அதிமுக என்ன செய்ய வேண்டும்

‘‘இன்று அ.தி.மு.க. முன்னணித் தலைவர்கள் பெரும்பாலானவர்கள் ஒருவித திரிசங்கு சொர்க்கத்தில் உள்ளார்கள். தி.மு.க. ஆட்சி ஒவ்வொரு முறையும் பெரிய தவறுகளை செய்யும்போது அவற்றை எதிர்த்து பேசுவதா வேண்டாமா, வேகம் காட்டவேண்டுமா, கூடாதா? என்று குழம்புகிறார்கள்.

அதனால்தான் தினகரன் பத்திரிகை விவகாரம், தயாநிதிமாறன் பிரச்னை உட்பட பல விஷயங்களில் அடக்கி வாசிக்கிறார்கள். அம்மாவும், சின்னம்மாவும் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்று புரியாமல் பேசிவிட்டு யார் அப்புறம் வாங்கிக் கட்டிக்கொள்வது?’’ என்று சற்று பரிதாபமாகக் கேட்டார் இப்போதும் செல்வாக்குள்ள ஓர் தென்மாவட்ட முன்னாள் அமைச்சர்.

கட்சி பரபரப்புடன் செயல்படவேண்டிய நேரத்தில், எதிரியின் சறுக்கலை பயன்படுத்தி மக்களின் ஆதரவை தேடவேண்டிய சமயத்தில் கட்சி மேலிடம் ஒன்றுமே நடக்காதது போல சோம்பல் முறிப்பதை கண்டு பலர் உள்ளுக்குள் கொதித்துப் போனாலும் வெளியில் ஒருவித இறுக்கத்துடன் பொய்யாக சிரிக்கின்றனர்.

‘‘சசிகலாவின் பீர் தொழிற்சாலை _ மிடாஸ் _ படப்பையிலிருக்கிறது. கொஞ்ச காலம் முன்பு அதன் உற்பத்தி நிறுத்தப்பட்டதற்கு காரணம், தி.மு.க. அரசின் கெடுபிடி என்று சொன்னார்கள். அப்புறம் தயாநிதி மாறனின் தலையீட்டால் மறுபடியும் அது இயங்க ஆரம்பித்தது. போதாது என்று இப்போது அதற்கு முன்பைவிட மூன்று மடங்கு உற்பத்திக்கு அனுமதி தந்துள்ளார்கள். இப்போது டாஸ்மாக்கிற்கு அங்கிருந்துதான் அதிக சப்ளை ஆகிறது. இந்த நேரத்தில் தயாநிதி மாறன் பிரச்னை வெடித்ததால் ஜாக்கிரதையாக பட்டும் படாமலும் மேலிடம் கண்டிக்கிறது! கட்சி தாண்டி இப்படியரு ‘அண்டர்ஸ்டாண்டிங்’ இருக்கும்போது அம்மாவே சமயத்தில் கப்சிப் ஆயிடறதைத் தவிர வேற வழியில்லை. கட்சி யார் கட்டுப்பாட்டிலிருக்கிறது என்று புரிந்தால் ஒட்டுமொத்த பிரச்னையும் விளங்கும்’’ என்றார் கும்பகோணத்தைச் சேர்ந்த ஓர் அ.தி.மு.க. பிரமுகர். கட்சியில் ஓரங்கட்டப் பின்பும் இன்றைக்கும் அந்த பகுதியில் உண்மையாக, ஓசைபடாமல் உழைப்பவர். ஜெயலலிதா அவ்வப்போது போய் தங்கும் பையனூர் பங்களா மற்றும் சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட் எல்லாவற்றிலும் சசிகலா குடும்பத்தினர்களுக்கு பெரிய பங்குகள் உள்ளனவாம்.

‘‘இவ்வளவு இருந்தும் சசிகலா மீதோ அல்லது சுதாகரன், தினகரன், இளவரசி என்று அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் மீதோ இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. காரணம், அ.தி.மு.க.வை பலவீனப்படுத்தும் வேலையை அவர்களே பார்த்துக்கொள்வார்கள் என்று தி.மு.க. நினைக்கிறது. சாதாரணமாக நட்பு அடிப்படையில் கல்யாண வீட்டுக்குப் போனால்கூட கட்சியிலிருந்து தூக்குகிறவர்கள், தி.மு.க.வுடன் மறைமுகமாக வணிக ஒப்பந்தம் வைத்துக்கொண்டிருப்பவர்களை ஏன் கண்டிப்பதில்லை?’’ என்று தலைமை கழகத்தில் நாம் சந்தித்த சில சீனியர் கரைவேட்டிகள் வருத்தத்தோடு கேட்டார்கள்.

ஆக, ஜெயலலிதாவே சூழ்நிலைக் கைதியாக இன்னொரு குடும்பத்தில் சிக்கிக் கொண்டிருப்பதால் கட்சி வளர்ச்சி என்பது ஒரு கட்டத்தில் முடங்கி போயுள்ளது என்கிறார்கள் சில தொண்டர்கள்.

‘‘தயாநிதி பிரச்னையை விடுங்கள். 1967ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வென்றதற்கு விலைவாசி பிரச்னையும் முக்கிய காரணம். அண்மையில் பஞ்சாப், உத்தரகாண்ட் சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்ததற்கும் விலைவாசி உயர்வுதான் காரணம். இங்கும் அதே நிலமை இருந்தும் பிரதான எதிர்கட்சியான அ.தி.மு.க. அதன் கடமையை செய்யவில்லை. எதிர்கட்சிக்குண்டான இலக்கணத்தை தொடர்ந்து படிப்படியாக அ.தி.மு.க. இழந்து வருகிறது’’ என்கிறார். மூத்த பத்திரிகையாளர் சோலை.

‘‘மாறன் சகோதரர்கள் பிரச்னையில் கூட எப்படியாவது சன் டி.வி. ஒழிந்தால் போதும் என்று பேசாமல் இருந்துவிட்டார். இது தவறான வியூகம். அடுத்தது, யார் அம்மாவிடம் நெருங்கிப் பேசுகிறார்களோ _ அது சேலம் கண்ணனாக இருக்கட்டும், திருச்சங்கோடு பொன்னையனாக இருக்கட்டும் _ உடனே அவர்களை வெட்டிவிடும் வேலையை சசி குடும்பம் ரொம்ப சாதுர்யமாக செய்கிறது. எந்தவித சுதந்திரமும் இல்லாமல் கட்சியின் மேல்மட்ட தலைவர்கள் எப்படி இயங்குவது?’’ என்று கேள்வி எழுப்புகிறார் சோலை.

அவர் சொல்வதில் நியாயம் இல்லாமல் இல்லை. இன்று அ.தி.மு.க.வில் ஓரங்கட்டப்பட்ட பலர் இன்னமும் செல்வாக்கோடுதான் தங்கள் பகுதிகளில் வலம் வருகிறார்கள் என்பதே நிஜம்.

‘‘சேலம் செல்வகணபதியை ரொம்ப காலமாவே கொஞ்சம் தள்ளிதான் வைத்துள்ளார்கள். அவருக்கு உரிய அங்கீகாரம் கொடுத்து உற்சாகப்படுத்தினால் கொங்கு சீமையை அ.தி.மு.க. மீண்டு எடுத்துவிடும். பி.ஹெச். பாண்டியனை கட்சியின் சிறுபான்மை பிரிவுத் தலைவராக நியமித்துள்ளது எந்த அளவிற்கு அவருக்கு சிறப்பு சேர்க்கும்? யானை பசிக்கு சோளப்பொறி போல! புதுக்கோட்டை வெங்கடாசலம், திருவள்ளூர் மாவட்டத்தில் செல்வாக்குள்ள முனிரத்னம், தஞ்சையில் எஸ்.ஆர்.ராதா, அழகு திருநாவுக்கரசு, கரூர் சின்னசாமி, சென்னையில் சைதை துரைசாமி என்று பட்டியல் போட்டுகிட்டே போகலாம். இவர்களில் பலர் இன்று சமூகப் பணிகளில் தங்கள் கவனத்தை திருப்பிவிட்டுள்ளனர். இவர்கள் ஓரங்கட்டப்பட்டதற்கு ஒரே தயக்கம் காட்டியதுதான்’’ என்கிறார் மாயவரத்தைச் சேர்ந்த ஓர் சீனியர் அ.தி.மு.க. பிரமுகர்.

நல்ல தலைவர்களை ஒதுக்குவது மிகவும் தவறானது என்றால் தப்பான ஆட்களை வளர்ப்பது மிகவும் ஆபத்தானது என்கிறார்கள் பாதிக்கப்பட்ட கட்சிக்காரர்கள். கலைராஜன், சி.வி.சண்முகம் போன்றவர்கள் திடீர் என்று அம்மாவுக்கு நெருக்கமானது சின்னம்மாவின் கருணை பார்வைதான் காரணம் என்கிறார்கள். போயஸ் தோட்டத்து செல்லப்பிள்ளையாக இருந்த எஸ்.வி.சேகரை திடுதிப்பென்று ஏன் ஓரங்கட்டினார்கள் என்று மயிலாப்பூர் கரை வேட்டிகளுக்கே புரியாத மர்மம். அவரது மகள் கல்யாணத்திற்கு அழைத்தும் அம்மா போகாதற்கு சசியின் நிர்பந்தம்தான் என்று ஓர் உறுதியான தகவல்!

‘‘சமீபத்திய மதுரை வன்முறை சம்பவம் உட்பட பல பிரச்னைகளை எதிர்கொள்வதில் அம்மா சரியாகத்தான் செயல்படுகிறார்’’ என்கிறார் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் டாக்டர் மைத்ரேயன்.

‘‘தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று அரசை டிஸ்மிஸ் செய்யச் சொல்லி மாநிலங்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர முயற்சித்தோம். சபையை ஒத்திவைத்து பாராளுமன்றத்தையே ஸ்தம்பிக்க வைத்தோம். கண்டனக் கூட்டங்கள் தமிழகம் முழுவதும் போட்டிருக்கிறோம். சட்ட மன்றத்திலும் எங்கள் உறுப்பினர்கள் இந்த பிரச்னையை அழுத்தமாக எடுத்து வைத்தோம். ஆனால் கூட்டத் தொடர் முடிந்துப் போய்விட்டது. தவிர, இது அவர்கள் குடும்பப் பிரச்னை என்பதையும் யோசிக்க வேண்டும். திண்டிவனம் பேருந்து பிரச்னை, திருப்பூர் வணிக வளாக பிரச்னை, சேலம் மாநகராட்சி குப்பை கூல்ங்களை அகற்றாத பிரச்னை உள்பட இப்படி மாவட்ட ரீதியான பல பிரச்னைகளுக்கு போராட்டங்களை நடத்திச் சொல்லி அந்தந்த ஏரியாக்களில் அறிவிக்கிறார் அம்மா. ஏன், காவிலி பிரச்னைக்கு அம்மாவே உண்ணாவிரதத்தில் உட்கார வில்லையா?’’ என்று தங்கள் தரப்பு நியாயங்களை அடுக்கிறார் மைத்ரேயன்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் அ.தி.மு.க. திசை தெரியாத படகு போல தத்தளித்துக் கொண்டிருப்பதே உண்மை. இத்தனைக்கும் எம்.ஜி.ஆரின் வாக்கு வங்கியை இன்னமும் அப்படியே தக்க வைத்துக் கொண்டிருந்தாலும், ஜெயலலிதாவின் புரிந்து கொள்ள முடியாத வினோத அணுகுமுறை இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர்கள் மட்டுமின்றி தொண்டர்களையும் குழப்புவதாகவே தோன்றுகிறது. அவர்கள் இன்னும் சாதூர்யமான அரசியலை தங்கள் அன்பிற்குரிய அம்மாவிடம் எதிர்பார்க்கிறார்கள். அதற்கு அவரது ஆருயிர் தோழியின் அழுத்தமா பிடியிலிருந்து முழுவதுமாக விலகி, கட்சியின் சீனியர்களின் ஆலோசனைபடி செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

‘‘தன்னோட பர்ஸனாலிட்டிக்குத்தான் ஓட்டு என்று எம்.ஜி.ஆருக்குத் தெரியும். ஆனால் சாத்தூர் ராமச்சந்திரனை ‘என்ன முதலாளி’ என்பார். கே.ஏ. கிருஷ்ணசாமி, ஈரோடு முத்துசாமி, சேலம் கண்ணன், கருப்பச்சாமி பாண்டியன் என்று யாரையும் விட்டுக் கொடுக்கமாட்டார். அவர்கள் எல்லாம் நம்மை ஒரு நாள் கவிழ்த்துவிடுவார்கள் என்ற அவநம்பிக்கை அவருக்கு எப்போதுமே வந்தது கிடையாது. அதுதாங்க அவரோட பலம்... தலைவரோட புத்திசாலித்தனம் எல்லாம் இருந்தும் எங்க அம்மா ஏன் இப்படி இன்னொரு குடும்பத்திற்கு பயந்து கட்சி நடத்தனும்? அதுவும் தன் அண்ணன் குடும்பத்தைக் கூட ஒதுக்கித் தள்ளிட்டு! அதாவது தன் வாரிசுகளையே வேண்டாம்னு சொல்லிவிட்டு!’’ பொறிந்தார் ஓர் எம்.ஜி.ஆர். மன்றத்து உடன்பிறப்பு. நியாயமான கொதிப்பு! ஜெயலலிதா ஆத்ம விசாரணை செய்ய வேண்டிய நேரமிது!

பகல் வேஷம்

அ.தி.மு.க. தலைமைக்கழக கட்டிடம் இடிக்க போவதாக நோட்டீஸ் வந்துள்ளதா அரசு?ஆற்காடு வீராசாமி பதில்

‘‘இது உச்சநீதிமன்ற ஆணை. இந்த ஆணையை மறுஆய்வு செய்து தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் குழு அமைத்து சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு செய்வது பற்றி நாங்கள் முடிவு செய்தோம். அதை மீறி உயர்நீதிமன்றத்தின் ஆணையின்படி சி.எம்.டி.ஏ. அனுப்பிய நோட்டீஸ் அரசாங்கத்தின் கவனத்திற்கு வரவில்லை. இதுபோல் அ.தி.மு.க.வுக்கு மட்டுமல்ல விதிகள் மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் பலவற்றிற்கு சி.எம்.டி.ஏ. நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதைப்புரிந்துகொள்ளாமல் ஜெயலலிதா, பூமிக்கும் ஆகாயத்திற்கும் குதித்திருக்கிறார். 1999ஆம் வருடம் தி.மு.க. ஆட்சியிலிருந்தபோதே அந்த கட்டிட வரைமுறைக்காக விண்ணப்பித்திருந்தார்கள். விளக்கம் கேட்டபோது கொடுக்கப்படவில்லை. 2001ல் தங்கள் ஆட்சியில் அதிகாரத்தை பயன்படுத்தி வழங்கியிருக்கலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு சி.எம்.டி.ஏ. நோட்டீஸ§க்கு கதருவதும், புலம்புவதும், சபதம் எடுப்பதும் ஓர் பகல் வேஷம். தி.மு.க. அரசிற்கு அவர்கள் கட்டிடத்தை இடிப்பதற்கு அவசியமும் இல்லை. நோக்கமும் இல்லை.

ஜெயலலிதாவின் உண்மையான கவலை தான் முதல்வராக இருந்தபோது கொர நாட்டில் விதிமுறைகளை மீறி கட்டிய 840 ஏக்கரில் கட்டப்பட்ட பிரமாண்ட பங்களா! அது என்ன ஆகுமோ என்ற பயத்தில் தி.மு.க.வை ஒழிப்பேன்! என்று சூளுரைக்கிறார்! இதுவே உண்மை!’’

நன்றி குமுதம்.

0 comments: