கூட்டணியால் திமுக முன்னிலை - கருத்துக் கணிப்பு

கூட்டணியால் திமுக முன்னிலை: லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு

சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு 44.5 சதவீதத்தினரும், அதிமுக கூட்டணிக்கு 40.1 சதவீதத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளதாக சென்னை லயோலா கல்லூரி நடத்திய லேட்டஸ்ட் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

அதே நேரத்தில் தனிப்பட்ட கட்சி என்ற முறையில் திமுகவை விட அதிமுகவே அதிகமான ஆதரவைப் பெற்றுள்ளது. அதிமுகவுக்கு 38.5 சதவீத ஆதரவும் திமுகவுக்கு 36.8 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளது.

சென்னையின் பிரபல லயோலா கல்லூரியின் ஊடகவியல் துறை மற்றும் காட்சித் தகவலியல் துறை ஆகியவை இணைந்து நீலகிரி மாவட்டத்தைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் இந்த ஆண்டில் இரண்டாம் முறையாக கருத்துக் கணிப்பு நடத்தியது.

122 சட்டசபைத் தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களிடம் கடந்த 5ம் தேதி முதல் 15ம் தேதி வரை இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

கருத்துக் கணிப்பு முடிவுகளை குழுத் தலைவர் பேராசிரியர் ராஜநாயகம் இன்று செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.

அதன் விவரம்:

கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 44.5 சதவீதம் பேர் திமுக அணிக்கு ஆதரவாகவும், 40.1 சதவீதம் பேர் அதிமுக அணிக்கும் ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தனர்.

அரசு ஊழியர்களில் 62.5 சதவீதம் பேர் திமுக அணிக்கு ஆதரவாகவும், 28.3 சதவீதம் பேர் அதிமுக அணிக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சுய தொழில் செய்வோரில் 45.1சதவீதம் பேர் திமுக அணிக்கு ஆதரவாகவும், 39.9 சதவீதம் பேர் அதிமுகவுக்கு ஆதரவாகவும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தனியார் துறையில் மாத ஊதியம் பெறுவோரில் 44.5 சதவீதம் பேர் திமுக அணிக்கு ஆதரவாகவும், 35.3 சதவீதம் பேர் அதிமுக அணிக்கு ஆதரவாகவும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

சிறுபான்மையினர் மத்தியில் திமுகவுக்கு 47 சதவீத ஆதரவும், அதிமுகவுக்கு 44.5 சதவீத ஆதரவும் காணப்படுகிறது.

இப்போது தேர்தல் நடந்தால் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு அதிமுகவுக்கு ஆதரவாக 38.5 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். திமுகவுக்கு 36.8 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். விஜயகாந்த்தின் தே.மு.தி.க.வுக்கு 12.3 சதவீதம் பேர்ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதிமுக, திமுகவுக்கு அடுத்து வாக்காளர்கள் மனதில் விஜயகாந்த் கட்சிக்கு பெரும் ஆதரவு இருப்பது இதில் கவனிக்கத்தக்கது.

மற்ற கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோர் விவரம்:

காங்கிரஸ் 4.5 சதவீதம், சிபிஎம் 2.1 சதவீதம், பாமக 1.8 சதவீதம், மதிமுக 1.2 சதவீதம், பாஜக 0.5 சதவீதம், விடுதலைச் சிறுத்தைகள் 0.3 சதவீதம்.

2004ம் ஆண்டு அதிமுக ஆதரவாக கருத்து தெரிவித்தோர் சதவீதம் 19 சதவீதமாக இருந்தது. ஆனால் திமுகவுக்கு 41.7 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

2005ம் ஆண்டு மே மாதம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின்போது, அதிமுகவுக்கு 30.1 சதவீதம் பேரும், திமுகவுக்கு 46.1 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் அதிமுகவுக்கு 33.7 சதவீதம் பேரும், திமுகவுக்கு 38.5 சதவீதம் பேரும் ஆதரவு அளித்திருந்தனர்.

தற்போது எடுக்கப்பட்டுள்ள கருத்துக் கணிப்பில் அதிமுக சற்றே முந்தியுள்ளது. 38.5 சதவீத ஆதரவு அக்கட்சிக்குக் கிடைத்துள்ளது. திமுகவுக்கு 36.8 சதவீத ஆதரவே கிடைத்துள்ளது.

இது கட்சி அடிப்படையிலான கருத்துக் கணிப்பு. ஆனால் எந்த அணிக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு திமுக அணிக்கு சாதகமாகவே கருத்து வெளியாகியுள்ளது.

44.5 சதவீத ஆதரவை திமுக அணி பெறுகிறது, அதிமுக அணிக்கு 40.1 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.

இரு கூட்டணிகளும் கிட்டத்தட்ட சம பலத்தில் இருப்பதால் கூட்டணி ஆட்சிக்கே அதிக வாய்ப்புகள் இருப்பதும் புலனாகிறது.

இதுவரை இல்லாத அளவுக்கு இரு கூட்டணிகளும் கடும் நெருக்கடியில் இருக்க முக்கியக் காரணம் விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம்தான் என்பதையும் அறிந்து கொள்ள மு¬டிகிறது. இக்கட்சிக்கு வாக்காளர்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதும் புலனாகிறது.

இந்தத் தேர்தலில் எந்த அலையும் வீசவில்லை என்று வாக்காளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல சேப்பாக்கத்தில் கருணாநிதியும், ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவும் வெல்வார்கள் என கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

தேர்தல் அறிக்கைகளைப் பொறுத்தவரை திமுக தேர்தல் அறிக்கைக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. திமுக அறிக்கைக்கு 59.4 சதவீத ஆதரவும், அதிமுக தேர்தல் அறிக்கைக்கு 58.6 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளது.

இதிலும் இரு கட்சிகளும் சம ஆதரவையே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெண்களின் ஓட்டுக்கள் பெரும்பாலாக அம்மா கட்சிக்குத்தான். கிட்டத்தட்ட 55.4 சதவீத பெண்கள் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். திமுகவுக்கு 31.7 சதவீத பெண்களின் ஆதரவுதான் உள்ளது. விஜயகாந்த் கட்சிக்கு 11. 2 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.

ஆண்களைப் பொறுத்தவரை திமுக முந்திக் கொண்டுள்ளது. இக்கட்சிக்கு 45.8 சதவீத ஆதரவும், அதிமுகவுக்கு 38.6 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளது. தே.மு.தி.க.வுக்கு 12.4 சதவீத ஆதரவு காணப்படுகிறது.

படிக்காதவர்கள் மத்தியிலும் அதிமுகவுக்கே ஆதரவு அதிகம் உள்ளது. 55.6 சதவீதம் பேர் அதிமுகவையும், 31.8 சதவீதம் பேர் திமுகவையும் ஆதரித்துள்ளனர்.

கல்லூரி படிப்பை முடித்தவர்கள் மத்தியில் திமுகவுக்கு நல்லஆதரவு காணப்படுகிறது. அதாவது 47.3 சதவீதம் பேர் திமுகவுக்கும், 34.2 சதவீதம் பேர் அதிமுகவுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் 'அம்மா'வுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளன. அதிலுள்ளவர்களில் 68.1 சதவீதம் பேர் அதிமுகவுக்கு ஆதரவாக உள்ளனர். திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தோர் எண்ணிக்கை 23.2 சதவீதமாகும்.

திருமணமான பெண்கள் மத்தியில் அதிமுகவுக்கு 50 சதவீத ஆதரவும், திமுகவுக்கு 41.1 சதவீத ஆதரவும் உள்ளது.

மொத்தத்தில் இந்தக் கருத்துக் கணிப்பை கூர்ந்து பார்த்தால் திமுக மற்றும் அதிமுக அணிகள் இரண்டும் கிட்டத்தட்ட சம பலத்தில் இருப்பதும், அதே நேரத்தில் கூட்டணிக் கட்சிகள் பலத்தால் திமுக சற்றே முன்னிலையில் உள்ளதும் தெரியும்.

அதே போல விஜயகாந்த் புதிய அரசியல் சக்தியாக உருவெடுக்க இருப்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம் இருப்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது.

இதுவரை வந்த கருத்துக் கணிப்புகளிலேயே தற்போதுதான் திமுக அணிக்கு சாதகமாக ஒரு கருத்துக் கணிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சன் டிவி முன்னிலை:

தொலைக்காட்சிகளைப் பொறுத்தவரை சன் டிவியே முதலிடத்தில் உள்ளது.

சன் டிவியை பார்ப்போரின் எண்ணிக்கை 35.6 சதவீதமாகும். பொதிகை டிவிக்கு 18.6 சதவீத ஆதரவுடன் 2வது இடம் கிடைத்துள்ளது. ராஜ் டிவிக்கு 6.6 சதவீத ஆதரவுடன் 3வது இடமும் ஜெயா டிவி 4.4 சதவீத ஆதரவுடன் நான்காவது இடத்தில் உள்ளது. விஜய் டிவிக்கு 3 சதவீத ஆதரவுடன் 5வது இடமும் கிடைத்துள்ளது.

முதலிடத்தில் தினத்தந்தி:

தமிழ் நாளிதழ்களில் வாசகர்களால் அதிகம் விரும்பப்படும் தினசரிகளில் தினத்தந்தி வழக்கம் போல முதலிடத்தில் உள்ளது. இந்த நாளிதழுக்கு 25.5 சதவீதம் பேரும், தினமலருக்கு 15.8 சதவீதமும், 'புதிய' தினகரன் நாளிதழுக்கு 15.7 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளது. தினமணி நாளிதழுக்கு 6 சதவீத வாசகர்கள் ஆதரவும் உள்ளது.

தினகரனை சன் டிவி வாங்கி ரீலாஞ்ச் செய்தது குறிப்பிடத்தக்கது.

0 comments: