இட ஒதுக்கீடு தடை: தலைவர்கள் அதிர்ச்சி, கண்டனம்

மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இது அதிர்ச்சி தரும் செய்தி. சட்ட திருத்தம் தேவையா என்பதை இப்போதே கூற முடியாது.

இட ஒதுக்கீட்டில் ஆர்வமாக இருக்கும் அரசியல், சமுதாய இயக்கங்களின் தலைவர்கள் இதுகுறித்து கூடிப் பேசி மேற்கொண்டு ஆற்ற வேண்டிய பணிகளை ஆற்றுவோம் என்றார்.

பின்னர் அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

உச்சநீதிமன்றத்தைக் கண்டித்தோ, அதன் தீர்ப்பை எதிர்த்தோ பந்த் போராட்டத்தை நாங்கள் நடத்தவில்லை. இந்தத் தீர்ப்பு எங்களுடைய சமுதாயத்தின், இந்திய நாட்டு அடித்தட்டு மக்களின் ஒடுக்கப்பட்ட மக்களின் நல வாழ்வுக்கு உலை வைக்கிறது என்பதற்காக நடத்தப்படுகிற வேலைநிறுத்தமாகும்.

ஏற்கனவே கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தம் செல்லுபடியாகாது என்று இடைக்காலத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிலேயே இந்த இட ஒதுக்கீடு மாணவர்களுக்குப் பயன்படாது என தீர்ப்பு வந்துள்ளது.

எனவே நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்குப் புத்துயிர் கொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தர முடியுமா என்பதை யோசித்து விவாதிக்கத்தான் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தைக் கூட்ட கோரியுள்ளோம்.

கேள்வி: உச்சநீதிமன்றத்தில் காவிரி தீர்ப்பு வந்தபோது அதை ஏற்று கர்நாடகம் நடக்கவில்லை. முல்லைப் பெரியாறு அணையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தபோதும் அதை கேரளா ஏற்கவில்லை. அதேபோல, இந்தத் தீர்ப்பையும் மதிக்காமல் மாநிலங்கள் நடந்து கொள்ளலாம் அல்லவா

கருணாநிதி: உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்க மாட்டோம் என கர்நாடகம் சொல்லவில்லை. மேலும் தற்போது நடுவர் மன்றத் தீர்ப்பே வந்து விட்டது. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், உச்சநீதிமன்றத் தீர்ப்பை கேரள அரசு ஏற்கவில்லை. பதிலாக வேறு ஒரு சட்டத்தையே இயற்றினார்கள். இதுகுறித்து உச்சநீதிமன்றம் போன்ற உயர் அதிகாரம் படைத்த மன்றங்கள் நடவடிக்கை எடுத்தால் மகிழ்ச்சி அடைவேன்.

ஆனால் சமீபகாலமாக நீதிமன்றங்கள், சமூக நீதியை ஒடுக்குகிற வகையில், எதிர்பாராமல் நடந்து கொள்கின்றன என்பதுதான் எனக்கு வருத்தம்.

பந்த் நடத்தும்போது அத்தியாவசியப் பணிகளுக்கு வழக்கம் போல விலக்கு அளிக்கப்படும். மாணவர்களுக்கு தேர்வு இருந்தால், அதுகுறித்து எங்களுக்குத் தெரிவிக்ககப்பட்டால் விதி விலக்கு அளிக்கப்படும். சனிக்கிழமை மாணவர்களுக்கு விடுமுறைதான்.

கேள்வி: இந்தத் தீர்ப்பால் நேரடியாக பாதிக்கக் கூடிய மாணவர்களிடம் எந்தவிதமான எழுச்சியும் இல்லையே ..

கருணாநிதி: இந்த கேள்வியை நான் தந்தை பெரியாரிடமே ஒருமுறை கேட்டேன். அய்யா, நாம் யாருக்காக பாடுபடுகிறோமோ, அந்தப் பின்தங்கிய மக்களும், ஆதி திராவிட மக்களும் அதைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்களே என்று கேட்டபோது, பெரியார் சொன்னார், அதனால்தான் அவர்கள் பின் தங்கியவர்களாகவும், ஆதி திராவிடர்களாகவும் இருக்கிறார்கள் என்றார்.

பந்த்தின்போது விமானம் மற்றும் ரயில் போக்குவரத்தை நிறுத்துமாறு கோரிக்கை வைப்போம்.

கேள்வி: ஜனநாயகத்தின் மிகப் பெரிய அமைப்பு நாடாளுமன்றம்தான். அந்த நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்துக்கே இந்த கதியா ..

கருணாநிதி : மிக உயர்ந்த கோபுரங்களின் மீது சில நேரங்களில் இடி விழுகிறது அல்லவா, அதுபோலத்தான் இதுவும்.

மற்ற மாநில முதல்வர்களுக்கு இதுதொடர்பாக நாளை முதல் கடிதம் எழுதுவோம். அதன் பிறகு தொடருவோம் என்றார் கருணாநிதி.

கட்சிகள் கடும் எதிர்ப்பு:

இதற்கிடையே, இட ஒதுக்கீடு சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

சட்டசபைக்கு அவர்கள் கருப்பு பேட்ஜுடன்தான் வருகின்றனர். தாங்கள் வருகிற சைக்கிள்களிலும் கூட கருப்புக் கொடியைக் கட்டியுள்ளனர். இதுகுறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி கூறுகையில், இந்தத் தீர்ப்பு பாமகவினருக்கு பெரும் வேதனையையும், வருத்தத்தையும் அளித்துள்ளது.

இந்தியாவில் உள்ள 65 கோடிக்கும் மேற்பட்ட பிற்பட்ட மக்களுக்கு மிகப் பெரிய வேதனைச் செய்தி இது. இந்த சட்டத்துக்காக டாக்டர் ராமதாஸ் மிகப் பெரிய முயற்சிகளை மேற்கொண்டார். சமூக சிந்தனையோடு இந்த சட்டத்தை அணுகாமல், உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பது வேதனை தருகிறது என்றார்.

இடது சாரிக் கட்சிகளும் இந்தத் தீர்ப்பை கடுமையாக விமர்சித்துள்ளன. அதேசமயம், பாஜக இந்தத் தீர்ப்பை மறைமுகமாக வரவேற்றுள்ளது. இட ஒதுக்கீட்டை பாஜக ஆதரிக்கிறது. அதேசமயம், இதை சரியான கோணத்தில் எடுத்துச் செல்ல மத்திய அரசு தவறி விட்டதாக பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.

0 comments: