Return of the ஓ... பக்கங்கள்!

நானும் என் சிநேகிதியுமாக சுமார் 15 வருடங்கள் நடத்திய எங்கள் குடும்பத்துக்கென, சில நியதிகள் வைத்திருந்தோம். இருவரும் பிரிந்த பிறகு தனித்தனியே நடத்தும் எங்கள் வாழ்க்கையிலும் இந்த நியதிகளில் பலவற்றைத் தொடர்கிறோம்.

எங்கள் வீட்டுக்கு வரும் நண்பர்கள் யாரும் விருந்தினர்களாகக் கருதப்பட மாட்டார்கள். எங்கள் வீட்டில் அவர்களும் ஓர் அங்கமாகவே கருதப்படுவார்கள். சமையலறையில் இருப்பதைப் பயன்படுத்தி யாரும் சமைத்துச் சாப்பிடலாம்.

நாங்கள் சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள் என்பதால், சைவச் சமையலுக்கான பொருட்களே இருக்கும். அசைவ உணவு சாப்பிடும் நண்பர்கள் வெளியிலிருந்து வாங்கிக்கொண்டு வருவார்கள். சிலர் இங்கேயே அசைவம் சமைத்துச் சாப்பிட்டதும் உண்டு. எங்கள் வீட்டுக்குள் யாரும் புகை பிடிக்கவும் வன்வகை மது அருந்தவும் அனுமதி இல்லை.

வீட்டில் சோபா, நாற்காலிகள் கிடையாது. தரையில்தான் உட்காருவோம்; சாப்பிடுவோம்; தூங்குவோம். கம்ப்யூட்டருக்கு மட்டுமே மேசை, நாற்காலி. தரையில் உட்கார இயலாத உடல்நிலை உள்ளவர்கள் பயன்படுத்த ஒரு மர பெஞ்ச் உண்டு. அதில் பெரும்பாலும் பத்திரிகைகளும் புத்தகங்களுமே குவிந்துகிடக்கும்.

நாங்கள் நாத்திகர்கள் என்பதால், எங்கள் வீட்டில் எந்த கடவுள் உருவங்களோ, அடையாளங்களோ கிடையாது. எங்கள் வீட்டில் இதுவரை சமயரீதியிலான எந்தச் சடங்குகளும் நடந்தது இல்லை.

கடவுள் நம்பிக்கை உள்ள வயது முதிர்ந்த உறவினர்கள் சிலர் தற்காலிகமாக எங்கள் வீட்டுக்கு வந்து சில தினங்கள் தங்கிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஓரிரு முறை நேர்ந்தபோது,


அவர்களும் எங்களிடம் பூஜை அறை எங்கே என்று கேட்டதில்லை. தங்கள் பெட்டிகளிலிருந்து தாம் கொண்டு வந்த சாமிப் படங் களை எடுத்து வைத்துக்கொண்டு, தனியே தொழுதுவிட்டுப் போவார்கள்.

இதெல்லாம்தான் எங்கள் வீட்டு நடைமுறைகள். இப்படி ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ் வொரு குடும்பத்துக்கும் விதவிதமான பழக்கவழக்கங்கள் இருக்கும். இன்னொருவர் வீட்டுக்கு நாம் போகும்போது, அங்கே நமக்கு ஏற்காதவற்றில் நாம் பங்கேற்பதில்லை. உடன்பாடு உள்ளவற்றில் மட்டுமே உறவாடுகிறோம். உடன்பாடில்லாதவர்கள் வீட்டுக்குப் போய் நாம் தங்குவதில்லை.

இந்த நடைமுறைகளில் எந்தத் தவறும் இல்லை &ஒரே ஒரு முக்கியமான ஆபத்தைத் தவிர! அது என்ன? கடைசி பத்திகளில் பார்ப்போம்.

ஆஸ்திரேலிய பிரதமர் ஹோவர்ட் முன்வைத்து வரும் சில கருத்துக்கள், இன்று உலகம் முழுவதும் தொடர் விவாதங்களை எழுப்பி வருகின்றன. உலகில் பல நாடுகளிலிருந்தும் பல வகை மக்கள் ஆஸ்திரேலியாவுக்குப் போய் குடியேறி வருகிறார்கள். அப்படிக் குடியேறும்போது, வெவ்வேறு கலாசாரங்களிலிருந்து வருபவர்கள் சந்திப்பதால் சிக்கல்கள் தோன்றுகின்றன.

ஒரு காலத்தில் ஆஸ்திரேலியா, நிறவெறி மிகுந்த வெள்ளையர்களின் சமூகமாக இருந்தது. பின்பு அது மாறி, ‘மல்ட்டி கல்ச்சுரல் சொசைட்டி’ எனப்படும் பன்முகக் கலாசாரங்கள் கலக்கும் தேசமாக மாறத் தொடங்கியது.

கலாசாரங்கள் கலப்பது என்பது என்ன?

இதைப் பற்றி வெவ்வேறு பார்வைகள் இருக்கின்றன. இன்னொரு கலாசாரத்திலிருந்து தனக்குப் பிடித்ததை எடுத்துக்கொண்டு, தன் கலாசாரத்தின் ஒரு பகுதியாக அதை ஆக்கிக்கொள்வது என்பது ஒரு பார்வை. பிடித்ததைப் பின்பற்றினாலும் தன் கலாசாரத்தை அப்படியே தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பது இன்னொரு பார்வை. யாரும் எந்தக் கலாசாரத்தையும் அப்படியே வைத்துக்கொள்ளத் தேவையின்றி, எல்லாவற்றையும் கலந்து பயன்படுத்துவது என்பது மூன்றாவது பார்வை.

இதில் என்ன சிக்கல் என்றால், ஒரே சமயத்தில் எல்லா சமூகங்களிலும் மூன்றும் நடந்துகொண்டே இருக்கின்றன. இன்னும் பெரிய சிக்கல் &தன் கலாசாரம்தான் மேலானது என்ற பார்வை.

‘‘ஆஸ்திரேலியாவின் சட்டதிட்டங்களை, பழக்கவழக்கங்களை, நெறிமுறைகளை ஏற்று வாழ்வதானால் இங்கே வா! உன் தேசத்துக் கலாசாரம் சிறந்தது என்றால், அங்கேயே இருந்துகொள்! அதை எங்கள் மீது திணிக்கப் பார்க் காதே!’’ என்கிறார் ஹோவர்ட்.

அவர் கருத்துக்குப் பின்னால் பழைய வெள்ளை நிறவெறித் தொனி இருப்பதாகச் சிலர் கருதுகிறார்கள். அதே சமயம், ஆஸ்திரேலியாவில் குடியேறி வரும் இஸ்லாமியர்களின் கலாசாரத்துடன் ஏற்படத் தொடங்கியுள்ள மோதலின் அடையாளமாகவும் இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதலை அடுத்து உலகம் முழுவதும் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை அரசுகள் கடுமையாக்கின. குறிப்பாக, இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில், எல்லா இஸ்லாமியர்களுக்கும் எதிரான மனநிலையை உருவாக்குவது என்ற போக்கு உருவானது. இதை மேலும் சிக்கலாக்கும் விதத்தில், ஆஸ்திரேலியாவில் சில இஸ்லாமிய மதத் தலைவர்கள் ‘ஜிஹாத்’ பற்றியும், பல சமூக விஷயங்கள் பற்றியும் கூறும் கருத்துக்கள் அமைந்துவிட்டன.

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இமாம் ஷேக் ஹமீத் ஹிலாலி, சிட்னி நகரில் வெள்ளைப் பெண் மீது நடந்த பாலியல் வன்முறையில், லெபனான் முஸ்லிம் இளைஞர்களுக்கு அளிக்கப் பட்ட 65 வருட சிறைத் தண்டனையை விமர் சித்துப் பேசினார். ‘‘மூடாமல் பொது இடத்தில் இறைச்சியை வைத்தால், பூனை வந்து சாப் பிடத்தான் செய்யும். அது பூனையின் குற்றம் அல்ல; உடலை மூடி மறைத்து உடையணியாத பெண்கள் அந்த இறைச்சியைப் போன்றவர்கள்’’ என்று ஹிலாலி கூறியதை, ஹோவர்ட் கடுமையாகக் கண்டித்தார்.

‘‘ஆஸ்திரேலியா, கிறிஸ்துவ நம்பிக்கையில் உருவாக்கப்பட்ட நாடு. கிறிஸ்துவர்களால் உருவாக்கப்பட்ட நாடு. இந்தச் சமூக வாழ்க்கையைத் தீர்மானிப்பது இதன் ஜனநாயகமும், நாடாளுமன்றமும், சட்டமும் தான். இவற்றை ஏற்றுக்கொள் ளாதவர்கள் இங்கே வரத் தேவையில்லை. ஷரியத் சட்டம், ஷரியத் வாழ்க்கை முறைதான் சிறந்தது என்று கருதினால், அது எந்த நாட்டில் இருக்கிறதோ, அங்கே போய் வாழுங்கள். இங்கே வருவதானால், இங்குள்ள சட்டத்தை ஏற்று வாழுங்கள்’’ என்றார் ஹோவர்ட்.

ஹோவர்டின் பேச்சுக்குப் பின்னால், ஆஸ்திரேலியா என்பது கிறிஸ்துவர்களின் நாடு என்ற தவறான தகவலும், அதற்குக் காரணமான வெள்ளை ஆதிக்க மனப்பான்மையும்... ஹிலாலியின் பேச்சுக்குப் பின்னால், மதப் பழைமைவாதத்தின் இறுக்கமும் கலந்திருக்கின்றன.

ஒரு நவீன தேசம்/சமூகம் என்பது புதிய சிந்தனைகளான ஜனநாயகம், சமத்துவம், சுதந்திரம் போன்ற கோட் பாடுகளின் அடிப்படையில்தான் அமைய முடியுமே தவிர, சாதி, மதக் கோட்பாடுகளின் அடிப்படையில் அல்ல!

ஹோவர்டின் பேச்சுக்கள் அண்மைக்காலமாக இன்டர்நெட்டில் இந்துத்துவ தீவிரவாதிகளால் அதிகமாகச் சுற்றுக்கு விடப்பட்டு வருகிறது. அதாவது, ‘ஆஸ்திரேலியாவில் வாழ்வதானால், இன்ன மாதிரி இரு; இல்லாவிட்டால் வெளியேறி விடு!’ என்று முஸ்லிம்களுக்கு ஹோவர்ட் சொல்வது போல, இந்தியாவிலும் சொல்லப்பட வேண்டும் என்ற பிரசாரமாக இது நெட்டில் செய்யப்பட்டு வருகிறது. எப்படி ஆஸ்திரேலியா, கிறிஸ்துவக் குடியரசு இல்லை என்பதை மறந்துவிட்டு ஹோவர்ட் பேசுகிறாரோ, அதே போல இந்தியாவும் மதச்சார்பு அற்ற குடியரசுதான் என்பது இவர்களால் வசதியாக ம(¬)றக்கப்பட்டுவிடுகிறது.

ஒரு மதச்சார்பற்ற குடியரசு மத விஷயங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு பிரான்ஸ் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், பள்ளிக்கூட மாணவர்கள் எந்த மத அடையாளத்தையும் வகுப்புக்கு அணிந்து வரக் கூடாது என்ற விதியைக் கடுமையாக்கியது பிரான்ஸ். முஸ்லிம் மாணவிகள் முகமூடித் துணி, தலைக்கட்டு அணிவதையும், கிறிஸ்துவ மாணவர்கள் வெளியில் தெரிவது போல சிலுவை கோத்த சங்கிலிகள் அணிவதையும் தடை செய்தது.

நாமோ எல்லா மதங்களைப் பற்றியும் அவற்றின் சிறப்புக்கள், சிக்கல்கள் பற்றியும் குழந்தைப் பருவத்திலேயே பாடம் சொல்லித் தரத் தயாராக இல்லை. ஆனால், பள்ளிக்கூடங்களில் சர்வ மதப் பிரார்த்தனை செய்வதையே மதச்சார்பற்ற தன்மை என்று தவறாகக் கருதி வருகிறோம்

நம் சமூகம், டைவர்சிட்டி எனப்படும் பன்முகக் கலாசாரத் தன்மையைப் பாதுகாப்பது அவசியம்தான். ஆனால், டைவர்சிட்டி என்பது ஈக்வாலிட்டிக்கு & மனித சமத்துவத்துக்கு எதிரானதாக இருக்க முடியாது.

நம் வீட்டுப் பழக்கவழக்கங்கள் சாதி அடிப்படையிலோ, மத அடிப்படையிலோ, வர்க்க அடிப்படையிலோ மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகளைக் கற்பிக்காதவையாக இருக்கவேண்டும். அப்போதுதான் வீட்டுக்கு வீடு வேறுபடும் பழக்கவழக்கங்களை மதிக்க இயலும்.

வீட்டுக்கு வீடு நம் பழக்கங் கள் வேறுபடலாம்; வெளியே வந்ததும் எல்லாரும் பொதுவாக ஏற்கும் நடைமுறைகளையே நாமும் பின்பற்றுகிறோம். எல்லா வண்டிகளும் இடப்பக்கம் செல்ல வேண்டும் என்கிறபோது, ஒருவர் மட்டும் வலப்புறம் செல்வதில்லை. சென்றால் விபத்துதான்!

ஹிலாலிகளும் வேதாந்திகளும்தான் சமூகத்தை விபத்துக்களில் தள்ளுகிறார்கள்!

நன்றி - விகடன்

0 comments: