விஜயகாந்த் - கோவேறு கழுதை - ஜெயகாந்தன்

முறுக்கிய மீசைக்குள் முளைத்துப் பூக்கும் அலட்சியப் புன்னகையின் அர்த்தம் என்ன? பேரருவியான பேச்சுக்கு நடுவே ஆழ்கடலாய் உறைந்திருக்கும் மௌனத்தின் அர்த்தம் என்ன?

வலது கையை ஜெயகாந்தன் சொடுக்க, பக்கத்தில் இருப்பவர் சிலுப்பியில் ‘மருந்து’ ஏற்றித் தருகிறார். புகைச் சுருள் பரவ, காலப் பெருந்தச்சனாய் கம்பீரமாய் கனைக்கிறார் ஜே.கே!

‘‘எப்படி இருக்கீங்க?’’

‘‘எப்படி இருந்தால் உங்களுக்குச் சவுகரியம்?’’ - பட்டென்று தெறித்து வரும் பதில் கேள்வியுடன் தொடங்குகிறது உரையாடல்...



‘‘வாழ்க்கையை, வாழ்க்கையாகவே பார்க்கிறேன். நிறைய கற்றுக்கொள்கிறேன். நான் கற்றதைப் பயில விரும்புபவர்களுக்குக் கற்றுத் தருகிறேன். லட்சியம் என்பது எனக்கு விதிக்கப்பட்டதை நான் நிறைவேற்றுவதே!

அதைத் திருப்திகரமாகவே நிறைவேற்றி வருகிறேன். இறுதி லட்சியம் என்பது போகப் போகத் தெரியும். இப்போது எனக்கு வேண்டுவதெல்லாம் கால் பதிக்க ஓர் இடமும், வெளிச்சமும்தான். பாதை தெளிவாகத் தெரிந் தால்தானே, இலக்கு தெளிவாகத் தெரியும்?’’

‘‘உங்களின் ‘சமூகம் என்பது நாலு பேர்’ என்ற நாவலை சினிமாவாக எடுக்கிறார்களே... அதில் உங்களின் பங்களிப்பு என்ன?’’

‘‘அவர்கள் என் நண்பர்கள். அடிப்படையில் என் வாசகர்கள். நல்ல முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அவர்களது முயற்சி அவர்கள் நினைத்தவண்ணம் வெற்றி அடைய வாழ்த்தியிருக்கிறேன், ஆசீர்வதித்திருக்கிறேன். மற்றவை மற்றவர்களால் செய்யப்படும். அவர்கள் என்னிடம் வந்து கேட்கும்போதெல்லாம் ஏதேனும் சொல்லியனுப்புகிறேன்.’’

‘‘நீங்கள் அடிக்கடி பாண்டிச் சேரி போகிறீர்கள். அங்கேயே செட்டிலாகப் போவதாகவும் செய்திகள் வந்தன. உண்மையா?’’

‘‘நண்பர்கள் அழைத்துக் கொண்டு போகிறார்கள். சில நண்பர்கள் அங்கேயே தங்க வேண்டும் என்கிறார்கள். எனக்கு எல்லா இடத்திலும் தங்க வேண்டும் என்று ஆசை. நிறைவேறினாலும் சரி, நிறைவேறாவிட்டாலும் சரி அல்ப விஷயத்துக்குதான் ஆசை என்று பெயர். திட்டம் போடாமல் எந்தக் காரியமும் நிறை வேறாது.’’

‘‘பத்து ஆண்டுகளுக்கு முன், நல்ல படைப்புகள் கவனிக்கப் படாமல் போவதும், மோசமான படைப்புகள் கொண்டாடப்படுவதும்தான் எழுத்தாளனின் பிரச்னை என்று கூறினீர்கள். இப்போது நிலை என்ன?’’

‘‘எப்போதும் அந்த நிலை இருக்கும். நாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் நம் லட்சணம் இப்படித்தான் இருக்கும் என்றால், அதற்கு யாரைக் குறை சொல்ல? ஆனாலும், நல்லது வந்துகொண்டே இருக்கும். தினசரி இருட்டும் வெளிச்சமும் மாறிமாறி வந்துகொண்டேதானே இருக்கிறது! வெளிச்சம்தான் சத்தியம். வெளிச்சம் இல்லாத இடத்துக்குப் பெயர் இருட்டு. தமிழ்நாட்டில் வாழ்க்கைத் தரம், பொருளாதார சமூகநிலை எல்லாமே இப்போது உயர்ந்திருக் கிறது. அந்தளவுக்கு கலை இலக்கியத் தின் கௌரவமும் உயர்ந்திருக்கிறது. நமது செயல்கள் மேலும் சிறப்படை வதாக!

ஒரு முத்து வேண்டுமென்றால் கூட ஒரு வண்டி கிளிஞ்சல்களை அள்ள வேண்டும். சலித்துப் பார்க்க வேண்டும். சலித்துப் போய்விடக் கூடாது.’’

‘‘திராவிட இயக்கத்தை ஆரம்ப காலம் தொட்டுக் கடுமையாக விமர்சித்து வந்த நீங்கள், ‘முரசொலி அறக்கட்டளை’ விருதை வாங்கியதில் பலருக்கும் ஆச்சர்யம்! ‘நான் வாங்கிய விருதுகளிலேயே இது தான் சிறந்த விருது’ என்று வேறு பேசி னீர்கள். இப்போது, உங்கள் மகனுக்கு கலைஞர் அரசாங்கப் பணி கொடுத்திருக்கிறார்...’’

‘‘இந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதால்தான் ‘முரசொலி அறக்கட்டளை விருது’க்கு அந்தச் சிறப்பு தந்தேன். மற்ற விருதுகள் எனக்குக் கிடைத்ததில் யாருக்கு ஆச்சர்யம்?

என் மகனுக்கு மந்திரிப் பதவி கொடுத் தால்தான் தவறு. அவருக்கு இருக்கிற தகுதிக்குதான் அந்த உத்தியோகத்தைக் கொடுத்திருக்கிறார்கள் என்று நம்பு கிறேன். என்னிடம் காட்டுகிற அன்பையும், மரியாதையையும் அவரிடமும் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். கலைஞர் ஒரு நல்ல தந்தையும்கூட!’’

‘‘இதைச் சமரசம் என்று எடுத்துக் கொள்ளலாமா?’’

‘‘யெஸ், ஐ யம் காம்ப்ரமைஸிங் வித் ஆல்! நான் எல்லோரோடும் சமாதானமாகவே செல்ல விரும்புகிறேன். சமரசம் தவிர, எனக்கு வேறு எதுவும் நோக்கமில்லை. ஆனால், இப்போதும் திராவிட இயக்கங்கள் மீதான பழைய விமர்சனங்களை நான் வாபஸ் பெற்றுக்கொள்ள வில்லை. கடுமையாகப் பேசியதற்காக வருத்தப்படவும் இல்லை. நான் மாறி விடவும் இல்லை. நான் அந்த வகையறாவைச் சேர்ந்தவன் அல்ல. அவர்களே அந்தக் கடுமையை எல்லாம் மறந்து விட்ட பிறகு, நான் அவற்றை நினைப்பது நாகரிகமாகாது. நன்று அல்லது அன்றே மறப்பது நன்று. திராவிட இயக்கத்தினர்தான் பாராட்டத் தகுந்த வகையில் மாறி வருகிறார்கள். இந்தப் பக்குவம் எல்லா தரப்பினரிடையேயும் ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் நானும் கலைஞரும் முன்னுதாரணங்கள் என்று கொள்ளலாம்.’’

‘‘ஆட்சியில் காங்கிரஸ் பங்கு பெற வேண்டும் என்று முன்பு சொன்னீர்கள். இப்போதும் அதே கருத்தை வலியுறுத்துகிறீர்களா?’’

‘‘மாட்டேன். காங்கிரஸே வலியுறுத்தாதபோது எனக்கு ஏன் வீண் வேலை? மேலும், காங்கி ரஸை கலைஞர் நம்புகிறார். அந்த நம்பிக்கை தான் முக்கியம்.’’

‘‘தி.மு.க - வின் ஒரு வருட ஆட்சி எப்படி இருக்கிறது?’’

‘‘இந்தியாவின் ஒரு பகுதிதான் தமிழ்நாடு. இந்திய அரசின் ஒரு பகுதிதான் தமிழக அரசு. இதற்கு தி.மு.க. அரசு என்று பெயர் அல்ல. இதற்குத் தலைவர் தி.மு.க&வின் தலைவர். ஜெயலலிதா தன் ஆட்சிக் காலத்தின் கடைசியில் செய்ததை கலைஞர் ஆரம்பத்திலேயே செய் கிறார்!’’

‘‘காமராஜர் காலம்தொட்டு காங்கிரஸ்காரர்களைப் பார்த்து வருகிறீர்கள். தமிழ்நாட்டில் காங்கிரஸின் வீழ்ச்சிக்கு என்ன காரணம்?’’

‘‘அதிகாரத்தைக் கைப்பற்றுவது மட்டுமே ஓர் அரசியல் கட்சியின் முழு வெற்றி ஆகாது. அப்படி எண்ணினால் காங்கிரஸ§க்கு ஏற்பட்ட கதிதான் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் ஏற்படும். அனுபவத் தால் படிப்பினை வரும்! காங்கிரஸ், கூட்டணி மந்திரி சபைக்கு மத்திய அரசில் இடம் தந்தது அனுபவத்தால் வந்த படிப்பினை அல்லவோ!’’

‘‘தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளுக்கும் அடுத்தபடியாக விஜயகாந்த் ஒரு பெரிய எதிர் பார்ப்பை உருவாக்கி இருக்கிறாரே?’’

‘‘குதிரைன்னு ஒண்ணு உண்டு, கழுதைன்னு ஒண்ணு உண்டு, கோவேறு கழுதைன்னும் ஒண்ணு உண்டு. எல்லாம் ஜனநாயகத்தின் படைப்பு! இறைவனின் படைப்புகளில் எல்லா உயிர்களும் ஒன்றே என்பது மாதிரி இவர்கள் அனைவரும் ஒன்றே!’’


நன்றி ஆனந்த விகடன்.

0 comments: