படைப்பின் அடிமைகள்(ரமேஷ் - பிரேம்)

விடுதலை கருத்தியல்கள் மற்றும் புரட்சிகர கோட்பாடுகளின் காலமான பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகள் மனித சமூகங்களின் மொத்த வடிவத்தையும், இயக்கத்தையும் ஏதோ ஒரு வகையில் மாற்றி அமைத்துள்ளன. இன்றைய வாழ்நிலையின் பல அடிப்படைக்கூறுகள் மனித உரிமை, சுதந்திரம் என்பவற்றை முன் நிபந்தனையாகக் கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளன. இன்றுள்ள அதிகாரம், ஆதிக்கம் என்பவை கூட ஏதோ ஒரு வகையில் முன்னேற்றம், சமநீதி என்பவற்றையும் அடிப்படை உரிமைகள் என்பவற்றையும் முன்வைத்தே தம்மை நியாயப்படுத்திக் கொள்கின்றன.

முன்பிருந்த ஆதிக்கம், அதிகாரம் என்பவை தம்மை இறையாண்மை உடையவையாக பிரகடனப்படுத்திக் கொண்டது போல, கேள்விக்கு அப்பாற்பட்டவையாக இன்று எந்த ஆதிக்க, அதிகார, அடக்குமுறை அமைப்பும் தம்மை வைத்துக்கொள்வதில்லை; இவை தம்மை நியாயப்படுத்தும் சொல்லாடல்களை, நடைமுறை விதிகளைக் கட்டமைத்து பெருக்கிக் கொண்டுள்ளன. இந்தச் சொல்லாடல்கள், விதிகள் அனைவரையும் உள்ளடக்குவதான தோற்றம் கொண்டவை. அகிலம் சார் மனிதம், மனித உரிமை, சுதந்திரம், கடமை எனப் பல உபதர்க்கங்களைக் கொண்டு இவை கட்டப்பட்டுள்ளன. இந்த உள்ளடக்கும் கருத்தியல்களின் சொல்லாடல்கள் மிகத்தந்திரமானவை; தாம் கொண்டுள்ள அடக்குமுறை, ஒடுக்குமுறை, ஆதிக்கப் பொறியமைப்பை வெளித்தெரியா வண்ணம், புலப்படா வண்ணம் பொதிந்து வைத்திருப்பவை. அனைவரையும் இதன் பங்கேற்பாளராக மாற்றிவிடுபவை. என்றாலும் விடுதலை, மாற்றம், புரட்சி என்ற மாற்றுக்கருத்தியல்களும், செயல்திட்டங்களும் இன்றைய வாழ்தல் விதிகளை, உலகு பற்றிய பார்வைகளை, நடத்தை விதிகளைத் தொடர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கின்றன. இவ்வாறு கேள்வி கேட்கும் கருத்தியல்களின் மிகத்தீவிரமானதும்,. மிகத்தேவையானதுமான ‘பெண்ணியம்’ மட்டும் இன்றும் கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டு வரும் ஒன்று, எல்லா விடுதலை, புரட்சிகர கோட்பாடுகள், சித்தாந்தங்கள், கருத்தியல்களும் பெண்ணியத்தைப் புரிந்துகொள்வதில், ஏற்பதில் மிகுந்த தயக்கம் காட்டுபவையாக அல்லது தமக்கேற்ப பெண்ணியத்திற்கு வரையறை தரமுயற்சிப்பவையாகவே இருந்து வருகின்றன.

எல்லாவித ஒடுக்குமுறைகளுக்கும் அப்பால், எல்லா வித அடிமைத் தனங்களுக்கும் அப்பால் மீந்து நிற்கும் ஒடுக்குமுறையாக, அடிமைத்தனமாக இருப்பது பெண்ணடிமைத்தனமாக, பெண்ணொடுக்கு முறையாகவே இருக்கிறது. அடிமைகளுக்குள் அடிமையாக, ஒடுக்கப்பட்டவர்களில் ஒடுக்கப்பட்டவர்களாக பெண்கள் இருத்தி வைக்கப்பட்டுள்ளது ஒரு வரலாற்று மெய்மை. மிகக்குறுகிய ஒரு வெளிக்குள், மிகக்குறைந்த இரு உறுப்பினர்களுக்கிடையில் கடைசியாக மீந்து நிற்பதாக இந்தப்பால் நிலை சமத்துவமின்மை, பாலியல்பு ஒடுக்குமுறை இருந்து கொண்டே வருகிறது. ‘‘ஆணும் பெண்ணும் சமஉரிமை இல்லாத உலகில் சுதந்திரத்தைப் பற்றிப் பேச எவனுக்கு யோக்கியதை இருக்கிறது?’’ எனப் பெரியார் கேட்பது எல்லா வித அறிவியல் சமூக ஒழுங்குகளுக்கும் பொருந்தக்கூடியது.

பெண் இயற்கையிலேயே ஆணுக்குப் பிற்பட்ட, கீழ்ப்பட்ட உயிரி என்ற வாதம் வெகுகாலமாக வைக்கப்பட்டு, பொய் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. உலகின் பெரும் மதங்கள் அனைத்தும், பல இனக்குழு சமயங்கள் உட்பட பெண்ணை, ஆணுக்கு அடங்கிய, கட்டுப்பட்ட உயிரியாக வரையறுத்ததும் உடைத்தெறியப்பட்டுவிட்டது. பெண் ஒடுக்கப்பட இல்லை, பெண்கள் சுதந்திரமாகவே உள்ளனர் என்ற மூடத்தனமாக வாதங்கள் தற்போது பொதுப்புத்தியில் பதிய வைக்கப்பட்டுள்ளன. பெண்கள் இயல்பிலேயே அடங்கியும் கட்டுப்பட்டும் இருக்க விரும்புபவர்கள் என்ற கோணல் வாதங்களும் எப்போதும் பெருகியபடி உள்ளன. இவையும் இன்னும் எண்ணற்ற கொடுங்கோன்மை ஆண்மைய, ஆண் மேலாதிக்க வாதங்களும் பெண்ணியத்தால் ‘தகர்க்கப்பட்டு பொய்ப்பிக்கப்பட்டுவிட்டன. என்றாலும் ‘பெண்ணிய’ அறிதல் முறை, அணுகுமுறை, புலன்முறை என்பது இன்னும் ‘வெளியே’ உள்ளதாக, விளிம்பு நிலைப்பட்டதாக இருப்பதற்குக் காரணம் உண்டு. மற்ற கோட்பாடுகள், அரசியல் கருத்தில்களைப் போல் இல்லாமல் ‘பெண்ணியம்’ மனித சமூகத்தின் அடிப்படைகளை மாற்றியமைப்பது, பாலியல்புகள், பாலியல் நடத்தைகள் தனிமனித உறவமைப்புகள், குடும்பம், சமூகக்குழு என அனைத்தையும் மாற்றியமைக்க வேண்டிய தேவையை பெண்ணியம் உணர்த்துகிறது. நகர அமைப்பு, வாழிட அமைப்பு, மொழி அமைப்பு, பண்பாட்டு இயக்கம், உணவு, உடை மற்றும் குடும்ப அமைப்பு என அனைத்தையும் மாற்றியமைக்க வேண்டிய தேவையை ‘பெண்ணியம்’ தெளிவுப்படுத்துகிறது. ஆண்மைத்தன்மை உடைய இன்றைய சமூக உளவியல் இவற்றை ஏற்பதைக் கடுமையாக எதிர்க்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

நுண் அரசியல், நுண் அதிகாரக்களங்களைக் கேள்வி கேட்கும் ‘பெண்ணியம்’ மிகச் சமீபத்தில்தான் தன்னை வடிவமைத்துக்கொண்டது. இன்றுள்ள விடுதலை, ‘சமத்துவம் சார்’ கோட்பாடுகள் மற்றும் கருத்தியல்களில் மிகமிகப் புதிய புரிதல் இந்தப் ‘பெண்ணியம்’. இது ஆண்மையச் சொல்லாடல்களை, அமைப்புகளை அச்சுறுத்துவதாக இருப்பது இயல்பு. ‘ஆண்மை’ என்ற ஒன்றையே கேள்விக்குட்படுத்தி தகர்க்கும் இந்த விடுதலைக்கருத்தியலை ஏற்காத வரை, உலகின் சமூக அறம், சமூக அழகியல், ஒழுக்கவிதிகள் யாவும் அர்த்தமற்றவை, ஆபத்தானவை, ஆதிக்கத்தன்மை உடையவை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். அன்பு, காதல், பாசம், நட்பு என்ற அனைத்தும் பாலொடுக்குதலின் வன்கொடுமைக் கருவிகள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பெண்ணியமும், தலித்தியமும் சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டு வழிகாட்டு நெறிகளாக மாறாத வரை, இந்தியச் சமூகங்களின் எந்த விடுதலைக் கருத்தியலும், அரசியலும் வெறும் ஏமாற்று வித்தைகள்தான் என்பதை நாம் உரத்துச்சொல்ல வேண்டிய காலம் இது. இதற்கான காரணங்களும், தர்க்கங்களும், நியாயங்களும் எல்லா மட்டங்களிலும் தொடர்ந்து பேசப்படவேண்டும். எல்லா சொல்லாடல்களையும் இவை உடைத்துப்பிளவு படுத்தவேண்டும். நிர்ணய_நியாயவாத, இயற்கை வாத வன்முறைகளின் போலித்தனங்கள் அறிவுத்துறைகளிலும், அழகியல் தளங்களிலும் குவிந்து கிடப்பதை மிக மென்மையான அணுகுமுறைகளின் மூலம் இனி எதிர்கொள்ளமுடியாது என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. மேலாதிக்கக்கருத்தியல்கள் தம்மை ‘இயற்கை வாதங்களாக’, ‘இயல்பு வாதங்களாக’ வைத்துக்கொண்டு விடுதலை மற்றும் அடிமை மறுப்புக் கருத்தியல்களை இயற்கை மீறிய, இயல்புகோணிய வக்கிரங்களாக, பயங்கரங்களாகத் தொடர்ந்து சித்திரித்துக்கொண்டே வருபவை. அப்படி ‘வக்கிரகோணல்’ பட்டியலில் சேர்க்கப்பட்ட சிந்தனைகளில் ஒன்றுதான் ‘பெண்ணியம்’

தற்போது உள்ள உலகமயமான அரசியலும், மிக நுண்தளத்தில் உள்ள ஒரு இந்திய சாதிக்குழு அரசியலும் மிக இணங்கிப்போகும் ஒரு கருத்தியல் ஆண்மையத்தன்மை மற்றும் பெண் ஒடுக்குமுறை. இது எப்படி சாத்தியமானது என்பதுதான். மிக மிக நுணுகி ஆய்வு செய்யப்படவேண்டியது. இது மிகமிகப் புராதனமான வரலாற்றை உடையது; அதே சமயம் மிகமிகத் தற்காலத் தன்மையும், தற்கணத்தன்மையும் உடையது.

இனஒடுக்குதல், தேச ஒடுக்குதல், வர்க்க ஓடுக்குதல் போல் எதிரெதிராக விலகி நிற்கும் இரு குழு அல்லது பகுதிகளுக்கு இடையில் உள்ளது போல் இல்லாமல் பாலொடுக்குதல் என்பது உள்ளடங்கிய, பிணைந்த இருவருக்கிடையில், உறவமைப்புகளுக்கிடையில் நிகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய ஒன்று என்பதனால் மிகவும் நுட்பமாகவும், பூடகமாகவும், மர்மமமான முறையிலும், தந்திரமாகவும் செயல்படுத்தப்படுகிறது. இந்தப்புலப்படாதத்தன்மை பல சமயங்களில் அதற்குள் நசுங்கிக்கிடக்கும் பெண்களையே நினைவிழக்கச்செய்து ஒடுக்குதலில் ஒப்புக்கொடுப்பவர்களாக மாற்றிவிடக்கூடியது. இந்த நினைவிழப்பு தான் ஆண்மேலாதிக்கத்திற்கும், ஆண்மைய வாதத்திற்கும் பலமாக மாறி அவற்றை விரிவடையச்செய்கிறது. ‘பெண்ணியம்’ இந்த நினைவிழப்பிலிருந்து பெண்களை மீட்கவும், மறதிகளிலிருந்து வெளியேற்றவும் நிகழ்த்தும் ஒவ்வொரு முனைப்பும் ஆண்மையச்சிந்தனைகளுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தக்கூடியது.

நினைவிழப்புகளால், அறியாமைகளால் கட்டப்படும்_ பாதுகாக்கப்படும்_ எந்த அமைதியும் சமநிலையும் கொடூரமானது. அந்தக்கொடூரங்கள் காலம் காலமாக நியாயப்படுத்தப்பட்டு, நிலைப்படுத்தப்பட்டு வரும் சூழலில் அக்கொடூரங்களுக்கு எதிரான மறுப்பு மிக மென்மையாக நடந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது பெரும் வன்முறை. இந்திய அரசியலில் தலித்தியத்திற்கும் இதே நிலை ஏற்பட்டதுண்டு. ஒடுக்குதலுக்கு, வன்கொடுமைக்கு எதிரான கேள்வி வன்முறையினதாக, அமைதி குலைப்பதாக, சமநிலையை உடைப்பதாக அடையாளப்படுத்தப்பட்டது. தலித் அரசியல் இந்தியப் பொது அரசியல் பொருளாதாரத்திற்கு கேடுவிளைவிக்கும் ஒரு வன்முறையான இடையூறாக அறியப்பட்டு வருவது, பொதுப்புத்தியில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. கேள்வியும், மறுப்பும், எதிர்ப்பும் இன்றி பணிந்து, ஒடுங்கி இருப்பது அமைதி; அதுவே சமநிலை. இந்தச் சமநிலையை அரசியல், பொருளாதார, பண்பாட்டுத்தளத்தில் மட்டும் இன்றி உளவியல், நடத்தையியல் தளத்திலும் குலைக்கும் செயலைச் செய்வது பெண்ணியம். மிகப்புராதனமான வலியுடன், மிக அடிப்படையாக அறத்துடன் உருவாகி வந்துள்ள ‘பெண்ணியம்’ இருபத்தோராம் நூற்றாண்டின் எல்லா மாற்றுச்சிந்தனை முறைகளுடனும், ஊடாடி, கேள்வி கேட்டு சரிப்படுத்தும் செயலைச் செய்யவேண்டிய கடினமான பணியைத் தன்னிடம் கொண்டுள்ளது. அது அமைதியாகத் தன் தரப்பு நியாயங்களை முன் வைத்த காலம் முடிந்து தான் போனது. இது உடைப்புகளுக்கென காலம். குடும்பம், சாதி, ஊர், சமூகம், சமயம், தேசியம், சமூக ஒழுக்கம், மனித அறம் என்ற அனைத்து ஆண்மையக் கட்டமைப்புகளையும் ‘பெண்ணியம்’ உடைப்பதன் மூலம் ‘ஆண்’_‘ஆண்மை’ என்பதையும் உடைக்கவே செய்யும். இந்த உடைக்கும் உரிமை பெண்களுக்கு எப்படி வரமுடியும் என்ற கேள்வி எழலாம். கட்டியவர்கள் அவர்கள். ஆம், இன்று ஆண்களால் கைப்பற்றப்பட்டு கட்டுப்படுத்தப்படும் அனைத்து ‘மனித நிலை’ நிறுவனங்கள், அமைப்புகள் யாவும் பெண்மையால், பெண்களால் கட்டப்பட்டவை. ஈணுதல், பேணுதல் (பிறப்பளித்தல், வளர்த்தல்) என்ற தாய்மையின் கூறுகள்தான் மனித சமூகத்தின் அடிப்படைகள். ஈணுதல் அனைத்து உயிர்களுக்கும் பொது. ஆனால் ‘பேணுதல்’ (நீடித்த பேணுதல்) மானுட சமூகத்தின் மூலக்கூறு, இது மனிதர்களை மாற்றியமைத்தது. இதிலிருந்தே மனித சமூகத்தின் அனைத்து வளர்ச்சிகளும், மாற்றங்களும் தொடங்கின. உணவு சேகரித்தல், சேமித்து வைத்தல், விவசாயம், கைத்தொழில், வாழிடம் அமைத்தல், சேர்ந்து வாழ்தல் என அனைத்து மனிதத்தொழில் கூறுகளும் பெண்களால் படைக்கப்பட்டவை. வளர்க்கப்பட்டவை. தாய் வழி, தாய் முதன்மைச்சமூகங்களாக இருந்தே எல்லா சமூகங்களும் இன்றுள்ள தந்தை வழி, தந்தை முதன்மைச் சமூகங்களாக மாறின. தாய்மை ஒருவகையில் மனிதர்களை (ஆண்) வளர்த்தது, மறுவகையில் பெண்மையை ஒடுக்கியது. அடிமைப்படுத்தியது. பெண் படைத்தது., பெண்ணையே ஒடுக்குதல் என்பதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தபோதும், இனத்தொடர்ச்சிக்குப் பெண் தந்த முதன்மை பெண்ணை படைப்பின் அடிமையாக்கியது. தான் படைத்தவைகள் தன்னை ஒடுக்கும் போது, அவற்றை உடைக்கும் உரிமை யாருக்கும் உண்டு. பெண்ணியம் அவ்வகையில்தான் உடைத்துப் படைக்கும் ஒரு செயலாக, போராட்டமாகத் தொடரவேண்டியிருக்கிறது.

ஆண் என்பவன் பண்பாடு (கலாசாரம்) (சிuறீtuக்ஷீமீ) என்றும், பெண் இயற்கை (ஸீணீtuக்ஷீமீ) என்றும் ஒரு எதிரிடை கட்டப்பட்டுள்ளது. இது ஆணுக்கு பண்பாட்டில், அரசியலில், நாகரிகத்தில் அதிக முதன்மை தரும் வாதம். உண்மையில் பெண்ணே கட்டமைப்பு (பண்பாடு) (சிuறீtuக்ஷீமீ). ஆண் அதன் உப கட்டமைப்பு, தாய்மைக்கு உள்ள எந்தப் பொறுப்பும் அற்ற தந்தையைப் பண்பாட்டுக்குள் கொண்டுவந்த நிகழ்வு மானிட சமூக வரலாற்றில் மிக முக்கியமான கட்டம். சமூக அமைப்பும், அதன் வளர்ச்சியும் ஆண்களால் வந்தவை என்ற அறிவற்ற வாதங்களை உடைக்க இன்று ஏராளமான சான்றுகள் கிடைத்துவிட்டன, என்றாலும் ஆண் மையப்பட்ட சொல்லாடல்கள் இவற்றை ஏற்பதில்லை. பெண்ணின் படைப்புகள். குடும்பம், குடி மரபு என்பவை பெண்ணின் படைப்புகள் குடும்பம், குடி மரபுகள் தான் வாழிட எல்லைகளின் அடிப்படைகள், இவையே அரசின் தொடக்கம், போரின் தொடக்கம். இல்லம், வீடு என்பவை தாய்மையின் கண்டுபிடிப்பு, இவையே உலக வரலாற்றை மாற்றியமைத்தவை. இன்று எல்லாம் மறதிக்குள் புதைந்து போன ‘ஆண் முதன்மை’ அரசியலில் பெரும் தலைகீழாக்கம் நிகழ வேண்டியள்ளது. இந்தத் தலைகீழாக்கத்திற்கு பெண்மை எல்லாவிதமான உத்திகளையும் கையாளும், அதற்கான நியாயங்கள் அதற்கு உண்டு. இது ஒரு வகையில் இரண்டாம் படைப்பு, தான் முதலில் படைத்ததை உடைத்து, தனக்கான இடத்துடன் கட்டப்படும் இரண்டாம் படைப்பு. ‘ஆண்மை’ என்பதும் இதில் அடங்கும். ‘ஆண்’ என்பதும் ‘ஆண்மை’ என்பதும் கூட பெண்ணின் படைப்பு, பெண்ணின் புனைவுதான். ‘தந்தை’ என்பது போல் தாய் அளித்த உரிமைதான். இந்த உடைப்புகளுக்கும் மறு உருவாக்கத்திற்கும் தயாராக இல்லாத ‘ஆண்மை’ இனி எந்த அறத்தையும், நியாயத்தையும், அறிவியலையும் பேசத் தகுதியற்றதாகவே இருக்கும். ஏனெனில் இன்றுள்ள ‘ஆண்மை’யின் கையில் இருப்பவை ‘பேரழிவுக்கருவிகள்’ பேரழிவு உத்திகள்’ கொடும்வன்மை மூலம் தன்னைத் தொடர்ந்து நிலைநிறுத்திக்கொள்ள அது முயற்சிக்கும். இது அழிவின் தொடர்வினை, படைக்கப்பட்டவற்றை தான் கவர்ந்து கொண்டதால் கிடைத்த ஆதிக்க மேலாண்மை. பெண்ணியம் எதிர்நோக்கி உள்ள மிகப்பெரும் சிக்கல், இந்த வன்முறை எதிர்கால அற சார் அரசியலுக்கும், மனித ஒழுங்குகளுக்கும் முன் உள்ள பெரும் சவாலும் இதுதான்.

நன்றி தீராநதி

0 comments: