கிரிப்டோகிராபியும் ஜல்லியடித்தலும்

நான் வழக்கமான பதிவுகளாக இல்லாமல், ஆழமான பதிவுகள் மட்டுமே போடவேண்டும்(தலைப்பில் கூட உம்மைத்தொகையிருக்கிறது.) என நினைத்ததும் நினைவுக்கு வந்த முதல் எண்ணம் சோழர்களைப்பற்றி, அடுத்து நினைவிற்கு வந்தது தான் இந்த கிரிப்டோகிராபி.

கிரிப்டோகிராபி என்பது ஒன்றும் பெரிய விளங்காத விஷயமில்லை, சுலபமானதுதான். சில கணித முறைகளைப்பயன்படுத்தி தகவல்களை பாதுகாப்பாக வைத்திருப்பதுதான் கிரிப்டோகிராபி. முக்கியமாக தகவல்தொடர்பின் பொழுது. அதாவது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தகவலை பரிமாறும் பொழுது இடையில் இருப்பவர்களிடம் இருந்து அந்தத் தகவலை பாதுகாப்பது.

ஆரம்ப காலங்களில் தகவல்களை எழுதியனுப்பும் பொழுது மற்றவர்களுக்கு புரியாதவகையில் எழுது அனுப்புவதில் இருந்து தொடங்கியது இந்த கிரிப்டோகிராபி. இது கிட்டத்தட்ட ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது என்று கருதப்படுகிறது. முன்காலங்களில் ஒற்றர்கள், ராணுவத்தளபதிகள், அரசர்கள் இவர்களுக்கிடையில் கருத்துப்பரிமாற்றத்திற்கு உறுதுணையாக இருந்து வந்த இந்த கிரிப்டோகிராபி இப்போது பலபடிகள் உயர்ந்து உலகின் மிகமுக்கியமான ஒரு விஷயமாக பரிமாணம் பெற்றிருக்கிறது.

இதன் வரலாறு சுமார் கி.மு. நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்குகிறது, அப்பொழுது எகிப்தில் வாழ்ந்த மன்னர்கள் முதற்கொண்டு, ரோம சாம்ராஜியம், கிரேக்க சாம்ராஜியம் என ஆளுக்காள் உபயோகித்து, நாளொருமேனியும் பொழுதொறு வண்ணமாய் வளர்ந்து வந்திருக்கிறது இந்த கிரிப்டோகிராபி.





பண்டையகாலத்தில் எகிப்தியர்கள் பயன்படுத்தியவிதம்

ஒரு சமயம் எங்கள் தமிழய்யா சொன்னது ஞாபகம் வருகிறது, தமிழில் இதுபோன்ற விஷயங்கள் உண்டென்றும் பாடல்களிலிலேயே இம்மாதிரி எழுதுவதுண்டு என்றும் சொன்னார். அதாவது ஒரு பதினாறு அடி கொண்ட பாடல் இருந்தால் அதில் இருந்து சில சில வார்த்தைகளை மட்டும் எடுத்து தனியாகப் படித்தால் வேறு ஒரு பொருள் தரும் என்றும், தான் இளங்கலை முதுகலை தமிழ் படித்தபொழுது படித்ததாக நினைவு உண்டென்றும் சொல்லியிருந்தார். நம்மவர்கள் கணக்கில் வல்லவர்கள், பாடல்களுக்கே கணக்கு வைத்து, பாடிக்கொண்டிருக்கும் பொழுது இலக்கணம்(கணக்கு?) தவறுகிறதா என கண்டுபிடித்த புத்திசாலிகள் அல்லவா அவர்கள்.

புரியும்படி ஒரு சிறு உதாரணம் தருகிறேன்,

இப்போ நீங்க மோகன்னு எழுத வேண்டுமென்றால், mohan அப்படின்னு எழுதாம என்கிரிப்ட் பண்ணி இப்படி prkdq ன்னு எழுதலாம், அதாவது நீங்கள் ஆங்கில் எழுத்தின் முதல் எழுத்தான a க்கு பதில் முதல் எழுத்தாக d யை வைத்துக்கொண்டு, mohan என்பதை, prkdq என எழுதலாம் இதை நீங்கள் ஒரு தகவலாக உங்களிடமிருந்து மற்றவருக்கு அனுப்பினால் அவரிடம் இந்த prkdq வந்து சேர்ந்ததும், அவர் இதில் இருந்து mohan ஐ வரவழைக்க முடியும், நீங்கள் எப்படி இந்த பார்மேட்டை உருவாக்கினீர்கள் என்று சொல்லியிருந்தால் அதாவது a க்குபதில் d என்பதை. இதைத்தான் சிப்பர்(cipher) என்று சொல்வார்கள். முன்பு சொன்னதைப்போல் இந்த கிரிப்டோகிராபி, சீசரின் காலத்திலும் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக(?) சீசர் சிப்பர் என்ற ஒரு முறை வழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. (நான் கூட உபயோகப்படுத்தியிருக்கிறேன்.!!!)

இதைப்போல் தகவல்களை உருவாக்குவதற்கும், பிறகு மாற்றப்பட்ட(என்கிரிப்ட் செய்யப்பட்ட) தகவல்களை சாதாரண தகவல்களாக மாற்றுவதற்கும் ஆரம்பகாலத்தில் மனதாலேயே கணக்குப்போட்டுத்தான் செய்தனர். ஆனால் பிற்காலத்தில் இது புதுவடிவம் பெற்று இதற்கென இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன, அதாவது நீங்கள் mohan என்று தட்டச்சினலே அந்த இயந்திரம் prkdq என்று தட்டச்சும்.

இது போன்ற இயந்திரங்கள் தட்டச்சுவதற்கு மட்டும் பயன்படாமல், தொலைபேசி கண்டறியப்பட்ட பிறகு, இராணுவ விஷயங்களை தொலைபேசுவற்கும் கண்டறியப்பட்டது, அதாவது தகவலை சாதாரணமாக நீங்கள் தொலைபேச அது பாதுகாக்கப்பட்ட (என்கிரிப்டட்) தகவல்களாக மற்றவர்களை சென்றடையும், அதாவது தகவல் பரிமாறப்படும் பொழுது அது பாதுகாக்கப்பட்ட தகவலாகவே இருக்கும், அந்தப்பக்கம் போய்ச்சேர்ந்த பிறகு அந்தத் தகவல்களை மீண்டும் சாதாரண தகவல்களாக மாற்றவும் இயந்திரங்கள் இருந்தன.

இங்கேத்தான் கோட்பிரேக்கர்ஸ்(code brakers) வராங்க, அதாவது நீங்கள் அனுப்பும் தகவல் உங்களுக்கு மட்டும் அல்லாமல் உங்கள் எதிரிகளையும் சென்றடையும்(ஒலிஅலைகளை கடத்தியாக பயன்படுத்துவதால்). அதனால் அவர்களிடம் உங்கள் பாதுகாக்கப்பட்ட தகவலானது, சிப்பர் இருந்தால் சுலபமாக படிக்க முடிந்துவிடும். அதற்குத்தான் கோட்பிரேக்கர்ஸ் என்பவர்கள் தேவைப்பட்டார்கள். அதாவது நம் உதாரணத்தின் படி பார்க்கவேண்டுமானால் prkdq என்பதை வைத்து அவர்கள் mohan என்பதை உருவாக்க முயற்சிப்பார்கள், அதாவது நாம் பயன்படுத்திய a என்றால் d என்பதை கண்டறிய முயல்வார்கள். இவர்கள் தான் கோட்பிரேக்கர்ஸ் என்று அழைக்கப்படுகிறார்கள். இதைப்போன்றே கோட்மேக்கர்ஸ் என்பவர்கள் a என்றால் d என உருவாக்குபவர்கள்.

நான் உங்களுக்கு உதாரணமாக சொன்னதைப்போன்று சுலபமாக இருக்காது அந்த பாதுக்கப்பட்ட தகவல், நான் உபயோகித்தது a உடன் மூன்றைக்கூட்டி d என்ற ஒரு சுலபமான சமாசாரத்தை. இரண்டாம் உலகப்போரின் பொழுது ஜெர்மனியினர் உபயோகித்த சிப்பர்கள் மிகப்பெரிய அடுக்குகளைக்(permutations) கொண்டது அதாவது இரண்டின் அடுக்கு 238 (2 pow 238) என வைத்துக்கொள்ளலாம். அவர்கள் நினைத்தார்கள் இந்த சிப்பர்களை யாராலும் உடைக்க முடியாது என்று. ஆனால் அமேரிக்கா இதற்காகவே சுமார் 30,000 நபர்களை வேலைக்குவைத்து அவர்களுடைய சிப்பர்களை சாமர்த்தியமாக உடைத்துவிட்டார்கள்.



ஜெர்மானியர்களின் உபயோகப்படுத்திய Enigma இயந்திரம்

அதைப்போலவே ஜப்பானியர்களினுடையதையும், அவர்களுடைய பிரபலமான கடல்படையின் JN - 25, என்ற சிப்பரை (crypto systems) உடைத்தார்கள், இதை வைத்துக்கொண்டு அவர்களுக்கு முத்துத்துறைமுகம்(perl harbour) ஜப்பானியர்களின் தாக்குதலுக்கு உள்ளாகப்போகிறது என்ற தகவலும் கிடைத்திருக்கிறது. ஆனால் அவர்களின் தயார்படுத்தும் அல்லது உஷார்படுத்தும் அல்லது எச்சரிக்கும், அரசு இயந்திரம் சரியாக செயல்படாததால் தான் அவர்களால் அந்த தாக்குதலை தடுக்கமுடியவில்லை. இதை நினைக்கும் பொழுது எனக்கு இந்தியாவை தாக்கிய சுனாமிதான் நினைவில் வருகிறது. அப்பொழுது பலர் கேட்டது, அம்மேரிக்கா எச்சரித்திருக்கலாமே என்ற கேள்வியை, அதைப்பற்றி எழுதும் பொழுது சுஜாதா சொன்னது,

நம்முடைய அரசாங்கத்தின் தொடர்பு கொள்ளும் தன்மை மோசமானது, அமெரிக்க அரசு, இந்திய அரசை தொடர்புகொண்டு, இந்திய அரசு, தமிழக அரசை தொடர்பு கொண்டு இப்படியாக ஒரு பெரும் சுழற்சி முடிந்து மக்களை சென்றடையும் பொழுது சுனாமி தாக்கியிருக்குமென்று சொன்னதாக நினைவு. அதேபோல் நீங்கள் நம் மக்களிடம் சுனாமி என்று சொன்னால் அதன் விபரீதத்தை உணராமல் போய்ப்பார்க்கத்தான் பலர் விரும்புவார்கள் என்றும் சொல்லியிருந்தார் அதைப்போலத்தான் இதுவும் அந்தக்காலத்தில் அமேரிக்காவின் அரசாங்கத்தின் நிலையும் இப்படித்தான் இருந்தது அதனால் தான் அவர்களால் அந்த தாக்குதலை முறியடிக்க முடியவில்லை.

ஆனால் பிற்காலத்தில் பல ஜப்பானிய தாக்குதல்களை முறியடித்தனர். இன்னும் நன்றாக சொல்லவேண்டுமானால் அமெரிக்காவும் நேச நாடுகளும் இரண்டாம் உலகப்போரில் வெற்றிபெற இந்த கிரிப்டோகிராபி மிகவும் பயன்பட்டிருக்கிறது.

இதைப்பற்றியும் இன்றைய காலத்தில் வழக்கத்தில் உள்ள சில கிரிப்டோ முறைகளைப்பற்றியும் அடுத்த முறை பார்ப்போம்.

1 comments:

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

கிரிப்டோகிராபி பற்றிய பதிவு, எளிமையாகவும், அடிப்படைகளை விளக்கி சொல்லும் விதமாகவும் உள்ளது வாழ்த்துக்கள். Subsitution cipher, Transposition cipher பற்றி விளக்கி இருக்கலாம். அடுத்த பதிவில் இன்று நடைமுறையில் உள்ள 128 key symmentry கிரிப்டோகிராபி போன்றவற்றைப் பற்றி விளக்கி சொல்லவும்.