செல்விக்காக கட்சி மாறிய சரத் மிரளவைக்கும் பிண்ணனி



கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒன்பது மணி.. தென் மாவட்ட சரத்குமார் ரசிகர் மன்றத் தலைவர்களின் செல்போன்கள் சிணுங்கின. ‘‘நாளை காலை ஏழரை மணிக்கு மதுரை விமான நிலையம் வந்திருங்க. எவ்வளவு ரசிகர்களோடு வரமுடியுமோ, அவ்வளவு ரசிகர்களோடும் கணிசமான வாகனங்களிலும் வாருங்கள். வாகனங்களில் நம் மன்றக் கொடி கட்டாயம் கட்டியிருக்கவேண்டும். மற்றவற்றை நாளைக்குப் பேசிக்கலாம்.’’ _ தலைமை ரசிகர் மன்றத்திலிருந்து வந்த இந்த உத்தரவை மாவட்டத் தலைவர்கள் பவ்யமாகக் கேட்டுக் கொண்டார்கள்.

சரத்குமார் ரசிகர்களின் வேன்களின் படையெடுப்பால் காலை ஏழு மணிக்கே மதுரை விமானநிலையம் திணறியது. பத்தரை மணிக்கு விமானம் மதுரையைத் தொட்டது. ராதிகாவுடன் வந்த சரத்குமாருக்கு அவரது ரசிகர்கள் ஆரவார வரவேற்பு அளித்தார்கள்.

மதுரை சங்கம் ஹோட்டலுக்கு காலை பதினொன்றேகால் மணிக்கு ராதிகாவுடன் வந்தார் சரத்குமார். பத்திரிகையாளர்களும் ரசிகர்களும் சூழ்ந்து கொள்ள.. ‘‘பத்து நிமிடத்தில் வந்து உங்களிடம் பேசுகிறேன்...’’ என பத்திரிகையாளர்களை தவிர்த்துவிட்டு, ராதிகாவை கூட்டத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் அரவணைத்தவாறு சென்றார். ராதிகாவின் முகம் இறுக்கமாகவே இருந்தது.

மீண்டும் அவர் நிருபர்களைப் பார்த்தபோது, ‘அ.தி.மு.க.வில் சேரப் போகிறீர்களா..?’ எனக் கேட்டார்கள். ‘‘முதல்வரைச் சந்தித்த பிறகு சொல்கிறேன்’’ என்றார். ‘உங்கள் முடிவில் மாற்றமிருக்குமா?’ எனக் கேட்டபோது.. ‘‘நாட்டாமை முடிவு முதல்வரைப் பார்த்த பிறகு தெரியும்..’’ எனச் சிரித்தவாறே அறையை விட்டு வெளியேறினார். முதலில் அவர் பேட்டியளிப்பதாகத்தான் இருந்தாராம். ஆனால், அவருக்கு வந்த திடீர் உத்தரவை அடுத்து பேட்டியை ரத்து செய்தாராம்.

ஹோட்டலை விட்டு வெளியே வந்த சரத்குமார், காரை அவரே ஓட்டிக்கொண்டு தேனியை நோக்கிக் கிளம்பினார். இந்தக் கார் சரத்திற்காக ஞாயிற்றுக்கிழமை இரவே சென்னையிலிருந்து புறப்பட்டு இங்கு வந்துவிட்டதாம். அவர் காரைத் தொடர்ந்து அவரது ரசிகர்களின் வாகனங்கள் அணிவகுத்தன.

நடராஜனின் தம்பி ராமச்சந்திரன் என்பவர்தான் சரத்குமாரை முதல்வரிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பை ஏற்றிருந்தராம். அவரது காரும் பின்னாலேயே புறப்பட்டுச் சென்றது.

மதியம் அவர் தங்கியிருந்த வீட்டில் 1.20_க்கு தேனி வந்து சேர்ந்தார் சரத். 15 நிமிடங்கள் சரத், ராதிகா இருவரும் தனியாக ஜெ.வை அவர் தங்கியிருந்த வீட்டில் சந்தித்துப் பேசினர். பின்னர் டி.டி.வி. தினகரனுடன் சரத் தம்பதியர் 15 நிமிடம் பேசினர். அதன் பின்னால் சரத்திற்கு ஜெ. தன் கையால் அ.தி.மு.க. அடையாள அட்டையை வழங்கினார். இருவரிடமும் மிக சந்தோஷமாகப் பேசிய முதல்வர், தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் போஸ் கொடுத்தார்.

வீட்டிலிருந்து வெளியில் வந்த சரத்குமார், நிருபர்களிடம், ‘‘தி.மு.க.விலிருந்து குடும்ப அரசியல் காரணமாகத்தான் விலகினேன். பல முன்னணித் தலைவர்களை மதிக்காமல், தற்போது தி.மு.க.வில் நுழைந்தவர்கள் அதிகாரம் செய்கின்றனர். நான் என் நண்பர்கள், ரசிகர்களின் கருத்தைக் கேட்ட பின்னால் தான் அ.தி.மு.க.வில் சேர முடிவெடுத்தேன். இன்று காலை 11 மணிக்கு என் எம்.பி. பதவிக்கான ராஜினாமா கடிதத்தை அனுப்பிய பின்னால்தான் இங்கு வந்துள்ளேன். 20_ம் தேதிக்கு மேல் அ.தி.மு.க.வுக்காகப் பிரசாரம் செய்வேன்!’’ என்றார்.

மிகவும் சலசலப்பாகப் பேச ஆரம்பித்த ராதிகா, ‘‘நான் என் கணவருடன் துணைக்குத்தான் வந்திருக்கிறேன். அ.தி.மு.க. பிரசாரத்திற்குப் போகமாட்டேன். என் கணவர் அ.தி.மு.க.வில் சேர்ந்ததால் ராடன் டி.வி.க்கு பாதிப்பு வராது. தி.மு.க., சன் டி.வி., ராடன் டி.வி. ஆகியவையெல்லாம் தனித்தனியாக இயங்குபவை இதனால் சன் டி.வி.யில் எனக்கு பிரச்னைகள் ஏற்பட்டால், ராடன் டி.வி. நிறுவனம் என்ன முடிவு எடுக்கிறதோ அதற்குக் கட்டுப்படுவேன்’’ என்றார்.

அன்று மாலையே இருவரும் சென்னைக்குத் திரும்பினர்.

சரத்குமாரின் இந்த முடிவு பற்றி அவருக்கு நெருங்கிய வட்டாரத்திலேயே விசாரித்தோம். ‘‘இது எதிர்பார்த்திருந்ததுதான், புதியதல்ல’’ என்ற சரத்குமாரின் பழைய நண்பர் ஒருவர், சில விவரங்களை விவரித்தார்.

‘‘சரத்குமாரின் தொடக்கக்காலம் மிஸ்டர் மெட்ராஸாகத்தான் இருந்தது. சென்னை ஆணழகனாக தேர்வான அவர், சாயாவைக் காதலித்து மணம் புரிந்துகொண்டார். அடையாறு கற்பகம் கார்டனில் குடியிருந்த அவர்கள், சில பிஸினஸ்களிலும் இறங்கினார்கள்.

அதில் வந்த லாபத்தில் ஒரு பங்கை எடுத்துத்தான் கொட்டிவாக்கத்தில் நான்கு கிரவுண்டில் இடத்தை வாங்கினார்கள். முறைப்படி சரத்திற்கு இரண்டு கிரவுண்ட், சாயாவிற்கு இரண்டு கிரவுண்ட் என இருந்தது. பின்னாளில் அது முழுவதும் சரத்துக்கு வந்துவிட்டது.

அப்போது சினிமாவிற்கு ஃபைனான்ஸ் செய்யும் வேலையையும் கவனித்து வந்தார்கள். அந்த வகையில் நடிகர் விஜயகாந்தின் ‘புலன் விசாரணை’ படத்திற்குப் பணம் கொடுத்திருந்தார்கள். அப்போது சரத்தின் உடல்வாகை கவனித்த விஜயகாந்த்தான், அவரை நடிக்க வற்புறுத்தி அந்த புலன் விசாரணையிலேயே முதன் முதலாக வில்லன் ரோல் கொடுத்தார்.

அந்த வகையில் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்ததே விஜயகாந்த்தான். ஆனால், பின்னாளில் நடிகர் சங்க விஷயத்தில் அவருக்கு எதிராகவே களமிறங்கினார் சரத். திரைப்படத் தொழிலாளர்கள் சார்ந்த ‘பெப்சி’யில் தி.மு.க. ஆதரவு பெற்றவர்களின் சர்வாதிகாரத்தை முறியடிக்க, அ.தி.மு.க.விற்கு ஒரு கரம் தேவைப்பட்டது. அந்தக் கரம் ‘சரத்’ தாக மாறினார்.

இதைத் தொடர்ந்து, போயஸ் கார்டனுடன் நல்லுறவு ஏற்பட்டது. எந்நேரமும் ஜெ.வுடன் பேசும் உரிமையைப் பெற்றிருந்தார். இதற்கிடையில் மும்பை வரவான நடிகை நக்மாவின் செல்வாக்கு, பல விதத்திலும் சரத்துக்கு உதவியாக இருந்தது. அப்போதுதான் ‘ரகசிய போலீஸ்’ படம் லண்டனில் எடுக்கப்பட்டது. அங்கே அனுமதியில்லாமல் படம் எடுத்தது, கூடுதல் செலவு என பெரிய நெருக்கடி. கேமராவை பிடுங்கி வைத்துக் கொண்டது அந்த அரசு. அந்தப் பிரச்னையைத் தீர்க்கச் சுமார் எழுபத்தைந்து லட்ச ரூபாய் வரை தேவைப்படவே, யாரும் சென்னை திரும்ப முடியவில்லை.

அப்போது உதவிக்கரம் நீட்டச் சொல்லி ‘கார்டனுக்கு’ பேசினார். அவர்களும் அப்போதைய அமைச்சர் ரகுபதி மூலமாக சுமார் ஒரு கோடி வரை கொடுத்து செட்டில் செய்து பிரச்னையைத் தீர்த்தார்கள். அதன்பிறகு சென்னை திரும்பினாலும் ரகசிய போலீஸ§க்கு ஏகச்சிக்கல். எல்லாவற்றிற்கும் ‘கார்டன்’ உதவியது.

இந்த நேரத்தில்தான் மனைவி சாயாவை உதறினார்.

இந்த நிலையில் லண்டன் நெருக்கடிக்காகக் கொடுத்த பணத்தைக் கேட்கத் தொடங்கியது கார்டன் தரப்பு. தினமும் ஆள் விட்டுப் பார்த்தார்கள். பணத்தை எடுத்துச் சென்று கொடுத்த ரகுபதியே சரத் வீட்டிற்கு நடையாய் நடக்கத் தொடங்கினார். இதில் மொத்தமாக மூன்று கோடி ரூபாய் பாக்கி. சமாதானப்படுத்தும் விதமாக ஏதாவது செய்ய வேண்டுமே.

அதற்காகவே ஜூ.டி.வி.யின் தமிழ் சேனலுக்கு ஒரு சிறப்புப் பேட்டியை ரெடி செய்தார் சரத். அதில் ‘அம்மா’ புகழ் பற்றி அதிகம் பாடினார். பேட்டி வெளி வந்தால் பணத்திற்கான விரட்டல் குறையும் என்ற கணக்கு. ‘கார்டன்’ தரப்பு விடுவதாய் இல்லை. நிலைமை மோசமானது. அப்போது 1996 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த நேரம். தப்பிப்பதற்காக தி.மு.க.வில் சேர எண்ணியவருக்கு, அவர் நடித்த படமொன்றை அ.தி.மு.க. தரப்பு டி.வி.யில் உரிமை பெறாமல் ஒளிபரப்பிவிட, தி.மு.க.வில் சேருவதற்கான காரணம் கிடைத்தது.

‘ஜெயலலிதாவை ஓட ஓட விரட்ட வேண்டும்’ என பரபரப்பாக ஒரு பத்திரிகையில் பேட்டி கொடுத்து விட்டு, அடுத்த நாளே கலைஞரைச் சந்தித்து தி.மு.க.விற்கு ஆதரவு என்று திசையை மாற்றிக் கொண்டார்’’ என்ற அந்தப் பழைய நண்பர், ‘எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தி.மு.க.விற்காகப் (1996 காலக் கட்டத்தில்) பிரசாரம் செய்தேன். பிரதிபலனை பார்க்காமல் தி.மு.க.விற்கு உழைத்தேன்’ என்று சரத்குமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாரே, அதன் பின்னணி இதுதான்’’ என்று கூறினார்.

சரி, இன்று அ.தி.மு.க.வை நாடிப்போய் அவர் சேர்ந்ததற்கான பின்னணி என்ன என்பது குறித்து மேலும் துருவினோம். இந்த விவரங்களில் தொடர்புடையவர்களே நம்மிடம் பேசினார்கள்.

‘தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தன்னை விலக்கிக் கொள்கிறேன்’ என்ற அறிக்கையை, கடந்த வாரம் கொடுத்திருந்தார் சரத்.

அதில் தன் மனைவி ராதிகா சரத்குமாருக்கும் அசௌகர்யத்தை ஏற்படுத்தினார்கள் எனக் குறிப்பிட்டிருந்ததைக் கவனிக்க வேண்டும். கட்சியில் அவருக்கு முக்கியத்துவம் இல்லை. நாடார் சமூகத்தைச் சேர்ந்த ராதிகா செல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றால் சரி. அமைச்சர் தயாநிதிமாறன் தன்னை புறக்கணித்து, நடிகர் விஜயை வைத்து தமிழர் திருநாள் தபால் தலையை வெளியிட வைத்தார். அதனால் அதிருப்தி என்றால் சரி.

அது என்ன? தன் மனைவி ராதிகா சரத்திற்கு அசௌகர்யம்? அரசியல் திருப்பு முனையே இங்குதான் இருக்கிறது. ராடன் நிறுவனம் சார்பில் ராதிகா தயாரித்து வழங்கி வரும் ‘செல்வி’ தொடர், சன் டி.வி.யில் இரவு ஒன்பது முப்பதுக்கு, அதாவது மிக முக்கிய நேரத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.

‘சித்தி’ தொடரைப் போன்று ‘செல்வி’ தொடருக்கு வரவேற்பு பெரிதாக இல்லை. சன் டி.வி. குழுமத்தின் விதிப்படி, இப்படிப்பட்ட தொடர்களை முக்கியமான நேரத்தில் ஒளிபரப்ப முடியாது. அதன்படி பட்டென்று ஒரே நாளில் அதை நிறுத்திவிட்டு, வேறு ஒரு நல்ல நிகழ்ச்சியை ஒளிபரப்புச் செய்திருக்க முடியும்.

ஆனால், அப்படிச் செய்யவில்லை. காரணம், ராதிகா கலைஞரின் பாசமகள். அறிவாலய குடும்ப உறுப்பினர்களில் ஒருவர். அதனால் அவரை அழைத்துப் பேசினார்கள். ‘செல்வி தொடரை விரைவில் முடித்துக் கொள்ளுங்கள். வேறு ஒரு நல்ல நிகழ்ச்சியைத் தயார் செய்து கொடுங்கள்’ என்று கூறப்பட்டது.

அணி மாறியவரின் ‘முடிச்சு’ இதுதான். அப்போதே ஆதாய அரசியல் கணக்கைப் போடத்தொடங்கி விட்டார்கள். அவர்களின் ராடன் டி.வி. சார்பாக லண்டனில் உள்ள ஒரு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு, தமிழில் நிகழ்ச்சி தயாரித்து கொடுக்கும் வேலையை ஏற்றிருக்கிறார்கள். அதே போன்று இலங்கையிலும் ஒரு டி.வி.சேனலுக்கு தமிழ் புரோகிராமை எடுத்துக் கொடுக்க ஒப்பந்தமாகியுள்ளார்கள். இரண்டிலுமே நல்ல வருமான சூழ்நிலை. போதிய நிதி நிலை உள்ளது. இது தவிர, அவர்களின் ராடன் நிறுவன பங்குகளில் ஐம்பது சதவிகித பங்குகளை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாகவும் தகவல். இப்படிப் பொருளாதார நெருக்கடி இல்லாத சூழ்நிலை.

இந்த நிலையில், சன் டி.வி.யில் வெளியான ‘செல்வி’ தொடர் மற்றும் ‘தங்க வேட்டை’ நிகழ்ச்சிகளை என்ன செய்வது? திறந்திருந்த அ.தி.மு.க. வாசல் கதவருகே இந்த நிலையைக் கூறியிருக்கிறார்கள். சரத்தின் விலகல் அறிக்கைக்குப் பின் ஒரு வார காலதாமதத்திற்குக் காரணம் இதுதான்’’ என்றவர்கள்,

‘‘இதன்பிறகு ராதிகா, ‘செல்வி’ தொடர் படப்பிடிப்பிற்கென்று சிங்கப்பூர் சென்றார். அடுத்த இரண்டாவது நாளில் சரத்தும் அங்கே சென்றார். தொடர்ந்து சசிகலா நடராஜனும் சிங்கப்பூருக்கு ரகசிய விசிட் அடித்தார்.

அங்கே வைத்து கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டது! அதாவது சன் டி.வி.யில் இருந்து ‘செல்வி’ மற்றும் ‘தங்கவேட்டை’ நிறுத்தப்பட்டால், அவற்றை ஜெ.டி.வி.யில் ஒளிபரப்ப ஒப்புக்கொள்வது. இனி தயாரிப்புச் செலவு என்பதை ஜெயா டி.வி. நிறுவனமே கொடுக்கும். பிரச்னை இல்லை என்ற உத்தரவாதங்கள் கொடுக்கப்பட்டன. அதோடு தமிழகம் தவிர, கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் இருக்கும் சன் நெட் ஒர்க் மூலமாக நடந்துக் கொண்டிருக்கும் ‘தங்க வேட்டை’ நிகழ்ச்சிகள் ரத்தாவதால் ஏற்படும் நஷ்டத்துக்கு ஈடாக, பெரிய தொகை கொடுப்பதாகவும் முடிவாகியிருக்கிறது. அவற்றுடன் மேலும் பல நிகழ்ச்சி தயாரிப்புகள் அவர்கள் வசம் இருக்கிறது. அதுவும் பாதிக்கப்படக்கூடாது’’ எனப் பேசி, தொழில்ரீதியாக ‘உதவிகளும்’ பேசிமுடிக்கப்பட்டன.

சரத்தின் அரசியல் இழப்பை ஈடுகட்ட?... அதற்கு ராஜ்யசபா உறுப்பினர் என்ற உத்தரவாதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்படி எல்லாமும் முடிந்த பிறகுதான் அங்கிருந்து குடும்ப சகிதமாக ஜெ.வை சந்தித்து அ.தி.மு.க. வில் இணைந்தார்கள்’’ என்று விளக்கினார்கள் அவர்கள்.



நன்றி - குமுதம் ரிப்போர்ட்டர்

4 comments:

காழியன் said...

இவர்களது வியாபார பேரத்துக்கு சனநாயகத்தை கேவலப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

கால்கரி சிவா said...

ஐயா எல்லாமே பணம்தான்யா. இந்த கொள்கை, கற்பு, மானம், வீரம், இனம், ஜாதி, மதம், கலை போன்றவை நம்மள மாதிரி உள்ள நடுத்தர மக்களுக்கு தான்யா. அவங்க எல்லாதிற்கும் அப்பாற் பட்டவர்களையா

பிரதீப் said...

என்ன நடக்கிறது இங்கே..
ஒரு பக்கம் குமுதத்தில் புரட்சித் தலைவியின் பேட்டி சக்கை போடு போடுகிறது.
இன்னொரு பக்கம் ரிப்போர்ட்டரில் இந்த மாதிரி பதிவுகளும் உள்ளன. எதுதான் உண்மை?

Bharaniru_balraj said...

எதையோ குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் எதையோ தேடி ஒடுமாம்.