கடவுள் என்னிடம் கரைச்சல் செய்த பொழுதொன்றில்

"என் வயசு என்னயிருக்கும் சொல்லுங்க பார்ப்போம்!"

எனக்கு சாமியார்களின் மீது நம்பிக்கையே கிடையாது, பொய் சொல்கிறவர்கள், மக்களை ஏமாற்றுபவர்கள் என்பதைத் தவிர அவர்களின் மேல் அவ்வளவு பெரிய அபிப்ராயம் ஒன்றும் கிடையாது. ஒருநாள் மாலை நேர வழக்கமான நடைப்பயிற்சியின் பொழுது உங்கள் கையைக் காண்பியுங்கள் உங்களைப் பற்றிச் சொல்கிறேன் என்று கேட்ட சாமியாரின் மூக்கை உடைப்பதற்காகவாவது கையை நீட்டுவது என்று தீர்மானித்தேன். அந்த ஆளை அப்பொழுது முதன் முதலாக அந்தப் பகுதியில் பார்க்கிறேன். முதல் கேள்வியிலேயே ஆளைக் காலி செய்வதற்காக நான் உபயோகித்த ஆயுதம் தான் என் முதல் கேள்வி. என்னைப் பார்த்து என் வயதை ஊகிப்பதென்பது சாத்தியமேயில்லை என்று எனக்குத் தெரியும்.

மர்மமாகச் சிரித்தவர், "சரி..." என்றபடி மேலும் கீழும் என்னைப் ஒருமுறை பார்த்துவிட்டு, "உங்க வயசு 24 தானே!" உண்மையில் நான் அசந்தே போய்விட்டேன். சாத்தியமேயில்லை என்னைப் பார்த்து வயதைச் சரியாகச் சொன்னவர் இதுவரை யாருமேயில்லை. என் ஆச்சர்யம் அவரது முகத்தில் பிரதிபலித்தது.

தொடர்ந்து என் கைகளை ஊன்றிக்கவனித்தவர்,

"உனக்கு ஒரே ஒரு சகோதரி மட்டும் இருக்காங்க இல்ல, உங்க அம்மா அப்பா இரண்டு பேரும் ஆசிரியர்கள் இல்லையா?"

கிழிஞ்சது அடச்சே நான் காண்பது கனவு மாதிரியிருக்கே ஒருவேளை மாஜிக்கல் ரியலிஸம் பத்தி யோசிச்சு யோசிச்சு இப்ப கனவிலேயே வந்துவிட்டதோ என்று நினைக்கும் பொழுது உணர்வின் வழியில் இல்லை இது கனவில்லை கண்முன்னே இருக்கும் நபர் உண்மை நான் அவருடன் பேசிக்கொண்டிருப்பது உண்மை என்றும் உணர்ந்தேன்.

"கனவில்லை நண்பனே நீ காண்பதும் கனவில்லை நான் சொல்வதும் மாயமில்லை!" தாடியை நீவிவிட்டுக்கொண்டே அந்த நபர் சிரிக்க எனக்கு உள்ளே பகபகவென்று எரிந்தது. இது சாத்தியமாயிருக்க நியாயமில்லை அந்த நபர் இதையும் ஏதோ அதிர்ஷ்டத்தில் சொல்லியதாகத்தான் நான் நினைத்தேன். அவ்வளவு எளிதாய் என் தத்துவ நம்பிக்கைகளின் மீது கட்டப்பட்ட கோட்டையை தகர்த்துவிட முடியவில்லை. ஜோசியம் ஜாதகம் கைரேகை பார்ப்பது எல்லாம் மூடநம்பிக்கை தான் அது உண்மையாகயிருக்க வாய்ப்பேயில்லை என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்டேன்.

"உன் கைரேகை படி இருபது வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டிருப்ப, உன் இருபத்தொன்னாவது பிறந்தநாளின் பொழுது நீ வாழ்க்கையில் எதையெதையெல்லாம் அடையணும்னு நினைச்சிருந்தாயோ அதெல்லாம் உனக்கு கிடைத்திருக்கும். அதற்கு அடுத்த மூன்று ஆண்டுகளிலும் உனக்கு இறக்கமேயில்லாமல் ஏற்றம் மட்டுமே இருந்திருக்கும். நீ இன்வெஸ்ட் செய்த இடங்களில் எல்லாம் உனக்கு லாபமே கிடைத்திருக்கும், ஆகமொத்தத்தில் கடைசி பத்துவருடங்களில் நீ அனுபவித்த கஷ்டங்களுக்கு எல்லாம் தீர்வு கிடைத்திருக்கும்."

சொல்லிவிட்டு என் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தார், என்னவோ என் கண்களில் இருந்து அடுத்த உண்மைகளைக் கொண்டுவரப்போகிறவராய். என் காதுகளை என்னால் நம்ப முடியவில்லை, நான் நினைத்தேன் என் நண்பர்கள் தான் என்னுடன் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று. என் நாத்தீக வாதத்தை எதிர்க்கமுடியாமல் என் நண்பர்கள் பர்ஸனல் இன்ஃபர்மேஷன்களைக் கொடுத்து இந்த சாமியார்களைச் செட்டப் செய்திருப்பார்கள் என்று. இதுவரை அந்த சாமியார் சொன்ன விஷயங்கள் முழுவதுமே என்னைப் பற்றி கொஞ்சம் நன்றாய்த் தெரிந்த நபர்கள் கொடுத்திருக்கக்கூடியவை தான். என் சந்தேகம் வழுக்க நான் கேள்வியை கொஞ்சம் கடினமாக்கினேன்.

"சரி இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்கள், என் வாழ்க்கையிலேயே ஒருதடவை தான் நான் காதலித்திருக்கிறேன். அது எப்ப? என் காதல் என்னாச்சு? யார் அந்த பொண்ணு?"

பதின்மைத்தின் தொடக்கத்தில் நான் செய்த காதலைப் பற்றி தெரிந்தவர்கள் ரொம்பவும் குறைவே, என் குடும்பத்தினர் தவிர்த்து ஒன்றிரண்டு பள்ளி நண்பர்களுக்கு மட்டுமே தெரியும். பார்ப்போம் இந்த போலிச் சாமியார் இதற்கு என்ன பதில் சொல்கிறார் என்று நினைத்தேன்.

"தம்பி உன் கண்களைக் கூட என்னால் படிக்கமுடியும் நீ உன் நண்பர்களைச் சந்தேகிக்கிறாய் அப்படியே என் திறமையையும் சரி ஒரு நிமிடம் பொறு!" என் கைகளை ஊன்றிக் கவனித்தவர், ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்து கணக்குப் போடத்துவங்கினார்.

ஐந்து நிமிடங்கள் கழித்து அந்த நோட்டில் கடைசியாய் இரண்டு புள்ளிகள் வைப்பது மட்டும் எனக்குப் புரிந்தது. சட்டென்று நிமிர்ந்தவர்,

"நீ சொல்ற காதல் நடந்தப்ப உனக்கு 18 வயது நீ பன்னிரெண்டாவது படித்துக் கொண்டிருந்தாய், அந்தப் பெண் எட்டாவது படித்துக் கொண்டிருந்தாள். உன் காதல் நிறைவேறாத ஒன்றாகயிருந்திருக்க வேண்டும், அதைக் காதல் என்று கூட நீதான் சொல்கிறாய் நான் அல்ல. என் கணக்கின் படி பார்த்தால் அவளது பெயர் Mல் தொடங்க வேண்டும். பெரியதாக இல்லாமல் சுருக்கமான ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். என்னுடைய ஊகத்தின் படி அவள் பெயர் மீனாவோ இல்லை மீனாக்ஷியோ! சரியா?"

ஏறக்குறைய நான் மயக்கம் போட்டுவிடும் நிலைமைக்கு வந்துவிட்டேன். அவள் பெயர் மீனாதான் பெயர் அளவிற்குத் தெரிந்தவர்கள் என் குடும்பத்தினரைத் தவிர வேறு யாரும் இல்லை. என் குடும்பத்தினரை விசாரித்திருந்தால் நிச்சயம் என்னிடம் சொல்லியிருப்பார்கள் அப்படியென்றால் இந்தச் சாமியார் போலியல்ல என்று உணர்ந்தேன்.

"என் கைரேகையை வைத்து இவ்வளவு விஷயம் சொல்லமுடியுமா?"

"உன்னுடைய ஏழு பிறவிகளையும் சொல்லமுடியும் உன் கைரேகையை வைத்து! அந்த அளவிற்கு இந்த வித்தையை அறிந்தவர்கள் தற்சமயம் மிகமிகக் குறைவு. அதன் காரணமாகவே இருக்கும் சிலரையும் மக்கள் போலியானவர்கள் என்று நம்பும்படியாகிவிடுகிறது."

"சரி இத்தனை திறமையுள்ள நீங்கள் என்னிடம் இதைச் சொல்ல நிரூபிக்க வேண்டிய அவசியம் என்ன? என்னை நாத்தீகனிலிருந்து ஆத்தீகனாக்குவது தான் ஒரே காரணமா?"

"இல்லை யாரையும் ஒன்றிலிருந்து மற்றொன்றாக்குவது என் வேலையல்ல, முடியக்கூடியதுமல்ல அது. சொல்லப்போனால் எதையும் சந்தேகிக்காமல் ஏற்றுக்கொள்வது சரியான முறையல்ல. அதனால் தான் நாத்தீகனாயிருந்து எல்லாவற்றையும் கேள்விகேட்டு கடைசியில் பதில் கிடைத்து ஆத்தீகனானவர்களுக்கு உலகின் ரகசியங்கள் ஆரம்பத்தில் இருந்தே ஆத்தீகனாயிருப்பவர்களை விடவும் எளிதில் தெரியும்! நீ கேட்டாயே எதற்காக என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று, நீ தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்னால் இல்லை, நமக்கு எல்லாம் மேலிருந்து ஒரு சக்தி இயக்குகிறதே அதனால். இந்தத் தந்திரங்களைப் பயன்படுத்தி உன்னை பரம்பொருளை நம்பவைப்பது என்பதே கூட எனக்கு ஒவ்வாத ஒரு காரியம் தான். ஆனால் இது இப்படி இப்பொழுது நடந்தே ஆகவேண்டும் நடக்கிறது!"

கண்களை மூடி கடவுளிடம் பேசுவதைப்போல் தலைநிமிர்ந்து ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார் அந்தச் சாமியார். நான் எனக்கு நடக்கும் எதையும் புரிந்துகொள்ள முடியாதவனாய் அவரையே பார்த்தபடி நான் இருந்தேன்.

"உன் வாழ்க்கையில் எத்தனை முறை எத்தனை பேரைக் கேட்டிருப்பார் நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா என்று? இன்று உனக்கு நான் காண்பிக்கிறேன் கண்களை மூடு! உன் மூளையை மட்டும் திறந்து வைத்துக் கொள்!"

சொன்னவர் மெதுவாக என் கண்களை மூடி வரப்போவது அனுபவிக்கத் தயாரானேன். அவருடைய கைகள் என் தலையில் ஆசிர்வாதம் அளிப்பதைப் போல் தொட, எனக்குள் ஒரு உள்ளொளி பரவியது, உடம்பெல்லாம் ஒரு அதிர்வு, யாரோ என்னை ஆட்கொள்வதைப் போன்ற உணர்வு தூரத்தில் ஒரு ஒளி அதுவரை இருண்மையாக இருந்த என் மனதின் வெளிச்சமாய் இறைவன் பரவுவதை உணர முடிந்தது. ஆஹா எவ்வளவு முட்டாள்த்தனமாயிருந்துவிட்டோம்! கடவுளே! சரி இதுவும் கூட நமக்கான ஒரு பயிற்சிதான். என் கைகள் நானாகவே உணராமல் அந்த உள்ளொளியை நோக்கி கரம் குவித்தது. மெதுவாய் அந்த அதிர்வு குறைந்து மனம் நிறைந்ததைப் போலிருந்தது. நான் மெதுவாகக் கண்களைத் திறந்தேன்.

ஷிட் ஐம்பது அறுபது நபர்கள் என்னைச் சுற்றி நின்றுகொண்டிருந்தார்கள், நான்கைந்து காமெராக்கள் என்னைச் சுற்றி படமெடுத்துக் கொண்டிருந்தன. அந்தச் சாமியார் என்னை நெருங்கி வந்து, "சார் நாங்க Q TVல் இருந்து வருகிறோம், Just for laughs gags நிகழ்ச்சிக்காக. உங்களைப் பற்றிய விவரங்களையெல்லாம் ஒரு டிடெக்டிவ் நிறுவனம் வைத்து சேகரித்தோம், கடைசியா நீங்க ஃபீல் பண்ணினது ஒரு மைல்ட் ஷாக் அவ்வளவே!" என்று சொல்ல நான் முகம் முழுவதும் வழிவதைத் துடைக்கமுடியாமல் அப்படியே நின்றேன்.

7 comments:

அன்புடன் அருணா said...

அடப்பாவமே...நல்லா எழுதிருக்கீங்க ...இப்பிடி ஆச்சேன்னு எனக்கே கொஞ்சம் வருத்தமாக இருந்தது..
அஃன்புடன் அருணா

யு.எஸ்.தமிழன் said...

எல்லாமே நம்பும்படியாக இருந்தது கடைசி பாராவைத்தவிர. ஜோசியத்தை நம்பாதா நாத்திகவாதிக கூட இருக்காங்களா? நம்பமுடியவில்லை!

:p

VB2010 said...

அருமையான எழுத்து நடை.... படிப்பவர்களை வேறு எங்கும் போகவிடாத எழுத்து நடை... வாழ்க தோழா ... இன்னும் இன்னும் நிறைய எழுதுங்கள்....

பின் புலம் said...

unga Nathigam kadaisila vettri pettuduchi

நட்புடன் ஜமால் said...

//அருமையான எழுத்து நடை.... படிப்பவர்களை வேறு எங்கும் போகவிடாத எழுத்து நடை... வாழ்க தோழா ... இன்னும் இன்னும் நிறைய எழுதுங்கள்....//

ரிப்பீட்டோய் ...

நம்பிட்டீங்களோன்னு நினைச்சிட்டேன்.

சில நிமிடம் உங்கள் எழுத்துக்களைவிட்டு விலக இயலவில்லை.

நல்ல நடை.

என்கிட்ட மட்டும் சொல்லுங்க - இது முழுதுமே கற்பனை தானே?

ராஜன் அருணசலம் said...

நன்றக இருந்தது, எழுத்து தொடரட்டும்!

Kannan S said...

With that last para, even I too got shocked..

Vazhathukkal