு பெண்ணை அருகில் வைத்துக் கொண்டு. அவள் முகத்திலும் அது தெரிந்தது.
"சாரி! நல்லா தூங்கிட்டேன்."
"இப்புடியா தூங்குவாங்க! நான் எப்படா 'இப்ப வாண்டாம்'னு சொல்லுவேன்னு காத்திக்கிட்டிருந்த மாதிரி தூங்கிட்ட நீ! ஏற்கனவே மூணு வருஷம் செய்தது போதாதுன்னு இங்க ஹோட்டலில் வந்து வேற ஏண்டி உயிரை வாங்குறன்னு சொல்ற என் மனசாட்சி கூட தனியா சண்டை போட்டிக்கிட்டிருக்கேன் ஏழு மணி நேரமா! தெரியுமா?"
நான் படுத்திருந்த கட்டில் நிச்சயம் தரையில் இல்லை.
"லஞ்ச் வாங்கிக் கொடுத்தியா நீ, என்ன ஆளுய்யா. இப்படித் தூங்குறவங்களை நான் எழுப்பவே மாட்டேன். நீயாதான் எழுந்துட்ட. எனக்கு பசி தாங்காதுப்பா நான் நல்லா லஞ்ச் ஆர்டர் செய்து சாப்டேன்." கைகளை ஆட்டி ஆட்டி பேசிக் கொண்டிருந்தாள், காதுக்குள் அவள் சொல்வது எல்லாம் மாற்றம் செய்யப்பட்டு இளையராஜா இசையில் வைரமுத்து எழுதிய பாடல் ஒன்று சுசீலாவின் குரலில் சென்று கொண்டிருந்தது. கட்டிலில் குனிந்து அவள் தூக்கி வீசிய சீப்பை எடுக்க முயல, அவள் தலை முடி இரு பக்கங்களில் இருந்தும் முன்பக்கம் சரிந்தது. சரியாய் டவலில் முடிப்பை வலது கைகளில் பிடித்தபடி, இடது கையால் சீப்பை எடுத்து விட்டு அவள் நகர ஒரு பக்கம் சாய்ந்து படுத்திருந்த நான் தொப்பென்று மல்லாக்க மறுபுறம் விழுந்தேன்.
மீண்டும் கண்ணாடி பக்கம் திரும்பியவள் வெள்ளை நிற டவலில் அன்றலர்ந்த மலர் போல் இருந்தாள், மார்பிலிருந்து முழங்கால் வரை வந்திருந்த அந்த டவல், அவளுடைய நிர்வாணத்தை விடவும் அதிக கிளர்ச்சியைத் தந்தது, அவளுடைய பரிமாணங்களை அந்தத் டவல் வேற எதாலும் வெளிப்படுத்தியிருக்க முடியாது என்று நான் நினைத்தேன். அவள் பக்கமிருந்து மெதுவாய் ஒரு வசனம். சாதாரண நாட்களாகயிருந்திருந்தால் நான் அதைக் கேட்டிருப்பதற்கான வாய்ப்பு கூட குறைவு தான்.
"இப்படியேவா! குளிச்சிட்டு வர்றியா?"
அவள் லேசாய் தலையைத் திருப்பி என்னை மோகக் கண்களுடன் பார்த்தாள், நான் நினைத்தேன், இங்கே முடிந்தது என்று. அவளிடம் இருந்து தப்பிக்க நினைத்து எழுந்தவன் அவளைப் பார்த்து புன்னகையொன்றை செய்துவிட்டு பாத்ரூமிற்குள் நுழைந்தேன். இதற்கு மேல் அவளால் மறுக்க முடியாது என்று தெரிந்ததும் மனம் குதியாட்டம் போட்டது, பந்தையத்திற்காக காத்திருக்கும் குதிரையைப் போலிருந்தது மனம். இதயத் துடிப்பு முறுக்கேற்றப்பட்ட ஒரு வலுவான எந்திரத்தின் வேகத்தில் இருந்தது, என் வசத்தில் இல்லை. அவள் உபயோகப்படுத்திவிட்டு வைத்திருந்த சோப்பில் அவள் மனம் வந்தது. எனக்கு இன்னொரு விஷயம் சட்டென்று மனதிற்குள் வந்தது, இந்தத் துடிப்பில் போனால் அவளுடைய நிர்வாணம் என்னை கீழே அழுத்தித் தள்ளிவிடும் என்று நான் எப்பொழுதும் செய்யும், 'அபிராமி அந்தாதி' பாடல்களை மனதிற்குள் வேகமாக நினைக்கத் தொடங்கினேன். சிறுவயதில் மனனம் செய்திருந்ததால், பாடல்கள் நினைவுக்கு வருவதற்கு மனதை அதன் பக்கம் திருப்ப வேண்டும், அந்தாதி என்பதால் ஒரு பாட்டின் முடிவில் இருந்து தொடங்கும் மற்ற பாடல் சாதாரணமாய் நினைவில் இல்லாமல் முடிவில் தான் நினைவில் வரும் என்பதால் மனம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வரும். வந்தது.
நான் பாத்ரூமை விட்டு துவட்டிக் கொண்டு வெளியில் வந்த பொழுது அறையில் நைட் லேம்ப் மட்டும் எரிந்து கொண்டிருந்ததால் அறையில் அத்தனை வெளிச்சமில்லை, என்னை நோக்கி வரவேற்பது போல் காத்திருந்தவள் உடம்பில் துணி எதுவும் இல்லை. என் எதிர்பார்ப்பை அவள் மார்பகங்கள் ஏமாற்றவில்லை.
"Doss I don't want to get pregnant" சொல்லத் தேவையில்லாத விஷயம் என்றாலும் தவறாகி விடக்கூடாதென்ற கவனம் அதைச் சொல்ல வைத்தது. அவள் சட்டென்று ஆங்கிலத்திற்கு மாறியிருந்தாள் நான் நினைத்தேன் அவள் சொல்ல வருவதை அவள் காதுகள் கேட்கபதைக் கூட அவள் விரும்பவில்லை என்று. அந்நிய மொழி அவளுக்கு அந்த விஷயத்தில் உதவுவதாக இருந்தது.
"Don't worry I have condoms" சிரித்தபடியே சொன்னேன். அவளுக்குத் தெரிந்து தான் இருக்க வேண்டும், இந்த அளவிற்காவது நான் தயாராய் இருப்பேன் என்று. படுத்த படியே இரு கைகளையும் நீட்டி என்னை அழைத்தாள், கனவு போல் இருந்தது.
அரை மணிநேரத்தில் இன்னொரு முறை அவளும் குளித்து என்னையும் வற்புறுத்தி குளிக்க வைத்து குளியலறையில் நான் இன்னொரு முறை தொடங்க பொய்க்கோபம் காட்டி தடுத்தவள், 'பசிக்குது தாஸ்' என்று சொல்ல பாவமாய் இருந்தது. சட்டென்று காலையில் இருந்து சாப்பிடாதது எனக்கும் பசியெடுத்தது. சின்னச் சின்ன சிணுங்கல்கள், சீண்டல்களுடன் அவள் உடைமாற்ற அகங்காரமாய் நேரெதிரில் அவளை மட்டும் பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன். அதான் எல்லாம் முடிந்துவிட்டதே என்ன வேண்டுமானாலும் பார்த்துக் கொள் என்று நினைத்தாளாயிருக்கும், நான் இருப்பதை அவள் பொருட்படுத்தவேயில்லை.
அவளிடம் ஆரம்ப விளையாட்டுகளின் பின், உணர்ந்து "you already came is it?" கேட்ட கேள்வி அதன் மொக்கைத்தனத்தைத் தாண்டியும் என் அனுபவமின்மையைக் காட்டியதாக நினைத்தேன். அவள் சட்டென்று அதைக் கேட்க விரும்பாதவளைப் போல இரண்டு கைகாளாலும் அவள் காதுகளை மூடிக்கொள்ள முயற்சித்தது நினைவில் வந்தது. அவளை வெட்கம் தின்று கொண்டிருந்த நேரத்தில் கேட்பதற்கு இதைவிடவும் மோசமான கேள்வியொன்று இருந்திருக்காது என்று நினைத்தேன். சட்டென்று தாவி எழுந்து என்னை இழுத்து அவளோட அணைத்து அதைச் சமாளித்திருந்தாள்.
"என்ன அதுக்குள்ளையே கனவா?" என் தலையைக் கோதியபடி கேட்டவளிடம்,
"இன்னும் ஒரு வாரத்திற்கு உன்னை நேரில் பார்க்கலைன்னா கூட பரவாயில்லை, இந்த நினைவுகளோடு சமாளிச்சிறுவேன்."
ஒரு அடி பின்னகர்ந்தவள், கைகளை இடுப்பில் வைத்தபடி, "அப்ப நான் வேணாமா?" கேட்க, இதற்கு என்ன பதில் சொன்னாலும் ஆபத்து என்று பதில் சொல்லாமல் கையெடுத்து கும்பிட்டு,
"என்ன விட்டுடு தாயி!" என்றேன்.
நாங்கள் மூடப்பட்டுக் கொண்டிருந்த ரெஸ்டாரெண்டிற்கு வந்து உட்கார்ந்ததும் தான் தாமதம், அகிலாவின் மொபைல் சிணிங்கியது. நம்பரைப் பார்த்தவள், வெட்கப்பட்டு சிரித்து,
"தாஸ் அவதான் போன் பண்ணுறா, அவளுக்கு எல்லாம் தெரியும் நான் இப்ப அவகிட்ட பேசினா அவ்வளவுதான். நீங்க வெளியில் போயிருக்கான்னு சொல்லி வைச்சிடுங்க." சொல்லி என்னிடம் திணித்தாள்.
நான் "ஹலோ!" என்று சொல்ல,
மறுபுறம் ஜெயஸ்ரீ, "நான் நினைச்சேன் நீங்கதான் போனை எடுப்பீங்கன்னு குடுங்க அந்த கழுதைகிட்ட."
நான் தீவிரமாய், "அவள் இங்க இல்லை ஜெயா" என்று மழுப்ப ஏண்டா அப்படிச் செய்தோம் என்று ஆகியது.
"சின்னப் பொண்ணு ஒன்னை ஊட்டிக்கு தனியா கூட்டிக்கிட்டு போய்ட்டு இப்ப அங்க இல்லைன்னு வேற சொல்றீங்களா? அவளை ஏமாத்தி எல்லாம் முடிச்சாச்சா?" எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நான் அப்படிப்பட்ட கேள்விகளுக்கான பதிலுடன் இல்லை.
வேதனையுடன் அகிலாவிடம் போனைத் தந்தேன். அவள் நேரடியாய் "ஏண்டி பாவம் அவனை வம்பிழுக்கிற, பச்சை புள்ள மூஞ்சி எப்படிச் சுண்டிப் போச்சு பாரு" என்று ஆரம்பித்தாள்.
"ஆமாம்!" "ஒரு தடவை தான்" "ம்ம்ம்" "ம்ம்ம்னு சொல்றேன்ல" "தாஸ்கிட்டையே கேளேன்" என்று சொல்லி மீண்டும் என் கையில் திணித்தாள். நான் ஏற்கனவே நடுங்கிக் கொண்டிருந்தேன்.
"இங்கப் பாருங்க, அவளை சரி செஞ்சி இதெல்லாம் உலகமகா தப்பில்லைன்னு சொல்லி உங்கக்கூட ஊட்டிக்கு அனுப்பி வைச்சதே நான் தான். கழட்டி விடணும்னு நினைச்சீங்க அவ்வளவுதான். பார்த்துக்கோங்க. பூனை இனிமேல் சும்மாயிருக்காது பண்டத்தை கண்காணிக்க என்னால் முடியாது, மரியாதையா பெங்களூர் வந்ததும் உங்க வீட்டில் பேசுறீங்க. என்ன?"
நான் வெறுமனே "ம்ம்ம்." என்றேன்.
"இந்தக் குரங்கு மூஞ்சியைப் பார்க்க நான் அங்க இல்லாமப் போய்ட்டேனே!" அவள் சொன்னதும் தாமதம்.
"நான் தான் உங்க அக்காகிட்ட உன்னையும் கூட்டிக் கிட்டு வான்னு சொன்னேனே! அவதான் என்னமோ உங்க ரெண்டு பேத்தையும் வைச்சிக்கிட்டு நான் த்ரீஸம் பண்ணப்போறேன்னு பயந்து கூட்டிக்கிட்டு வரலை!" உளறிக்கொட்டியிருந்தேன்.
அகிலா நான் இந்த முனையில் சொன்னதைக் கேட்டு என்னை ஆச்சர்யமாய்ப் பார்த்தாள், நான் சொன்னது எனக்கு விளங்கியதும் எனக்கு நானே தலையில் அடித்துக் கொண்டேன்.
ஜெயஸ்ரீ, "அக்காகிட்ட போனைக் கொடுங்க..." நான் அகிலாவிடம் கொடுத்தேன்.
இவள் போனை வாங்கியதில் இருந்து கலகலவென்று சிரித்துக் கொண்டிருந்தாள், எனக்குப் புரியவேயில்லை. நான் மௌன மொழியில் தோப்புக் கரணம் போட்டுக் காட்டினேன். அகிலா கண்டுகொள்ளவில்லை, சிறிது நேரத்தில் போனை அணைத்தவள். நான் அப்படி ஒன்று சொன்னதாய்க் காட்டிக் கொள்ளவேயில்லை.
"சாரி ஏதோ உளறிட்டேன்!" மன்னிப்பு கேட்கும் தொணியில் சொன்னேன்.
அவள் சப்தமாய் சிரித்தபடி, "இதோட ஜெயஸ்ரீ மேல இருக்கிற ஆசையை விட்டுடுங்க" என்று சொல்ல நான் உண்மையிலேயே வேதனையில் நொந்து போயிருந்தேன்.
"அகிம்மா சாரி I didn't mean it. மன்னிச்சிக்கோம்மா" சொல்ல அவள்,
"ச்ச தாஸ், என்னைய விட ஜெயஸ்ரீக்குத்தான் உங்க மேல மதிப்பு அதிகம். நான் இன்னிக்கு உங்கக்கூட இருக்கேன்னா அதுக்கு 90% காரணம் அவதான். என்னை விட அவதான் உங்களை நம்புறா! இதைவிட நல்ல மாப்பிள்ளை உனக்கு கிடைக்க மாட்டான்னு கூட சொன்னா. உங்களை அவ தப்பா நினைக்க மாட்டா! நானும் நினைக்கலை கவலைப்படாதீங்க."
போன உயிர் திரும்ப வந்தது.
இது காதலாய் யாசிக்கிறேன்னின் தொடர்ச்சி.
மலரினும் மெல்லிய காமம்
Wednesday, April 22, 2009 | Labels: கவிதை, காமம் | 5 Comments
காதலாய் யாசிக்கிறேன்
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.
புணர்ச்சிமகிழ்தல் - காமத்துப்பால் - திருவள்ளுவர்
சட்டென்று விழுந்துவிடும் வார்த்தை வெளிப்பட்டுவிடக்கூடாதென்பதற்காக கட்டப்பட்டிருக்கும் அதற்கான கயிற்றிலிருந்து எப்படி அறுபட்டுக்கொண்டு வந்துவிடுகிறது என்று ஆச்சர்யமாகயிருந்தது. வார்த்தைகளுக்கு உயிர் இருந்துவிட்டால் சாதாரணமாய் நிகழக்கூடிய ஒன்றுதான் என்றாலும் தவறி விழுந்துவிட்டதாய் பிரயாசைப்பட்டு நிரூபிக்கத்துடிக்கும் மனதிற்கு வார்த்தையின் கட்டை லேசாய் அவிழ்த்துவிட்டிருந்தது தெரிந்தே இருக்கிறது. ஆனால் அது ஒரு அபூர்வமான காரியம், எல்லா சமயங்களிலும் மனதிற்கு சுயத்தை இழக்கும் சக்தி வந்துவிடுவதில்லை அதிலும் விழப்போகும் வார்த்தை தோல்வியை மட்டுமே கொடுக்கும் என்று நிச்சயமாய்த் தெரிந்த பின்னரும் கட்டவிழுத்துவிட மனதிற்கு முடிவதில்லை. எல்லாவற்றையும் மீறிக்கொண்டு வெளிப்படுவதால் தான் விழுந்துவிட்ட அந்த வார்த்தை எதிராளியை சீண்டி துன்புறுத்துகிறது என்று நினைத்தேன். விழுவதற்குத்தான் நேரம் காலம் அமைய வேண்டியிருக்கிறதே தவிர உருவாவதற்கு இல்லை, சட்டென்று உருவாகும் எண்ணம் வெகு சுலபமாய் தனக்கான வார்த்தைகளை சேகரித்துக் கொண்டு மனதில் கருக்கொள்கிறது பின்னர் காலம் வார்த்தைகளின் வெவ்வேறான சேர்க்கைகளில் கூடி உச்சமடைந்து தனக்கான சொற்றொடரை உருவாக்கிவிட்டு அமைதியாகிவிடுகிறது, மனம் வார்த்தைகளைக் கட்டியிருக்கும் கயிற்றை மெல்லியதாய் அவிழ்க்க ஒற்றை வார்த்தையிலோ, வார்த்தைச் சேர்க்கையிலோ உருவான எண்ணத்தை கொட்டிக் கவிழ்த்துவிட்டு அடங்கிப் போய்விடுகிறது.
"உனக்கு என்னை விட என் உடம்பு மேல தான காதல் அதிகம்?"
உரையாடல்கள், காதலின் உன்னதமான போதை. காதலிக்கத் தொடங்கிய பின் மனம் உரையாடல்களாகத் தான் சிந்திக்கத் தொடங்குகிறது. நடந்து முடிந்ததாய், கொண்டிருப்பதாய், போவதாய் உரையாடல்களின் நிஜம், நிகழ், கனவிலேயே காதல் தன்னை வளர்த்துக் கொள்கிறது. நேற்றைய உரையாடல்களின் மீது படுத்துக் கொண்டு நாளைய உரையாடல்களைக் கற்பனை செய்கிறது மனம், தொடர்ச்சியாய் கற்பனையில் உருப்போட்டுக் கொண்டேயிருப்பதால் உரையாடல்களில் புதிதான விஷயம் உண்மையில் நடப்பதில்லை. நேரடியான கருத்தாய் இல்லாமல் தான் உருவாக்க நினைக்கும், விவாதிக்க நினைக்கும் விஷயத்தை உரையாடலில் செம்புலப்பெயல்நீராய் கலக்கிறது மனம். அகிலாவுடனான உரையாடலில் அந்தக் கேள்வி வரவேண்டும் வரும் என்பதற்கான எல்லா முன்னேற்பாடுகளுடனும் சென்றாலும், கேள்வி, உண்மையின் வீரியத்தில் நடிப்பின் சாகத்தை நகர்த்திப் பார்க்கிறது.
"ஆமாம்"
------------------------------------------------------------------------------
March 1, 2008
2:34 PM me: இன்னிக்கு பீச்சிற்குப் போலாமா?
aeswari: ம்ஹூம் வேண்டாம்
me: ஏன்?
2:36 PM ஏன்னு கேட்டேன்?
2:45 PM உனக்கு என்னையெல்லாம் காதலிக்கிறதே பெரிசின்னு நினைப்பு
இல்லையா?
aeswari: உன்னைக் காதலிக்கிறேன்னு எப்ப சொன்னேன்!
நீதான் அப்படி சொல்லிக்கிட்டிருக்கிற
2:50 PM r u thr?
2:52 PM ???
2:56 PM Okay I am leaving bye
காதல் உயிரை அலைக்கழிக்கும் ரகசியம் தெரிந்தும் திரும்பவும் விழுவதும் எழுவதுமாய் எத்தனையோ முறை பெண்களின் மீதான மையலில் நிலை தடுமாறியிருந்தால் பித்தம் கொள்ள வைத்தது நீ மட்டும் தான். ஒற்றை ரோஜாப்பூவை கைகளில் ஏந்திக் கொள்வதில் வரும் பெருமையாய் நினைத்து காதல் விளையாடிருக்கிறேன், பெருமைக்கான தகுதியை பெற்றுத்தருவது காதலின் வேலையில்லை என்று உணரவைத்தவள் நீ. கைகோர்த்து கடற்கரையில் நடப்பதோ, முதுகோடு மார் உரசும் பயணங்களோ காதல் இல்லை என்ற உன் தத்துவங்கள் கேட்கும் பொழுதும், நீ அருகில் இல்லாமல் இருக்கும் பொழுதும் நன்றாகத்தான் இருக்கின்றன. உள்ளத்தின் மேல் மட்டும் காதல் என்பது கட்டமைக்கப்பட்ட பொய்யாகத்தான் இருக்கமுடியும் என்று ஒப்புக்கொள்ளும் உன்னால், உன் உடல் மேல் எனக்கிருப்பது காமம் அல்ல அதுவும் காதலே என்று ஏன் புரியவில்லை.
March 3, 2008
4.11 PM raja: hi
me: hi dude :)
raja: நான் அகிலம்
4:13 PM me: சொல்லு
raja: call me
me: சரி
“சொல்லு என்ன விஷயம்”
எங்களுக்கிடையில் அப்படியொரு உரையாடல் நடக்கவேயில்லாதது போல் அவளால் பேசமுடிந்திருந்தது, “என் தங்கச்சிக்கு புனேல ஒரு இன்டர்வியூ இருக்கு! யாராவது கூட்டிக்கிட்டுப்போகணும்”
“ஏன் சுத்தி வளைக்குற நேரா என்னைக் கூட்டிக்கிட்டு போகச்சொல்லேன்”
கனத்த மௌனம் ஒற்றை வார்த்தையில் முடிந்தது “சரி” தொலைபேசியை அணைத்தேன்.
March 12, 2008
10:15 AM aeswari: thanks
me: சரி
11:36 AM aeswari: un status message kEvalamaa irukku!
me: அப்படியா?
aeswari: illaiyaa
me: மாத்தணுங்கிறியா?
aeswari: athu un ishtam
11.40 AM me: //நெஞ்சமெல்லாம் காதல் - தேகம் எல்லாம் காமம்
- உண்மை சொன்னால் என்னை - நேசிப்பாயா//
இது எப்படியிருக்கு?
11.45 AM me: இருக்கியா?
aeswari: hmm
innikku freeya irukkiyaa?
me: இருக்கேன் என்ன விஷயம்
aeswari: oru vishayam pesanum
me: வரவா?
aeswari: hmm
4.30 PM me: கிளம்பிக்கிட்டிருக்கேன்
4.32 PM aeswari: hmm
உன்னைவிட்டு இரண்டடி விலகியிருக்கும் சமயங்களில் ‘ஏன் நடிக்கிற இயல்பாய் இரேன்!’ என்றாய் இயல்பை இயல்பாய் இருக்கமுடியாமல் தான் விலகியிருந்தேன் என்பது உனக்குத் தெரியாததா! வேண்டுமென்றே சாலையோர சுடிதாரை கவனிக்கும் உச்சுக்கொட்டும் ஜொள்ளுவடிக்கும் என் சீண்டல்களைப் பொருட்படுத்தாமல் விலகியிருக்க முடிந்திருக்கிறது உன்னால், கவனிக்காதது போலவே கண்டுகொள்ளாதது போலவோ இருந்துவிடும் உனக்கு நான் முந்தைய இரவு ஒத்திகை பார்த்த உரையாடல்கள் கனவோடு கரைந்து போவது தெரிந்திருக்கப் போவதில்லை.
“முத தடவை நான் உன்கிட்ட காதல் சொன்னப்ப எப்படியிருந்தது”
எங்களுக்கிடையில் அமர்ந்திருந்த மௌனத்தை விரட்டும் ஆயுதமாய் கேள்வியொன்றைப் பொறுத்தி எய்த அம்பு அவளை அவ்வளவு சீண்டியதாகத் தெரியவில்லை. என் கேள்விக்கான அவள் பதிலைப் பற்றிய கற்பனைகளைச் சிதைத்து இந்தக் கேள்வியை நான் கேட்டிருக்கவே கூடாது என்று நினைக்க வைக்கும் அளவிற்கு பதில் இருந்தது.
“கோபமா வந்ததுச்சு, கால்ல போட்டிருக்கிறதைக் கழட்டி ஒன்னு வைக்கணும்னு நினைச்சேன்”
இதைச் சொல்லத்தான் அத்தனை யோசித்தாயா? இல்லை இப்படி நீ போடும் நாடகங்களை நான் நம்பிவிடுவதாய் நினைக்கிறாயா?
“அப்ப நீ என்னைக் காதலிக்கவே இல்லேங்கிறியா?”
எனக்காக இல்லாவிட்டாலும் அவள் தங்கையை பத்திரமாய் புனே அழைத்துச் சென்று வந்ததால் நன்றிக்கடனாய் கடற்கரையில் என் அருகில் அமர்ந்திருந்தாள். அருகில் என்றால் நானாய் உருவாக்கிய இரண்டடி தாண்டி சுண்டல்காரன் இடைபுகுந்து கூவிச் செல்லும் தொலைவில்.
“இல்லை”
“அப்ப நமக்குள்ள இப்ப நடக்கிறது”
இதற்கு அவளுடன் சாட்டிங்கில் உரையாடிவிடலாம் என்று நினைக்கும் அளவிற்கு மௌனம் அவள் மேல் பரவியிருந்தது. வார்த்தைகளைக் கோர்த்துக் கொண்டிருக்கலாம், கொட்டுவதற்கான அமிலத்தை அவளது உதடுகள் உருவாக்கிக் கொண்டிருக்கலாம், அங்கிருந்து விலகினால் வீட்டிற்குச் செல்ல எந்த பேருந்தை பிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கலாம்...
“நீ கன்ஸிடரேஷனில் இருக்கேங்கிறது தான் அதுக்கு அர்த்தம்.” அவள் அன்று வேதாளத்தை மட்டுமல்ல தன்னுடைய தேவதையையும் கடற்கரைக்கு அழைத்து வந்திருக்க வேண்டும். நான் வேதாளத்தை கழட்டிவிடவில்லையே?
“இன்னும் எத்தனை பேர் இருக்காங்க உன் கன்ஸிடரேஷனில்...?” தேவையில்லாததுதான், தவிர்த்திருக்கக் கூடியது தான், ஆனால் எங்கள் உறவில் முகமூடி ஒன்று என் முகத்தில் மாட்டப்பட்டு விடக்கூடாதென்பதில் நான் மிகவும் தெளிவாகயிருந்தேன். அவளை அத்தனை பாதிக்கவில்லை என் கேள்வி,
“நீ டைரி எழுதுவதானே?”
பேச்சை மாற்ற விரும்பினாளா தெரியாது, என் கேள்வி அவளுக்கு அயர்ச்சியைக் கொடுத்திருக்க வேண்டும் என்று ஊகித்தேன்.
“சாரி!”
“அது பரவாயில்லை சொல்லு...?”
“ஏன் கேக்குற?” என் பதில் கேள்விக்கு அவள் பதில் சொல்லப்போவதில்லை என்பதாய் அவள், நான் அவளிடம் கேள்வியொன்றையே கேட்காதது போல் உட்கார்ந்திருந்தாள். “எழுதுவேன்”
“எனக்கு உன் டைரி வேணும். எல்லா வருஷ டைரியும் இருந்தா கொடு இல்லாட்டி கடைசி மூணு வருஷ டைரி வேணும்.”
என்ன தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறாய், என்னிடம் நேரடியாய் கிடைக்காமல் அப்படியென்ன உனக்கு என் டைரியில் கிடைத்துவிடப் போகிறது.
“எதுக்கு?”
“உன்னைக் காதலிக்க” அத்தனை இனிப்பான ஒன்றை இத்தனை கசப்புணர்ச்சியுடன் சொல்ல எங்கே படித்தாய், I love you இந்த மூன்று வார்த்தைகளில் என்ன இருக்கிறது என்று எத்தனையோ நாள் நினைத்திருக்கிறேன் ஆனால் இன்று உன்னைவிடவும் உன் வாய் உச்சரிக்கப்போகும் அந்த மூன்று வார்த்தைகளுக்கும் உன் கை தட்டப்போகும் அந்த மூன்று வார்த்தைகளுக்குத் தான் மதிப்பு அதிகமாய் இருக்கிறது என்பது எனக்கே கூட கொஞ்சம் ஆச்சர்யம் தான்.
10.10.2007
அகிலாவை வழியில் வைத்துப் பார்த்தேன், நல்லவேளை திருப்பிக்கொண்டு போகாமல் நின்று பேசினாள் ஹாஹா.
அவளும் அவளோட ட்ரெஸ்ஸிங் சென்ஸும் லூஸா ஒரு சுடிதார் போட்டுக்கொண்டால் அவள் உடலைப்பற்றிய உணர்வில்லாமல் போய்விடுமா?
சுடிதாரைத்தாண்டியும் அவள் உடலை உணர்ந்து கொண்டிருந்தேன், டைட் ஜீன்ஸும் டீஷர்ட்டும் அவளுக்கு எவ்வளவு பொறுத்தமாக இருக்கும் என்ற கற்பனையுடன். ஹாஹா.
March 15, 2008 மாலை என் அலுவலக கஃப்டேரியாவில்
“என்ன இது” முகத்தில் வீசியெறிந்த டைரி பக்கத்தை இன்னொருமுறை படித்துப் பார்த்துவிட்டு.
“ஒட்டுமொத்த டைரியில் உனக்கு இதுதான் தெரிஞ்சிதா?” மெல்லக் கேட்டேன்.
மௌனம், பேரர் கொண்டு வந்து வைத்த ஜூஸ் முழுவதையும் நான் குடித்து முடிக்கும் வரை மௌனம். அவளுடைய வார்த்தைகளை விட மௌனம் என்னை அலைக்கழிக்கக்கூடியது அவளுக்கும் அது தெரிந்து தானிருக்கும்.
“எனக்கு பயமாய் இருக்கு, என் உடம்பு மேல இருக்கிற க்ரேஸ் போனதுக்கு அப்புறம் நீ என்ன செய்வேன்னு நினைச்சா... இன்னிக்கு என் மேல் இருக்கிற க்ரேஸ் எல்லாம் நான் மறைச்சு வைச்சிருக்கிறதால - அப்படி நீ நினைக்கிறதால - நானும் மத்த பொண்ணுங்க மாதிரி ஹாய் பாய்னு பழகியிருந்தா என்கிட்டயும் ‘மையல்’ தான் இருந்துச்சு ‘பித்தம்’ இல்லன்னு நீ போய்டுவ வேற ஒருத்திய பார்த்துக்கிட்டு இல்லையா?”
ஒரு ஸ்டேட்டஸ் மெஸேஜ் இத்தனை பாடுபடுத்தும் என்று நான் நினைத்திருக்கவில்லை அவளுடைய மௌனத்தை நான் எடுத்துக் கொண்டேன்,
“என் உடம்பு மேல உனக்கு இப்ப இருக்கிற க்ரேஸை என்னால் வாழ்நாள் முழுக்க காப்பாத்திக்க முடியாது. அது யாராலையும் முடியும்னு நினைக்கலை.” எத்தனை நாட்களாய் இந்த விஷயத்தை மனதில் போட்டுக் கொண்டிருக்கிறாள் என்று தெரியவில்லை.
“என் தங்கச்சி கூடயிருந்தப்பையும் நீ இப்படித்தானே நினைச்சிருப்ப?”
“அகிலா இது ஓவர், நீ பேசுறது அநாகரிகமாயிருக்கு.”
“ஆமாவா இல்லையா சொல்லு?”
“இல்லை, இப்ப என்ன தான்டி உன் பிரச்சனை, டைரியிலேர்ந்து ஒரு பக்கத்தை கிழிச்சிட்டு வந்து ஏன் என்னை டார்ச்சர் பண்ணுற. மீதி பக்கமெல்லாம் உன் மனசைப் பத்தி கவலைப்பட்டிருக்கேங்கிறதாலையா? இல்லை இந்த ஒரு பக்கத்தை கிழிச்சிட்டு என்னால் டைரியை உன்கிட்ட கொடுத்திருக்க முடியாதுன்னு நினைக்கிறியா?” நாங்கள் இருப்பது காஃபிடேரியா என்ற உணர்வில் மெதுவாய்க் கத்தினேன்.
“உனக்கு என்னை விட என் உடம்பு மேல தான காதல் அதிகம்?” வைரமுத்துவின் வரிகளை உணரும் பொழுது இருந்த துள்ளல் இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் பொழுது இல்லை.
“ஆமாம்” நான் சொல்லி முடித்திருக்கவில்லை அதுவரை குடிக்கப்படாமல் இருந்த அவள் பக்கத்து ஜூஸ் முழுவதும் என்மேல் ஊற்றிவிட்டு அங்கிருந்து போய்விட்டாள்.
------------------------------------------------------------------------------
இந்தப் பதிலை நான் சொல்லியிருப்பதற்கான காரணங்கள் உண்மையில் கண்டுபிடிக்கப்பட முடியாததாய் இருந்தது. ஆயிரம் முறை அரங்கேற்றிப் பார்த்த வார்த்தைகள் காணாமல் போயிருந்த சமயம் எங்கிருந்தோ இந்த வார்த்தை அதன் உண்மைக்கான உறுதியில் கட்டவிழ்க்கப்பட்ட குதிரையாய் தடைகளைத்தாண்டி கடைசியில் வென்று நின்ற பொழுது விழுந்த அந்தச் சொல் தரும் அர்த்தம் விளங்கிக் கொள்ள முடிந்தது. வெறும் உண்மை ஒப்பனையில்லாத நடிகையைப் போல நம்பமுடியாததாயும் ஒப்புக்கொள்ள முடியாததாயும் இருக்கும். மேலே இரண்டு வார்த்தைகள் கீழே இரண்டு வார்த்தைகள் நடுவில் கொஞ்சம் பொய் கலந்து வந்திருந்தால் அந்த 'ஆமாம்' எனக்கு நல்லதொரு பொழுதை பரிசளித்திருக்களாம். ஆனால் மொட்டையாக வந்து குதித்த உண்மை, அதற்கான வீர்யத்துடன் வெளிப்பட்டு அகிலாவை சட்டென்று சீண்டியிருந்தது. வார்த்தையின் அர்த்தத்தை விடவும் அது சொல்லப்பட்டுவிட்டது தான் அகிலாவிற்கு கோபத்தை வரவழைத்திருக்கவேண்டும் என்று நினைத்தேன். மூன்று வருட பழக்கத்தில் முகமூடிகளுக்கான தேவை அருகியிருந்தாலும் வார்த்தைகளுக்கான முகமூடி நிராகரிக்க முடியாததாய் இருந்தது.அவளுக்கும் அது ஆச்சர்யமானதாகத்தான் இருந்திருக்க முடியும் எல்லைகளுக்குள்ளான வார்த்தைச் சீண்டல்களை நான் புறக்கணித்தது, கணித் திரையில் காண்பதற்கும் நேரில் கேட்பதற்குமான வித்தியாசம் தான் என் மீது ஜூஸாகக் கவிழ்ந்திருந்தது என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
அவள் கரம் பிடித்து காற்றாடியதில்லை
போட்டியொன்றின் பூரணமாய் முத்தம் பரிமாறியதில்லை
உருவாக்கிக் கலைக்கும் பிம்பம் கடந்து வேறு பேசியதில்லை
ஆனாலும் நாங்கள் காதலித்தோம்
முகமூடிகள் இளகின நாளொன்றில்
காமம் சொல்லியதால் மீண்டும் காதல் யாசிக்கிறேன்
காமம் மறந்த / மறைத்த காதல்
தரமுடியாத சோகம் அவள்
கொட்டிக்கவிழ்த்து வைத்த 'ஜூஸ் டம்ளரில்'
பிரதிபலிக்கிறது
யாசித்தலின் குரூரம் இல்லாமையை
உரத்துச் சொல்ல மூக்கின் வழி
ஒழுகும் 'ஜூஸின்' துளியை
இருத்தலியத்தை ருசித்தபடி
சுவைத்துப் பார்க்கிறேன்.
உரையாடலின் ஒரு பக்கம் மற்றொரு பக்கத்தை நேரில் பார்த்துக் கொண்டிருக்காத பொழுது கிடைக்கும் தருணம் அவகாசம் மற்றதில் இல்லையாகையால் அவளால் முடிந்த எதிர்ப்பு.
அவள் நகர்ந்து சென்ற நிமிடத்தில் என்னைச் சுற்றி நின்றவர்கள் பார்த்தப் பார்வையில் நான் மிதக்கத் தொடங்கினேன், காதல் எப்பொழுதும் தரையிறங்க அனுமதிப்பதில்லை என்றாலும் எங்களுடையது இன்னமும் காதலாக பரிணாமம் அடையாமல் குரங்கிலேயே நின்று கொண்டிருந்தது. பொது இடங்களில் தனக்காய் கட்டமைத்துக் கொண்ட எல்லைகளுடன் அவள், தனி இடங்களில் எங்கள் சந்திப்பு நடந்ததேயில்லை, அவளுக்காய் இல்லாவிட்டாலும் என் கொள்கைகளுக்காய் அவள் கட்டமைத்துக் கொண்டிருந்த எல்லைக்கு வெளியில் இருந்தே சண்டை செய்து வந்த நான். என் சீண்டல்கள் இணையத்தில் எல்லை மீறத் தொடங்கியிருந்ததும் அப்பொழுது தான், சுவருடன் பேசவும் உரையாடவும் கிண்டல் செய்யவும் எல்லை மீறவும் நான் இன்னமும் கற்றுக் கொள்ளாததால் ஒரு பக்கம் மட்டும் வேகமாக வீசி வீசி சோர்வடைந்த பொழுதுகளில் இது நிச்சயமாய் வேறானது. சுவரொன்று ஆப்பிள் ஜூஸை தலையில் கவிழ்ப்பது, உணர்ச்சிகளற்ற சுவரு என்பது கூட தவறான உவமை தான், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தத் தெரிந்த சுவர். தன் சுவற்றில் இருந்து வெளிப்பட்டு அவள் சுயம் எட்டிப்பார்த்த பொழுது அது, என் வெற்றியைக் கொண்டாட இன்னொரு ஆப்பிள் ஜூஸ் கேட்க தலையில் அடித்துக் கொண்டு நகர்ந்தான் ஹோட்டல் சிப்பந்திக்கு என் சந்தோஷம் புரிந்திருக்க நியாயமில்லை தான்.
நாங்கள் ஒரே அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்ததில் இருந்து ஏற்பட்ட பழக்கம் காதலாகி நான் காதல் சொல்ல ஏற்கவும் மறுக்கவும் இல்லாமல் போய்க் கொண்டிருந்த முதல் வருடத்திலேயே அவளைப் பற்றிய என் புரிதல்களுக்கு கை கால் முளைக்கத் தொடங்கியிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கான அவள் பதில் அறிவு சம்மந்தப்பட்டதாக இல்லாமல் மனது சம்மந்தப்பட்டதாகத்தான் இருந்திருக்க வேண்டும் அவள் என்னை ஏமாற்றவில்லை. தான் செய்யப்போவது என்னவென்று அவள் அறிந்திருந்தாள் நிச்சயம் அதைச் செய்திருக்க மாட்டாள் தான், கோபத்தை வெளிப்படுத்துவது தோல்விக்குச் சமானம் தான் எப்பொழுதுமே! அவளுக்கும் அது தெரிந்துதானிருந்தது. அந்தச் சீண்டலை அவள் கண்டு கொள்ளாமல் போயிருந்தால் நான் தோற்றுத்தான் போயிருப்பேன், பெரும்பாலும் அது அப்படித்தான் நடக்கும். அன்று அவளை வென்று விட்டதாக நான் நினைத்ததற்கும் அதுதான் காரணம். இன்னமுமே கூட அவள் என் மீது ஆப்பிள் ஜூஸ் ஊற்றியது எனக்கு உதவும் என்றே நினைத்தேன்.
அன்றிரவு அவளிடம் இருந்து செல்லிடைபேசியில் அழைப்பு வந்தது, நான் காலையில் இருந்து அதை அணைத்து வைத்திருந்தது அப்பொழுது தான் நினைவிற்கு வந்தது.
"ஒரு வார்த்தை பேசினீங்கன்னா போனை வைச்சிடுவேன்."
நான் பதில் சொல்லவில்லை.
------------------------------------------------------------------------------
"சொல்லுங்க சார்! ஞாயித்துக் கிழமை எங்கப் போயிருந்தீங்க?"
அகிலா கம்பெனி நம்பருக்கே கால் செய்திருந்தாள்.
"ஆசிப் அண்ணாச்சி வீட்டுக் கல்யாணத்துக் போயிருந்தேன் என்னயிப்ப?"
"உங்க டப்பா மொபைல் போன் எங்க சார்?"
"இன்னும் காசு கட்டலை அதனால வொர்க் ஆகலை".
"ஏன் சார் ஒரு வார்த்தை அதைச் சொல்லிட்டுப் போறதுக்கென்ன? உங்கக்காகிட்ட என் ப்ரண்டொருத்தனை வைச்சி பேசி விஷயம் வாங்கினேன். தெரியுமா?"
நான் மௌனமாயிருந்தேன்.
"பதில் சொல்லுங்க சார்." கத்தினாள் மறுமுனையில்
"ஏண்டி உயிரை வாங்குற, உங்கிட்ட சொன்ன ஞாபகமாயிருந்துச்சு அதான்."
கேட்டவள் சிரித்தாள்.
"ஏண்டி சிரிக்கிற!"
அவள் அவசரப்படாமல் மெதுவாய்ச் சிரித்துமுடித்துவிட்டு "உங்கக்கிட்ட 'ஒரு வார்த்தை பேசினீங்கன்னா போனை வைச்சிடுவேன்'ன்னு சொல்லி போன் பேசி ஒரு ஆறு ஏழு மாசமிருக்குமான்னு நினைச்சேன் சிரிப்பு வந்திடுச்சி."
எனக்கும் கொஞ்சம் சிரிப்பாய்த் தான் இருந்தது, நாங்கள் அந்த உரையாடலுக்குப் பிறகு அடித்த லூட்டி. நான் சிரித்தால் அதையே காரணமாய்க் காட்டி இன்னமும் வம்பிழுப்பாள் என்பதால் வெறுமனே "ம்ம்ம்" என்றேன். ஆனால் மனதிற்குள் அவள் பேசியது அப்படியே ஓடியது.
"என்னைய ரொம்பக் கஷ்டப்படுத்துறீங்க மோகன், காலையில் அப்படி நடந்துக்கிட்டது என் தப்பு தான், Sorry. என்கிட்டேர்ந்து நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்கன்னு தெரியலை, மனசு விட்டுப் பேசணும்னா? மனசுக்குள்ளே இருக்கிறதை எல்லாம் வெளிய கொட்டிடணும்னா என்னால அது முடியும்னு தோணலை. உங்களை காதலிக்கலைன்னு சொல்லலை அதே மாதிரி காதலிக்கிறேன்னும் சொல்ல முடியலை சொல்லப்போனா காதல்னா என்னான்னே ஒரே குழப்பமாயிருக்கு ஒவ்வொரு தடவையும் நம்மளைப்பத்தி நினைக்கிறப்ப.
நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்காம விட்டுட்டுப் போய்டுவீங்கன்னு நான் பயப்படலைன்னு சொல்ல முடியாது, அந்த பயம் எனக்கு இருக்கத்தான் செய்யுது. போனா இத்தோட போகட்டுமேன்னு தான் நான் இப்படியிருக்கிறதா கூட சிலசமயம் நினைச்சிருக்கேன், போய்ட்டீங்கன்னா அப்படியே துடைச்செறிஞ்சிட்டு போய்ட முடியும்னு இப்ப தோணலைன்னாலும் இது தேவலைன்னு நினைக்கத்தோணுது. இந்த பயம் போகாம என்னால காதலிக்க முடியாதுன்னே நினைக்கிறேன், ஆனால் விட்டுட்டுப் போய்டுவீங்கன்னு நினைக்கிறதுக்கு என்கிட்ட எந்த ரீஸனும் கிடையாது. நான் ரொம்ப குழப்பமாயிருக்கேன்.
சில சமயம் உங்கள ரொம்ப கஷ்டப்படுத்துறதா நினைச்சி பேசாம எதையாவது சொல்லி உங்களை என்ன வெறுக்குற மாதிரி செஞ்சிரலாம்னு கூட நினைச்சிருக்கேன். மூணு வருஷம் கழிச்சி இதெல்லாம் ரொம்ப ட்ரமேட்டிக்கா இருக்கும்னும் நீங்க நம்பமாட்டீங்கன்னும் தெரியிறதால என்ன செய்யறதுன்னே தெரியலை. நீங்க கேக்குற மாதிரி என் கேர்ள் ப்ரண்ட்ங்க கிட்ட பழகிற மாதிரி என்னால் உங்கக்கிட்ட பழக முடியலை, எங்கையோ ஒரு இடத்தில் என்னத்தையோ நான் மிஸ் பண்ணுறேன். என்னான்னு தான் தெரியலை.
சரி எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுவோம், என்ன உங்களுக்கு என் உடம்பப் பார்க்கணும் ஆசை தீர அனுபவிக்கணும் அவ்வளவுதானே போய்த் தொலையுதுன்னு அதைச் செஞ்சிரலாம்னு கூட நினைச்சிருக்கேன். ஆனால் கடைசியில் நீங்களும் இவ்வளவு தானான்னு நினைக்கிறப்ப மனசுக்கு கஷ்டமாயிருக்கு அதே சமயத்தில் என்னமோ உங்களுக்கு மட்டும் தான் இதில் விருப்பம் இருக்கு எனக்கு இல்லவேயில்லை சாமியார் நானுன்னு ஃப்ரூப் பண்ண நினைக்கிறனான்னு சந்தேகமாவும் இருக்கு. எனக்கு செக்ஸ் ஃபீலிங் இல்லாம இல்ல, எனக்கும் அதைப் பற்றி கனவு கற்பனை கவிதை எல்லாம் இருக்கு சொல்லப்போனா பாட்டுக் கூட இருக்கு உங்கள மாதிரி..."
சிரித்தாள் நான் எதுவும் சொல்லவில்லை.
"...ஆனா சீக்கிரமே ஒரு முடிவு எடுக்கணும்னு இன்னிக்கு காலைல தான் நினைச்சேன். அதுக்குள்ள இப்படி பண்ணிட்டீங்க, ஒன்னு உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறது இல்லாட்டி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்ன மாதிரி தொறந்து காண்பிச்சிட்டு போய்ட்றதுன்னு இருக்கேன். ஆறுமாசம் ஒரு வருஷம் காதலிக்கிறவங்க எல்லாம் எப்படி நடந்துக்கிறாங்கன்னு பார்த்துக்கிட்டுத்தான் வர்றேன், மூணு வருஷமா உங்களைக் காதலிச்சும் காயப்போட்டேங்கிறப்ப எனக்கே கஷ்டமாத்தான் இருக்கு. மூணு வருஷம் பொறுத்தியே இன்னும் ஆறு மாசமோ ஒரு வருஷமோ பொறுத்திட்டா நான் முழுசா உனக்குத்தானேன்னு தான் சொல்லத் தோணுது. ஆனா அது என்ன ஃபார்மாலிட்டி தாலி கட்டுறது கூட படுத்துக்கிறதுக்கு லைசன்ஸான்னும் தோணுது. மூணு வருஷம் காதலிச்ச உங்களை விட தாலி பெரிய விஷயமா படலை எனக்கு.
என்னால ஒரு முடிவுக்கு வரவே முடியலை, இப்படி என்னைத் தடுமாற வைச்சு என்னை உபயோகிச்சிக்கப் பார்க்கிறீங்களான்னும் சில சமயம் தோணுது. என்ன எழவோ நான் எதுக்கும் தயாராய்ட்டேன், உங்களுக்கு விருப்பம்னா நாளைக்கே கூட நீங்க என்னை எடுத்துக்கலாம். இப்ப எதுவும் பேசாதீங்க எதார்ந்திருந்தாலும் நாளைக்கு சொல்லுங்க. நான் எதுக்கும் தயார். நான் போனை வைக்கிறேன்."
சிரிக்கக்கூடாது என்று எவ்வளவு தான் முயன்றாலும் முடியாமல் சிரித்துவிட, எதிர்ப்பக்கத்தில் அவள் போனைத் துண்டித்துவிட்டு சென்றுவிட்டாள்.
எல்லாம் ஒரு கடிதத்தில் முடிந்து போயிருந்தது அவள் தொலைபேசிய மறுநாள் இந்தக் கடிதத்தை அவளுக்கு அனுப்பியிருந்தேன். எங்கள் ஊடல் பின்னர் உணரப்பட்டு புணர்தலால் காமமான அந்நிகழ்ச்சிக்கு அடையாளமாய் இந்தக் கடிதம் மீந்து நின்றது.
------------------------------------------------------------------------------
அன்புள்ள அகிலாவிற்கு,
நேற்றைக்கு நீ பேசிய பொழுது என்னன்னமோ பேசிய பொழுது பதில் சொல்ல என்னிடம் எதுவுமில்லை, நீ பதில் பேசாதே என்பதால் மட்டும் நான் பேசாமலிருக்கவில்லை.
காமக் கொடூரனாய் நான் உன்னிடம் நடந்து கொண்டேனா தெரியாது, காதலாயும் யாசித்தலாயும் வந்திருந்தாலும் கேட்டதென்னமோ காமம் என்ற வகையில் உன்னைக் காயப்படுத்தி விட்டதாயே நினைக்கிறேன். அதற்காகவே அதற்காக வருத்தமும் படுகிறேன். உன்னிடம் இந்த மூன்று வருடங்களில் நான் உன்னைக் கல்யாணம் செய்து கொள்வேன் என்ற எண்ணத்தைக் கூட வரவழைக்கவில்லை என்பதிலும் வருத்தமே!
அந்த அளவிற்கு கூட நம்பிக்கை வராத பொழுது நீ என்னிடம் நடந்து கொண்ட விதம் எனக்கு முற்றிலும் சம்மதமே. இந்த அளவிற்கு கூட நான் நம்பிக்கை வைக்காத ஆட்களிடம் பழகுவதில்லை என்பதும் என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
கடைசியாய் என்னன்னமோ சொன்னாய் 'வேணும்னா நாளைக்கே எடுத்துக்கோ' அப்படின்னெல்லாம். கொடுக்கப்படாதெல்லாம் எடுத்துக் கொள்ள முடியாது என்றே நினைக்கிறேன்.
வருகிறேன்காதலுடன்
அன்புடன்
மோகன்தாஸ்
Monday, April 20, 2009 | Labels: ஊடல், காதல், காமம், சிறுகதை | 2 Comments