கலங்கடிக்குது கலர் டி.வி..!

‘‘இதுவரையில் நான் சென்ற தேர்தல் சுற்றுப் பயணங்களைவிட இந்த முறை பல மடங்கு வெற்றிகரமாகவும், பிரமாண்டமாகவும் என் சுற்றுப்பயணம் அமைந்தது. ஏற்கெனவே நான் கண்ட சுற்றுப் பயணங்களைவிட, இந்த முறை மக்களின் எழுச்சியை எல்லா இடங்களிலும் காண முடிந்தது...’’

&ஏப்ரல் 12&ம் தேதி தன் முதல்கட்டத் தேர்தல் பிரசாரத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு சென்னைக்குத் திரும்பி இருக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உற்சாக வார்த்தைகள்தான் இவை. உண்மையைச் சொல்லப் போனால், தன் பிரசாரப் பயணத்தைத் தொடங்கும்போது கருணாநிதியே இப்படி ஒரு மக்கள் வெள்ளத்தை நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

ஏன் இந்தத் திடீர் திருவிழா?

ஒரே வார்த்தையில் பதில் சொல்ல வேண்டு மென்றால்& இலவச கலர் டி.வி. என்ற திடீர் அலை தான்! இந்தத் தேர்தலில் எந்த அலையும் இல்லை என்று எல்லோரும் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் இப்படியரு திடீர் அலை கிளம்பி, தி.மு.க&வினர் உற்சாகத்தில் திளைக்க ஆரம்பித்துள்ளனர்.

இதைப்பற்றி பரவசத்துடன் நம்மிடம் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டனர் தி.மு.க. பிரமுகர்கள் சிலர்.

‘‘தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக எடுத்துச் சொல்லி, அது எப்படி சாத்தியம் என்று கலைஞர் பேசுவதைக் கேட்பதற்காகவே அத்தனை மக்களும் வருகின்றனர். குறிப்பாக, Ôவறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் மக்களுக்கு வீடுதோறும் இலவசமாக வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்படும், கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு வழங்கப்படும், நிலமில்லாதவர்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம் வழங்கப்படும்Õ என்ற அறிவிப்புகள் மக்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது.

‘இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி எப்படிக் கொடுப் பார்கள்? இப்போது எட்டு ரூபாய் ஐம்பது பைசாவுக்கு ஒரு கிலோ அரிசியை வாங்கி, மூன்று ரூபாய் ஐம்பது பைசாவுக்கு ரேஷனில் கொடுக்கும்போதே சில ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம். அப்படி இருக்கும்போது, இது எப்படி சாத்தியம்? அதுபோல இலவசமாக டி.வி. தருவோம் என்று சொல்லியிருப்பதும் சுத்த ஹம்பக்’ என்று அ.தி.மு.க. தரப்பில் கிண்டலடித்தார்கள். மக்களும்கூட சந்தேகப்பட்டார்கள்.

ஆனால், இந்த விமர்சனங்களை எல்லாம் பிரசார மேடைகளில் தவிடுபொடியாக்கி விட்டார் கலைஞர். அதனால்தான் இந்த விவகாரத்தை மேற்கொண்டு ஊத முடியாமல், தடுமாற ஆரம்பித்து விட்டார்கள் அ.தி.மு.க&வினர். அதனால், ‘இலவச டி.வி. கொடுப்பார்கள், சரி... இலவசமாக கேபிள் டி.வி. இணைப்பையும் கொடுப்பார்களா?’ என்று இப்போது வீம்பு பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இது மக்களை வெறுப்படைய வைத்திருக்கிறது. இந்தத் திட்டம் சாத்தியம் என்றால், ‘நாங்கள் டி.வி&யோடு டி.வி.டி. பிளேயரும் சேர்த்துக் கொடுக்கிறோம் என்று அ.தி.மு.க&வினர் சொல்லலாமே... ஏன் இப்படி விதண்டாவாதம் செய்ய வேண்டும்?’ என மக்கள் எரிச்சல் அடைந்துவிட்டனர். இருந்தாலும், முதல்வர் ஜெயலலிதா, ‘இது கருணாநிதியின் ஏமாற்று வேலை...’ என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். இதுவே அவருக்கு எதிராக மக்களைத் திருப்பி விடும் பாருங்கள்’’ என்றனர் அந்தப் பிரமுகர்கள்.

கலர் டி.வி. அறிவிப்பால் கிடைத்த அமோக உற்சாகத்தில், தமிழகம் முழுவதும் வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் மக்களைக் கணக்கெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள் தி.மு.க&வினர். இந்தத் திட்டத்தை நிறைவேற்றும் எண்ணத்தோடுதான் நாங்கள் சொல்லியிருக்கிறோம் என்ற நம்பகத்தன்மையை ஏற்படுத்தவே கணக்கெடுக்கும் பணியை முடுக்கி விட்டிருக்கிறது தி.மு.க!

இலவச கலர் டி.வி. திட்டத்தைத் தயாரித்துக் கொடுத்ததில் திருவல்லிக்கேணி தி.மு.க. வேட்பாளரான பேராசிரியர் நாகநாதனுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது என்கிறார்கள். அவர் தனது பேராசிரிய நண்பர்களோடு கலந்து பேசித்தான் இப்படியரு திட்டத்தைத் தீட்டியதாகச் சொல்லப்பட, அந்த நண்பர்கள் சிலரிடம் பேசியபோது டெக்னிக்கலான விளக்கங்களை அள்ளிப்போட்டார்கள்.

‘‘தொலைக்காட்சிப் பெட்டியில் முக்கியமான பாகம் பிக்சர் டியூப்தான். கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில்தான் அதிக அளவில் பிக்சர் டியூப்கள் தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலான டி.வி. தயாரிப்பு கம்பெனிகள் இந்த நாடுகளிலிருந்து பிக்சர் டியூப்களை இறக்குமதி செய்து நம்நாட்டில் அசெம்பிள் செய்துதான் விற்பனை செய்கின்றன. இறக்குமதி செய்யப்படும் பிக்சர் டியூப்களுக்கு மத்திய அரசு 40 சதவிகிதம் வரை சுங்க வரி வசூலிக்கிறது. மத்திய அரசின் இந்த வரியை முழுமையாக நீக்கிவிட்டால், கிட்டதட்ட பிக்சர் டியூபின் விலை பாதியாக குறைந்து விடும். மேலும் லட்சக்கணக்கில் பிக்சர் டியூப்களை வெளிநாட்டில் இருந்து வாங்கும்போது, பேரம் பேசி இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும்.

அதேபோல, அரசே இங்கு டி.வி. பெட்டிகளை அசெம்பிள் செய்து தரும்போது, பிக்சர் டியூப்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்துதரும் நிறுவனத்துக்குக் கிடைக்கும் லாபம், டி.வி&யை விற்பனை செய்யும் மொத்த வியாபாரிக்குக் கிடைக்கும் லாபம் ஆகியவையும் அரசுக்கே கிடைக்கும். இதனால் இன்னும் பணம் மிச்சப்படும். தமிழகத்தில் வேலை வாய்ப்பையும் பெருக்கலாம். மொத்தத்தில் ஒரு கலர் டி.வி&யை இரண்டாயிரம் ரூபாய் அல்லது இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் அடக்கவிலையில் கொடுக்க முடியும்.

இந்தியாவைப் பொறுத்தவரை, பதினாறு பெரிய கம்பெனிகள் கலர் டி.வி&க்களைத் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றன. இவற்றில் குறிப்பிட்ட சில கம்பெனிக்காரர்களிடம் கலர் டி.வி. திட்டம் பற்றி கேட்டபோது, ‘தமிழக அரசு சார்பில் இப்படியரு திட்டம் கொண்டு வந்தால், அதற்கு நாங்கள் முழுமையாக உதவி புரிவோம்’ என்று சொல்லி இருக்கிறார்கள்.

அடுத்து, இந்தத் திட்டம் இரண்டாண்டு காலத்துக்குள் முடிக்கப்படுவதாக சொல்லப்பட்டு இருக்கிறது. அதனால் இது நிச்சயம் சாத்தியம்தான். 2001&ம் ஆண்டில் மத்திய அரசு எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பை வைத்தே வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை கணக்கிட்டுவிடலாம். இல்லையென்றால், சத்துணவு அமைப்பாளர்கள், ரெவின்யூ ஊழியர்கள், ஆசிரியர்களைப் பயன்படுத்தி கணக்கெடுப்பு நடத்தலாம். கடைசியாக எடுத்த கணக்கெடுப்புப் பிரகாரம் தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் மக்களில் டி.வி. இல்லாதவர்கள் சுமார் 22 லட்சம் பேர். அது இன்னும் கொஞ்சம் கூடலாம். அல்லது வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் மக்களுக்கென்று வெளிர் சிவப்பு நிறத்தில் வகை பிரித்து ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டிருக்கிறது. அதனை வைத்தும் எவ்வளவு பேருக்கு டி.வி. வழங்க வேண்டும் என்று கண்டு பிடித்து விடலாம்...’’ என்றவர்கள், ‘‘தி.மு.க. தரப்புச் சொன்னால் மத்திய அரசு எதையும் செய்யத் தயாராக இருக்கும். அதனால்தான் இந்தத் திட்டம் சாத்தியப்படும் என்பதை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மேடைதோறும் சொல்லி வருகிறார். டி.வி. ஓகே ஆனால், கேபிள் கனெக்ஷனை யார் கொடுப்பார்கள் என்ற கேள்விக்கும் பதில் இருக்கிறது. டி.டீ.ஹெச். எனப்படும் வீடு தேடி வரும் நேரடி ஒளிபரப்பு முறையில் ஒரு ஆன்டெனா மூலமாக வீட்டில் கேபிள் இணைப்பு இல்லாமல் டி.வி. பார்க்கமுடியும். அந்த ஆன்டெனாவை மொத்தமாக வாங்கும்போது அறுநூறு ரூபாய்க்குக் கிடைக்கும். ஒரு முறை செலவு செய்து இந்த ஆன்டெனாவைப் பொருத்தி விட்டால், மாதாமாதம் கேபிள் கட்டணமாக நூறில் இருந்து இருநூறு வரையில் செலவு செய்யத் தேவையில்லை.

ஆனால், இந்த டி.டீ.ஹெச். முறையில் நாம் விரும்பும் சேனல்கள் அத்தனையும் கிடைக்காது. தமிழில் சன் டி.வி மற்றும் பொதிகைச் சேனல்கள் தவிர மற்றவை தெரியாது. விரைவில் எல்லா சேனல்களும் தெரியுமாறு ஏற்பாடு செய்து விடுவார்கள்.

அடுத்து, ‘ஆட்சிக்கு வந்தபிறகு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவார்களா?’ என்ற சந்தேகக் கேள்வி எதிர்த்தரப்பினரால் எழுப்பப்படுகிறது. இவ்வளவு தூரம் தேர்தல் அறிக்கையில் சொல்லி, அது மக்களைச் சென்றடைந்துவிட்ட பிறகு அதை நிறைவேற்றாமல் இருக்க முடியாது’’ என்று சொல்லி முடித்தார்கள் நாகநாதனின் நண்பர்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில், 22 முக்கிய நகரங்களில் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்து வருகிறது பேபி எலெக்ட்ரானிக்ஸ் என்ற நிறுவனம். நினைத்துப் பார்க்க முடியாத விலையில் டி.வி., ஃபிரிஜ், வாஷிங் மெஷின், ஏர்&கண்டிஷன் போன்ற பொருட்களை இந்த நிறுவனம் விற்பனை செய்துவருகிறது. அவர்களிடம் இந்த கலர் டி.வி. பற்றிபேசியபோது, ‘‘அதிகமான எண்ணிக்கையில் பொருட்களை வாங்கும்போது குறைந்த விலைக்கு வாங்க முடிகிறது. இதனால் பொருளின் அடக்கவிலை குறைகிறது. ஆயிரம், இரண்டாயிரம் எண்ணிக்கையில் பொருட் களை வாங்கும்போதே இப்படி என்றால், லட்சக்கணக்கில் பொருட்களை வாங்கும்போது இன்னும் மலிவாக வாங்க முடியும். எனவே அரசாங்கத்தால் கலர் டி.வி. வழங்க முடியும்’’ என்கிறார்கள், பேபி எலெக்ட்ரானிக்ஸ் தரப்பில்.

ஆனால், ‘இதெல்லாம் சாத்தியமில்லாதவை’ என்று அடித்துச் சொல்லுகிறது அ.தி.மு.க. தரப்பு,

‘‘இலவசமாக கலர் டி.வி. தரப்போவதாக அறிவிக்கப்போகிறார்கள் என்றதும் இது சாத்தியமா என்று விசாரணையில் இறங்கினோம். இந்தியா முழுவதும் டி.வி&க்களை சப்ளை செய்யும் நிறுவனங்களின் சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப் பினரான பிரசாத் என்பவரிடம் இது குறித்துக் கேட்டபோது, ‘இதெல் லாம் சாத்தியமில்லாத விஷயம்’ என்று தெளிவாகச் சொன்னார். அதன்பிறகுதான் கருணாநிதியால் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்று நாங்கள் சொல்கிறோம். இலவச கலர் டி.வி. மட்டுமின்றி தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சாத்தியமில்லாத பல வாக்குறுதிகள் இலவசம் என்ற பெயரில் அள்ளி வீசப்பட்டிருக்கிறது. கிட்டதட்ட பதினேழு அறிவிப்புகள் அரசுக்கு செலவு வைக்கக்கூடியவை. இவற்றை நிறைவேற்ற ஆரம்பித்தால், அரசு கஜானா துடைக்கப்பட்டு விடும். இதை சரிகட்ட பஸ் கட்டணம், நில வரி, வீட்டு வரி, வணிக வரி, தொழில் வரி என எல்லா வரிகளும் உயர்த்தப்படும். இது நடுத்தர மக்களை நடுத்தெருவுக்குக் கொண்டுவந்துவிடும்...’’ என்கிறார்கள்.

இலவசம் என்பதே ஏமாற்று வேலை என்பதை காலகாலமாக எல்லா அரசியல்வாதிகளும் சொல்லி வந்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். இலவச சத்துணவு... இலவச காலனி... என்று கொடுத்தபோது, அதையெல்லாம் கிண்டல் அடித்தவர்கள்தான் தி.மு.க&வினர். ஆனால், அவர்களே... இன்றைக்கு இலவசத்தைத் தூக்கிப் பிடித்திருக்கிறார்கள். இந்த Ôஇலவச ஆசைÕ தி.மு.க&வுக்கு வெற்றியைக்கூடத் தேடி தரலாம். ஆனால், இதெல்லாம் மக்களை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்லுமா என்பது மில்லியன் டாலர் கேள்விதான்!

நன்றி ஜூனியர் விகடன்.

0 comments: