கிங் மேக்கர் கலைஞர்? - ரவிக்குமார்

குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தற்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், இரண்டாவது முறையாகப் போட்டியிடும் வாய்ப்பு இப்போது இல்லை என்றாகி விட்டது. அதுமட்டுமின்றி, பழைய மரபுப்படி யாரேனும் ஒரு அரசியல்வாதிதான் குடியரசுத் தலைவராக வருவாரென்பதும் ஏறக்குறைய உறுதியாகி விட் டது.

ஒருமித்த கருத்தின் அடிப் படையில் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் பி.ஜே.பி. காட்டி வரும் ஆர்வம், அவர்கள் சார்பில் எவரும் போட்டியிட வாய்ப்பில்லை என்பதன் அடையாளம். காங்கிரஸ் கட்சியில் சுசில்குமார் ஹிண்டே, பிரணாப் முகர்ஜி, சிவராஜ் பாட்டில், அர்ஜுன் சிங், மோதிலால் வோரா, எஸ்.எம். கிருஷ்ணா, கரண்சிங், சிவராஜ் பாட்டீல் என்று பலரது பெயர்கள் ஊடகங்களில் சுற்றி வருகின்றன. இதனிடையே மார்க்சிஸ்ட்களின் சார்பில் சோம்நாத் சட்டர்ஜி நிறுத்தப்படலாம் என்ற வதந்தியும் வந்துபோனது.

குடியரசுத்தலைவர் பதவி, பிரதமர் பதவியைப் போன்று அதிகாரம் கொண்ட ஒரு பதவியல்ல. ‘ரப்பர் ஸ்டாம்ப்’ என்று குடியரசுத்தலைவர்களை வர்ணித்த அரசியல்வாதிகள் உண்டு. அவர்கள் சுயேச்சையாக செயல்பட்ட தருணங்கள் மிகவும் குறைவு. 1984&ல் டெல்லியில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, அப்போது குடியரசுத் தலைவராயிருந்த ஜெயில்சிங் எப்படி மௌனம் காத்தார் என்பதை மூத்த பத்திரிகையாளர் குஷ்வந்த்சிங் சுட்டிக்காட்டி இருக்கிறார். நமது நாட்டின் பத்தாவது குடியரசுத் தலைவராயிருந்த கே.ஆர்.நாராயணன் தான் பதவி வகித்த காலத்தில் தலித்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளை மிகவும் நாசூக்காகக் கண்டித்தார். ஆனாலும் அவரால் அந்த விஷயத்தில் பெரிதாக எதையும் செய்ய முடியவில்லை. அவர் காலத்தில் இந்தியாவில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. மக்களுக்கான நலத்திட்டங்கள் சரிவர செயல்படுத்தப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க மாநில ஆளுநர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்தார். அவருக்குப் பிறகு அது என்ன ஆனதென்று எவருக்கும் தெரியாது.

அப்துல்கலாம் குஜராத்துக்குப் பயணம் மேற்கொண் டதேகூட மிகப்பெரும் ‘புரட்சி’ என்று வர்ணிக்கப்பட்டது. அவர் பொறுப்பில் இருந்த இந்த ஆறு ஆண்டு காலத்தில், அவரது இனத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் வேறு எந்தப் பயனையும் பெற்றார்களெனக் கூற முடியாது.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் இப்போது பன்னிரண்டாவது குடியரசுத் தலைவரை நாடு தேர்ந்தெடுக்கப் போகிறது.

2002&ம் ஆண்டு குடியரசுத்தலைவர் தேர்தலின்போது பி.ஜே.பி. ஒருமித்த கருத்தின் அடிப்படையில்தான் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியும் என்ற நிர்ப்பந்தத்தில் இருந்தது. தன்னிடம் போதுமான வாக்குகள் இல்லாத நிலையில், அது காங்கிரஸின் ஆதரவை நாடவேண்டி வந்தது. அந்த நேரத்தில்தான் அப்துல்கலாமின் பெயரை முலாயம்சிங் யாதவ் முன்மொழிந்தார். ‘இந்தியாவின் ஏவுகணை தொழில்நுட்பத்தின் தந்தை’ என வர்ணிக்கப்படும் தகுதியை மட்டுமே அப்போது பெற்றிருந்த அப்துல்கலாம், எந்த அளவுக்கு அந்தப் பதவிக்குப் பொருத்தமாக இருப்பார் என்ற வினா பலருக்கும் எழுந்ததுண்டு. ஆனால், இன்று அவர் இந்தியக் குழந்தைகளின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார். அவர் சொல்வது அனைத்தையுமே குழந்தைகள் ரசிக்கிறார்கள். அவரை குழந்தைகளுக்கு ரொம்பவே பிடித்துப் போயிருக்கிறது. போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில் துடைத்தெறியப்பட்ட வாழ்வின் மதிப்பீடுகளையும், ஆதர்சங்களையும் தமது பிள்ளைகள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மூலமாகக் கண்டடைந்ததை அதிசயித்துப் பார்க்கிறார்கள் இந்தியா வில் இருக்கும் ஒவ்வொரு பெற்றோரும். இந்த ஒரு காரணத்துக்காகவாவது அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்று எண்ணுவோர் ஏராளம்.

ஆனால், ‘அப்துல் கலாமுக்கு இனி வாய்ப்பில்லை’ என்பதை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வெளிப்படையாகச் சொல்லிவிட, அப்துல்கலாமை வைத்துக் கிளப்பப்பட்ட ஒட்டுமொத்த யூகங்களும் முடிவுக்கு வந்துவிட்டது. இனி தனது நண்பர் ய.சு.ராஜனோடு சேர்ந்து பாரதியின் அற்புதமான கவிதைகளைப் பாடுவதற்கு நம் குடியரசுத் தலைவருக்கு நிறைய நேரம் கிடைக்கும்! ஒருவிதத்தில் இதுவும்கூட நம் நாட்டுக்கான தியாகமாகத்தான் கொள்ள வேண்டும்.

சில நாடுகளில் குடியரசுத் தலைவர் பதவியே மிக உயர்ந்த அரசியல் பதவியாக இருக்கிறது. அமெரிக்காவில் அத்தகைய முறையே உள்ளது. அங்கே மக்களால் நேரடி யாக அவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆனால், நமது நாட்டில் அப்படியான முறை இல்லை. குடியரசுத் தலை வரே முதல் குடிமகன் என வர்ணிக்கப்பட்டாலும் அவரைத் தேர்ந்தெடுப்பதில் குடிமக்களுக்கு நேரடியான பங்கு எதுவுமில்லை. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 54&ன்படி நமது குடியரசுத் தலைவர் நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களாலும், இந்தியா முழுவதிலுமுள்ள சட்டமன்றங்களின் உறுப்பினர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவரே நமது நாட்டின் தலைமைப் பொறுப்பை வகிக்கிறார். நாட்டின் நிர்வாக அதிகாரம் அவரிடமே வழங்கப்பட்டுள்ளது.

நமது தேர்தல் அமைப் பில் பொதுவாக நடைமுறையில் உள்ள நேரடி வாக்களிப்பு முறை குடியரசுத் தலைவர் தேர்தலில் பின்பற்றப்படுவதில்லை. இதில் வாக்களிக்கும் ஒரு எம்.எல்.ஏ&வின் ஓட்டு, அந்த மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையை அந்த மாநிலத்தின் சட்டசபையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையால் வகுத்து அதில் கிடைக் கும் எண்ணிக்கையை மீண்டும் ஆயிரத்தால் வகுத்துப் பெறப்படுகிறது. மாநிலத்தின் மக்கள் தொகை என்பது தொகுதி மறுசீரமைப்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ள மக்கள் தொகை என்பதால், இப்போதைக்கு 1971&ம் ஆண்டு மக்கள் தொகையையே குறிக்கும்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 55(3)&ன்படி குடியரசுத் தலைவர் புரொபோர்ஷனல் ரெப்ர சன்டேஷன் (றிக்ஷீஷீஜீஷீக்ஷீtவீஷீஸீணீறீ ஸிமீஜீக்ஷீமீsமீஸீtணீtவீஷீஸீ) என்ற முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட வேண் டும். சாதாரணமாக நமது தேர்தலில் நடைமுறையில் உள்ள பதிவான வாக்குகளில் அதிக ஓட்டுகள் பெறுபவர் வெற்றி பெற்றவர் என்ற முறை இதில் கிடையாது.

ஒரு தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் பதிவாகி அதில் நாற்பதாயிரம் வாக்கு ஒருவருக்கும், முப்பத்தைந்தாயிரம் ஒருவருக்கும், இருபத்தைந்தாயிரம் ஒருவருக்கும் கிடைத்தால் நாற்பதாயிரம் வாக்குகள் பெற்றவரையே வெற்றி பெற்றவர் என நாம் ஏற்கிறோம். அவருக்கு மாறாக அறுபதாயிரம் வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தும், பதிவான வாக்குகளில் அவர் மைனாரிட்டியான வாக்குகளையே (40%) பெற்றிருந்தும் அவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார். இந்த முறை குடியரசுத் தலைவர் தேர்தலில் கிடையாது. அவர் பெரும்பான்மையான ஆதரவைப் பெற்றவராக, ஒரு அரசியல் கட்சியை மட்டுமே சார்ந்து இல்லாதவராக இருக்க வேண்டும் என்பதால்தான் இப்படியான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது குடியரசுத்தலைவர் தேர்தலில் உள்ள மொத்த வாக்குகள் ஒரு லட்சம் என வைத்துக்கொண்டால், அதில் ஐம்பதாயிரத்து ஒரு வாக்குகளைப் பெற்றால் மட்டுமே அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இதனால்தான் அரசியல் கட்சிகள் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் வேட்பாளராகத் தேர்வு செய்ய விரும்புகின்றனர்.

தற்போதுள்ள கணக்கின்படி உத்தரப்பிரதேச மாநிலத் தின் எம்.எல்.ஏ. போடுகிற ஓட்டுக்குத்தான் அதிகபட்ச மதிப்பு இருக்கும். அந்த மாநிலமே மக்கள் தொகையில் கூடுதலாக இருப்பதால், அவர்களுக்கு இந்த அனுகூலம். அதனால்தான் இப்போது உத்தரபிரதேசத்தில் பெரும் வெற்றியடைந்திருக்கும் மாயாவதிக்கு மவுசு கூடியிருக்கிறது. அவர் யாரை குறிப்பிட்டுச் சொல்கிறாரோ, அவர்தான் அடுத்து குடியரசுத் தலைவராக முடியும் என்றே வடக்கத்திய பத்திரிகைகள் கட்டுரைகள் எழுதுகின்றன.

ஆனால், தமிழக முதல்வரும் இதில் இப்போது தீவிர மாகப் பங்கெடுத்திருக்கிறார். தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்துக்காக டெல்லி சென்ற கலைஞர், குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாகப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களோடும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் இதற்காக டெல்லி செல்லப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

முன் எப்போதும் இல்லாத அளவுக்குக் குடியரசுத் தலைவர் தேர்தல், இந்த முறை மிகவும் முக்கியத்துவம் பெற்றிருப்பதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. 2009&ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலும் அவற்றுள் ஒன்று. உத்தரப் பிரதேசத்தில் நடந்து முடிந் துள்ள சட்டமன்றத்தேர்தலின் முடிவு பலவிதங்களில் 2009 நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது. குடியரசுத் தலைவராக ஒரு அரசியல்வாதியையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று இடது சாரிகள் அறிவித்திருக்கிறார்கள். அப்துல்கலாமைப் போல ஒரு ‘டெக்னோகிராட்’ நாட்டின் முதல் குடிமகனாக இருப்பது நல்லதல்ல என அவர்கள் எண்ணியிருக்கலாம். அதே வரையறையைப் பிரதமர் பதவிக்கும், அமைச்சர் பதவிகளுக்கும் பொருத்திப் பார்த்தால் மன்மோகன்சிங், ப.சிதம்பரம் போன்ற பலபேர் பாதிக்கப்படுகின்ற சூழல் ஏற்படும். உலகமயமாதலின் தாக்கம் இந்தியப் பொருளாதாரத்தையும், அரசியலையும் மாற்றி அமைத்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் டெக்னோகிராட்களும், பீரோகிராட்களும் நாட்டின் அரசியல் தலைவிதியைத் தீர்மானிப்பது சரியல்ல என்பது ஏற்கத்தக்கதுதான்.

ஆனால், நமது அரசியல்வாதிகள் இன்றைய சூழலைப் புரிந்து கொண்டு, அதற்கு எதிர்வினையாற்றும் ஆற்றல் உள்ளவர்களாக இருக்கிறார்களா என்பது முக்கியமான கேள்வியாகும். தற்போது நடந்துவரும் பொருளாதார மாற்றங்கள் குறித்துப் பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகளுக்குத் தெளிவு கிடையாது. தமிழ்நாட்டையே எடுத்துக்கொண்டால் ‘வாட்’ வரிவிதிப்பின் அடிப்படைகளை, சிறப்புப் பொருளாதார மண்டலம் என்பதன் பின்னணியை அறிந்த அரசியல் தலைவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்? இதனால்தான் டெக்னோகிராட்களும், பீரோகிராட்களும் அரசியலுக்குள் ஆதிக்கம் செய்யும் நிலை ஏற்படுகிறது. இதுபற்றி இடதுசாரிகள் சிந்திக்க வேண்டும்.

தற்போது குடியரசுத் துணைத் தலை வராக உள்ள பைரோன்சிங் ஷெகாவத்தை குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்ய வேண்டும் என்று ஒரு தரப்பினர் கோரி வருகின்றனர். இதற்கு வலுவான மரபு உள்ளது என்று அவர்கள் வாதிடுகிறார்கள். டாக்டர் ராதாகிருஷ்ணன், ஜாகிர் உசேன், வி.வி.கிரி, ஆர்.வெங்கட்ராமன், சங்கர் தயாள் சர்மா, கே.ஆர்.நாராயணன் முதலானோர் குடியரசுத் துணைத் தலைவர்களாக இருந்து, பின்னர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அவர்கள் உதாரணமாகக் காட்டியிருக்கிறார்கள். ஆனால், கடந்த முறையே இந்த மரபு கைவிடப்பட்டு விட்டது. எனவே, இந்த வாதம் இப்போது எடுபடாது. மேலும், பி.ஜே.பி&யைச் சேர்ந்தவர் குடியரசுத் தலைவராகும் வாய்ப்பு இப்போது சுத்தமாகக் கிடையாது.

அடுத்து ஜனாதிபதியாவார் என்று சுஷில்குமார் ஷிண்டேவைத்தான் டெல்லியில் இருப்பவர்கள் பலரும் அடையாளம் காட்டுகிறார்கள். அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரை மாயாவதி நிராகரிக்க மாட்டார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அது சரியல்ல. உ.பி. தேர்தலின் வெற்றி மாயாவதியின் பிரதமர் கனவை தீவிரமாக்கியுள்ளது. இந்த நிலையில் குடியரசுத் தலைவராக தலித் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது, நாளை பிரதமர் பதவிக்கு தலித் ஒருவர் வருவதற்கு முட்டுக்கட்டையாக மாறிவிடலாம். குடியரசுத் தலைவரும், பிரதமரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பதை ஏற்கும் அளவுக்கு நமது நாட்டின் ஜனநாயகம் முதிர்ச்சி பெறவில்லை. எனவே, தனது வாய்ப்புக்கு தடையாக இருக்கக்கூடிய ஒரு காரியத்தை நிச்சயமாக மாயாவதி ஆதரிக்க மாட்டார். எனவே, ஷிண்டேவை எவர் ஆதரித்தாலும் அவருக்கு மாயாவதியின் ஆதரவு கிடைக்காது என்பது நிச்சயம். அவர் மோதிலால் வோராவை முன்மொழிவதாகத் தகவல். இந்தப் பின்னணியில்தான் தமிழக முதல்வரின் முயற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இதற்கிடையில், கர்னாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவை அடுத்த ஜனாதிபதியாக கொண்டு வரலாம் என்று காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து திடீர் குரல் எழும்பி இருக்கிறது. நேரு குடும்பத்தின் தீவிர விசுவாசியாக இருக்கும் கிருஷ்ணாவை சோனியா காந்தி மனதில் வைத்திருப்பதோடு கலைஞருக்கும் அவர் மனம் கவர்ந்தவர் என்பதால், கடைசி நேரத்தில் கிருஷ்ணா ரேஸில் முந்திவிடலாம் என்று சொல்கிறார்கள் காங்கிரஸ் உள்விவகாரங்களை நன்கு அறிந்தவர்கள்.

‘ஜனாதிபதி தேர்தல் இந்த முறை மட்டும் இத்தனை களேபரம் ஆகிக் கிடப்பது ஏன்?’ என்பது குறித்து விசாரித்தால், ‘உத்தரப்பிரதேசத் தேர்தலில் காங்கிரஸ், பி.ஜே.பி. இரண்டுமே பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதை ஒரு அறிகுறியாக எடுத்துக்கொண்டால், 2009&ல் மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அந்த இரு கட்சிகளுக்குமே கிடைக்கப்போவதில்லை. மாநிலக் கட்சிகளைக் கொண்ட புதிய அணி ஒன்றே மத்தியில் ஆட்சி அமைக்கக்கூடும். அப்போது குடியரசுத் தலைவரின் பங்கு முக்கியத்துவம் பெற்றுவிடும். எனவேதான், இப்போதே அதற்கான களம் தயார் செய்யப்படுகிறது. குடியரசுத் தலைவர் யார் என்பது, அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வியோடு தொடர்பு கொண்டதாக இருக்கிறது.’ என்று சொல்லும் டெல்லி பத்திரிகையாளர்கள், ‘ குடியரசுத் தலைவர் தேர்தலில் தீவிரமாகக் குறுக்கீடு செய்வதன் மூலம் அடுத்த பிரதமரைத் தீர்மானிப்பதில் தனக்குள்ள முக்கியத்துவத்தைக் கலைஞர் உறுதிப்படுத்த விரும்புகிறார்’ என்றும் சொல்கிறார்கள். பார்ப்போம், கலைஞர் ‘கிங் மேக்கரா’ இல்லையா என்று!

நன்றி விகடன்.காம்

0 comments: