அப்துல் கலாமை சந்திக்கிறார் பிரதமர் சிங்

டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் அப்துல் கலாமை போட்டியிட வைக்க மூன்றாவது அணி முயற்சி செய்து வரும் நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் இன்று கலாமை சந்திக்க நேரம் கோரியுள்ளார்.

கலாமை மீண்டும் ஜனாதிபதியாக்க காங்கிரஸ் விரும்பவில்லை. இதனால் தான் தானும் போட்டியிட விரும்பவில்லை என கலாம் அறிவித்திருந்தார்.

இந் நிலையில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரதீபா பாட்டீலின் வேட்பு மனுவை முன்மொழிந்து மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இன்று காலை கையெழுத்தும் போட்டுவிட்டனர்.

இதற்கிடையே கலாமை போட்டியிட வைக்க ஜெயலலிதா தலைமையிலான மூன்றாவது அணி தீவிரமாக களமிறங்கியுள்ளது. அதே போல போட்டியிட கலாம் ஒப்புக் கொண்டால் அவரை ஆதரிக்கத் தயார் என பாஜகவும் அறிவித்துள்ளது. கலாமுக்காக போட்டியிலிருந்து விலகவும் தயார் என பாஜக சார்பில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளரான பைரோன் சிங் ஷெகாவத் கூறியுள்ளார்.

இதனால் கலாம் விஷயத்தில் காங்கிரஸ் தனிமைப்படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் தேசிய அளவில் தனக்கு அவப்பெயர் வரலாம் என காங்கிரஸ் கருதுகிறது.

இந் நிலையில் அப்துல் கலாமை சந்திக்க இன்று திடீரென அப்பாயின்மெண்ட் கேட்டுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். மாலை 5 மணிக்கு இந்தச் சந்திப்பு நடக்கவுள்ளது.

எதற்காக இந்தச் சந்திப்பு என்று கூறப்படவில்லை. ஆனாலும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கலாமுடன் பிரதமர் முக்கிய ஆலோசனை நடத்தலாம் எனத் தெரிகிறது.

தங்களது வேட்பாளர் பிரதீபா பாட்டீல் தான் என்பதை கலாமிடம் அவர் பிரதமர் விளக்குவார் என்று தெரிகிறது.

இந் நிலையில் அப்துல் கலாமுக்கு திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும் ஆதரவு தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் இருந்தாலும் கலாமை ஆதரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

1 comments:

நாகை சிவா said...

ரப்பர் ஸ்டார்ப் தேவைப்படுற, ரெடி பண்ற இந்த நேரத்தில் இப்ப்டி ஒரு குண்டு வந்து விழுந்தா என்ன பண்ணுவாங்க சொல்லுங்க...