20 பா.பி வேட்பாளர்கள் மாயம்: அதிமுகவினர் கடத்தல்?

கார்த்திக்கின் பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் போட்டியிடும் 20 வேட்பாளர்களைக் காணவில்லை என்று தெரிகிறது. அவர்களை அதிமுகவினரும் போலீசாரும் தூக்கிக் கொண்டு போய்விட்டதாகத் தெரிகிறது.

இதற்கிடையே ஊட்டியில் எனது குடும்பத்தினரை சிபிசிஐடி போலீஸார் தொலைபேசி மூலம் மிரட்டுகின்றனர் என்று நடிகர் கார்த்திக் புகார் கூறியுள்ளார்.

கார்த்திக் கட்சி வேட்பாளர்களுக்கும், பிரமுகர்களுக்கும் அதிமுக தரப்பு கடும் நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறது. இந்த மிரட்டலால் ஒரு வேட்பாளர் தற்கொலையே செய்து கொண்டார்.

அதே போல ஆண்டிப்பட்டியில் முத்துராமலிங்கத் தேவரின் சிங்கம் சின்னம் போட்டியிட்டால் தங்கள் நிலைமை கவலைக்கிடமாகி விடும் என்பதால் பார்வர்ட் பிளாக் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளரை வாங்கிவிட்டது அதிமுக.

அங்கு மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்யவிருந்த கார்த்திக் திடீரென காணாமல் போய் (கடத்தப்பட்டு??) மனு தாக்கலுக்கான நேரம் முடிந்த பிறகே வெளியில் வந்தார்.

இந் நிலையில் மதுரையில் நடந்த பார்வர்ட் பிளாக் கட்சி கூட்டத்தில் பல்வேறு பரபரப்பான நிகழ்ச்சிகள் நடந்தன.

கார்த்திக்கின் பார்வர்ட் பிளாக் கட்சி மொத்தம் 64 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு விட்டனர். இதில், திருமங்கலம் தொகுதி வேட்பாளர் செந்தில் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.

20 வேட்பாளர்களைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எங்கு சென்றார்கள், யாரேனும் கடத்தினார்களா என்று தெரியவில்லை.

இதைத் தொடர்ந்து மீத¬ள்ள 43 வேட்பாளர்களையும் பத்திரப்படுத்த கார்த்திக் முடிவு செய்தார். இதற்காக ஊட்டியிலிருந்து அவர் மதுரை வந்தார்.

திருப்பரங்குன்றத்தில் உள்ள தனமணி திருமண மண்டபத்திற்குத் தனது கட்சியின் வேட்பாளர்கள் 43 பேரை வரவழைக்க உத்தரவிட்டார். அதன்படி அனைவரும் வரவழைக்கப்பட்டனர்.

கல்யாண மண்டபத்திற்கு வந்த கார்த்திக் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது வேட்பாளர்கள் அனைவரும் நீங்கள் எங்களது தொகுதிகளுக்குப் பிரசாரம் செய்ய வர வேண்டும். அப்போதுதான் வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய முடியும் என்று கேட்டுக் கொண்டனர்.

அதுகுறித்து பரிசீலிப்பதாக கூறிய கார்த்திக் மீண்டும் உங்களை சந்திகிகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார்.

அவர் போன பின்னர் மண்டபத்திற்கு பார்வர்ட் பிளாக் கட்சியின் தொண்டர்கள் வேட்பாளர்களுக்கு பாதுகாப்பாக இருந்தனர். உள்ளே இருப்பவர்கள் வெளியே வரவும், வெளியில் இருந்து யாரும் உள்ளே போகாமலும் அவர்கள் பலத்த பாதுகாப்பை மேற்கொண்டனர்.

அதிமுகவினரால் தங்களது வேட்பாளர்கள் கடத்தப்படாமல் பாதுகாக்கவும், வேட்பாளர்கள் தவறான முடிவுக்குப் போகாமல் தடுக்கவுமே இந்த நடவடிக்கை என கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக், பிரசாரம் செய்ய முடியாத வகையிலும், தொகுதிப் பக்கம் நடமாட முடியாத வகையிலும் எங்களது கட்சி வேட்பாளர்கள் மிரட்டப்படுகின்றனர். யார் மிரட்டுகிறார்கள் என்பது மக்களுக்குத் தெரியும்.

இப்படிப்பட்ட மிரட்டல் காரணமாகவே செந்தில் தற்கொலை செய்து கொண்டார். எனது குடும்பத்தினரைக் கூட மிரட்டியுள்ளனர்.

ஊட்டியில் எனது வீட்டுக்குப் போன் செய்து சிபிசிஐடி போலீஸார் என்று கூறி மிரட்டியுள்ளனர். உசிலம்பட்டியில் மட்டும் எங்களுக்கு சிங்கம் சின்னம் கிடைக்கவில்லை. மற்ற 63 தொகுதிகளிலும் நாங்கள் சிங்கம் சின்னத்தில் போட்டியிடுகிறோம்.

எங்களை யாரும் சீண்டிப் பார்க்க வேண்டாம். சில விஷயங்களை (தான் கடத்தப்பட்டது) வெளியில் சொல்ல விரும்பவில்லை. சொன்னால் சட்டம் ஒழுங்குக்கு பாதகம் ஏற்படும். நாங்கள் ஒரு முடிவு எடுத்து விட்டோம்.

எனவே மதுரை ஆதீனம் போன்றவர்கள் என்னைச் சுற்றி வரத் தேவையில்லை என்றார் கார்த்திக்.

இதன்மூலம் மதுரை ஆதீனம், கார்த்திக்கை தொடர்ந்து விரட்டிக் கொண்டிருப்பது தெளிவாகிறது.

மிரட்டவில்லை: தேவர் பேரவை இதற்கிடையே பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளர்களை நாங்கள் மிரட்டவில்லை. கார்த்திக்தான் முக்குலத்தோர் மக்களை குழப்பி வருகிறார் என்று தமிழ்நாடு தேவர் பேரவை தலைவர் சீனிச்சாமித் தேவர் கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், முக்குலத்தோர் சமுதாயத்தால் பெரிதும் மதிக்கப்படுகிற மறைந்த நடிகர் முத்துராமனின் மகன் கார்த்திக், முக்குலத்து மக்களை திசை திருப்பும் செயலில் ஈடுபட்டுள்ளார். இதற்கு இளைஞர்கள் பலியாகி விடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்.

அதிமுகவுடன் கூட்டணி என்று ஆரம்பத்தில் கூறி வந்த கார்த்திக், சந்தானம் எம்.எல்.ஏ.வுடன் சேர்ந்து எளிதாக கூட்டணி அமைத்திருக்கலாம். ஆனால் அதை விட்டு விட்டு திடீரென திமுக பக்கம் தாவினார் கார்த்திக். அவர்களுக்கு ஆதரவாக இப்போது செயல்பட்டு வருகிறார்.

முக்குலத்தோர் சமுதாயம் ஒற்றுமையுடன் திகழ முத்துராமன் பாடுபட்டார். ஆனால் அவரது புதல்வர் கார்த்திக்கோ, தனது தந்தையின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார். இதன் பின்னணியில் திமுக உள்ளது. இதை தேவர் பேரவை முறியடிக்கும்.

தனது கட்சி வேட்பாளர்கள் மிரட்டப்படுவதாக கார்த்திக் கூறுவதில் துளியும் உண்மை இல்லை. அந்த வேலையில் நாங்கள் ஈடுபடவில்லை. ஆனால் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் பார்வர்ட் பிளாக் வேட்பாளர்கள் போட்டியிலிருந்து வாபஸ் பெற்றதில் எங்களது பங்கு உள்ளதை நாங்கள் மறுககவில்லை.

அதிமுக மீண்டும் ஜெயிக்க வேண்டும், அதற்காக கடுமையாக உழைத்து வருகிறோம். கார்த்திக் பின்னால் இளைஞர்கள் தவறான பாதையில் போய் விடக் கூடாது என்பதற்காக கடுமையாக பாடுபட்டு வருகிறோம் என்றார் சீனிச்சாமித் தேவர்.

0 comments: