கலைஞர் 50

வாழ்ந்த காலத்தில் புகழின் உச்சத்தைத் தொட்டவர்கள் பூமிப்பந்தில் மிகக் குறைவு. அதிலும் வழுக்கு மரமென சறுக்கிவிழும் அரசியல் ஆடுகளத்தில் அதிகாரத்தோடு கோலோச்சியவர்களின் எண்ணிக் கையை விரல்விட்டு எண்ணி விடலாம். வர்க்கமும், சாதியுமாகப் பிரிந்து கிடக்கும் தமிழ்ச் சமூகத்தில் பெரியவர் கருணாநிதியின் அரசியல் தடத்தை எவராலும் புறக்கணிக்க முடியாது.



முதல்வர் கருணாநிதி தமிழக சட்டசபைக்குள் கால் பதித்து ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. 1957&ம் ஆண்டு குளித்தலை தொகுதியில் தொடங்கிய வெற்றி, இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்கு விழா எடுக்க முடிவாகி இருக்கிறது. பட்ஜெட் கூட்டத் தொடரின் முடிவில் ஜனாதிபதி அப்துல் கலாம் தலைமையில் விழா நடக்கப் போகிறது.

பம்பரம் விளையாடும் பதினான்கு வயதில் தமிழ் மாணவர் மன்றத்தைத் தொடங்கி அரசியல் வாழ்க்கைக்கு ‘அ’ போட்டவர் கருணாநிதி. அடிப்படை உறுப்பினராக தி.மு.க&வில் தொடங்கிய கருணாநிதியின் வாழ்க்கையில் பின்னாளில் ஏற்படப் போகும் மாற்றங்களை அவரே கற்பனை செய்துகூட பார்த்திருக்க மாட்டார்.

தள்ளாடும் வயதிலும் நக்கலுக்கும் நகைச்சுவைக்கும் பஞ்சமில்லாத மனிதர். இவர் இருக்குமிடத்தில் மகிழ்ச்சி இருக்கும்.

‘‘என்னோட தொகுதியான நிலக்கோட்டைக்கு ஒரு காலேஜ் வேணும்னு ரொம்ப நாளா கேட்டுக்கிட்டு இருந்தேன். ஒரு தடவை கேள்வி நேரத்துல நான் எழுந்து இதைக் கேட்கவும், ‘அக்காவுக்கு இல்லாத கல்லூரியா? உடனே அனுமதி கொடுத்துடறேன்’னு சொல்லிட்டாரு. அதுல இருந்தே எல்லாக் கட்சிக்காரங்களுமே என்னை அக்கான்னுதான் அன்பா கூப்பிடுவாங்க. நானும் கலைஞரை தம்பின்னுதான் கூப்பிடுவேன். ஆனா, இதுல ஒரு விசேஷம் என்ன தெரியுமா... என்னைவிட கலைஞர் மூத்தவர்! ஒரு கிண்டலுக்காக அவரு என்னை அப்படி கூப்பிடப் போய், Ôஅக்காÕன்னே இன்னைக்கு வரைக்கும் தொடர்ந்துட்டு இருக்கு...’’ &இப்படி பழைய நினைவுகளில் நெகிழ்ந்து போகிறார், முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ&வான நிலக்கோட்டை பொன்னம்மாள்.

கருணாநிதிக்கும் ராஜாத்தி அம்மாவுக்கும் காதல் மலர்ந்தது. ராஜாத்தி அம்மாள் பிரசவத்துக்காக சென்னையிலுள்ள அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆனபோது, மருத்துவமனையில் கணவர் பெயர் கேட்கப்பட... அவரும் Ôகருணாநிதி, தமிழகப் பொதுப்பணித் துறை அமைச்சர்Õ என பதிவு செய்ய... அதன்பிறகு நடந்த சட்டமன்ற கூட்டத்தில் கோவை திருமகன் என்ற உறுப்பினர், ‘பொதுப்பணி துறை அமைச்சர் கருணாநிதியை தனது கணவர் என்று ஒரு பெண் பிரசவத்தின்போது குறிப்பிட்டிருக்கிறார். ஏற்கெனவே திருமணமாகி மனைவியோடு இருக்கும் அமைச்சரை இன்னொரு பெண் கணவர் என்று குறிப்பிட்டால் என்ன அர்த்தம்? இதற்கு அமைச்சர் என்ன சொல்கிறார்..?’ என்று கருணாநிதியின் மகள் கனிமொழி பிறந்த சமயத்தில் கேள்வி எழுப்ப, அதற்கு கருணாநிதி எழுந்து, ‘கனிமொழி என் மகள். கனிமொழியின் தாயார் ராஜாத்திஅம்மாள்...’ என்று சொல்லி விட்டு அமர்ந்துகொள்ள, அவையில் அடக்க முடியாத சிரிப்பாம். இப்படி ஒரு பெரிய பிரச்னையைக்கூட சமயோஜிதமாக யோசித்து, சிக்கலை சாதுர்யமாக தவிர்க்கும் கலை அவருக்கே உரியது. அதேபோல, டைமிங் ஜோக் அடிப்பதில் அவருக்கு நிகர் அவரேதான்..!

‘‘நான் சபாநாயகரா இருந்தப்ப எதிர்க்கட்சி வரிசையில தி.மு.க&காரங்க உட்கார்ந்திருந்தாங்க. துரைமுருகனும் இன்னும் சில தி.மு.க. உறுப்பினர் களும் எழுந்து அவையை நடத்த முடியாத அளவுக்குக் கூச்சல் போட்டாங்க. நானும் எவ்வளவோ அடக்கிப் பார்த்தேன். யாரும் அடங்கவே இல்ல. ‘எப்படியோ போங்க... இனி உங்களை அந்த ஆண்டவன்தான் காப்பத்தணும்’னு சொல்லிட்டு அமைதியாயிட்டேன். அதுக்குப் பிறகு கருணாநிதி எழுந்து எல்லோரையும் அமைதிப்படுத்தி உட்கார வச்சாரு. அவுங்க எல்லோரும் அமைதியான பின்னாடி கலைஞர், ‘இவுங்களை எல்லாம் ஆண்டவன் தான் காப்பத்த முடியும்னு நீங்க சொன்னீங்க. அதான் நான் எல்லோரையும் அமைதிப்படுத்தினேன். ஏன்னா இதுக்கு முன்னாடி ஆண்டவன் நான்தானே’னு சொல்ல, அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். உட்பட எல்லோ ருமே சிரிச்சிட்டோம்’’ &இப்படி கரகரத்த குரலில் நினைவுகளை அசை போட்டார் முன்னாள் அமைச்சரும் சபாநாயகருமான க.ராஜாராம்.



கருணாநிதி எம்.எல்.ஏ&வாக ஆன காலத்தில்இருந்தே அவரது பேச்சை ரசிக்க ஒரு கூட்டம் திரளும். சட்டசபையில் எம்.எல்.ஏ. கருணாநிதி பேசுகிறார் என தெரிந்தாலே கேலரியில் கூட்டம் நிரம்பி வழியுமாம். கருணாநிதி பேச்சில் பொரு ளும், சுவையும் இருக்கும் என காமராஜரே வாயார பாராட்டுவாராம்.

‘‘இதேபோல்தான் அப்போதும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி... இங்கே கலைஞர் எம்.எல்.ஏ&வாக இருந்தார்! அப்போ மின்சார வாரிய நிலத்தில் நடந்த ஒரு மிகப்பெரிய மோசடியை ஆதாரத்தோடு சபையில் அம்பலப்படுத்தினார் பேராசிரியர். மறுநாள் ஏதோ காரணத்தினால் பேராசிரியர் சட்டசபைக்கு வரல. காங்கிரஸ் எம்.எல்.ஏ&வான அனந்தநாயகி எழுந்து, ‘நேத்து சபையில மோசடி அது இதுன்னு பேசிய பேராசிரியர் ஏன் இன்னைக்கு சபைக்கு வரல? அவருக்கு முதுகெலும்பு இருந்திருந்தா இன்னைக்கு வந்திருக்கணும்’னு கடுமையா பேசிட்டாங்க. உடனே எழுந்த கலைஞர், ‘பேராசிரியருக்கு முதுகெலும்பு இருக்கா இல்லையான்னு அவரோட பொண்டாட்டிக்குத்தானே தெரியும். அனந்தநாயகிக்கு எப்படி தெரியும்?’னு போட்டாரே ஒரு போடு. அவையில் சிரிப்பு சத்தம் அடங்க கிட்டத்தட்ட பத்து நிமிஷம் ஆச்சு..’’ என்று ஃப்ளாஷ்பேக்கை விவரிக்கும்போது தமிழக வேளாண்மை துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு இப்போதும் சிரிப்பை அடக்க முடியவில்லை!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் பலமுறை சட்டமன்ற உறுப்பி னராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர். ‘‘1961&ல் நில சீர்திருத்த சட்டம் கொண்டு வந்தபோது அதை எதிர்த்தவர் கருணாநிதி. அதே தலைவர் 1990&ம் ஆண்டு நில சீர்திருத்த சட்டம் கொண்டு வந்தபோது, அவர் 1961&ல் பேசியதை நான் சுட்டிக்காட்டிப் பேசினேன். அதற்கு கொஞ்சமும் கோபம் கொள்ளாமல், ‘நான் பேசியதை எனக்கே ஞாபகப்படுத்திய நண்பர் பாலசுப்ரமணி யத்துக்கு நன்றி’ என்று சொல்லியதோடு எனது கருத்துக்களையும் ஏற்றுக்கொண்டார்.

ஆட்டோ சங்கர் சிறையிலிருந்து தப்பி ஓடியபோது, சட்ட மன்றத்தில் அது பற்றிய விவாதங்கள் நடந்தன. ஆட்டோ சங்கர் சிறையிலிருந்து எப்படி தப்பித்தான், அவனுக்கு யாரெல்லாம் உடந்தையாக இருந்தார்கள் என்ற ஆதாரங்கள் எனக்குக் கிடைத்தது. அதை சட்ட சபையில் பேசும்போது ஆட்டோ சங்கர் தப்பிக்க அரசு தரப்பில் யாரெல்லாம் காரணம் என்பதை ஆதாரத்தோடு முன்வைத்தேன். அரசாங்கம் மீதே குற்றம் சுமத்தினேன். அத்தனையையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட கலைஞர், ‘ஒரு எதிர்க்கட்சி உறுப்பினர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பாலசுப்ரமணியம் இலக்கணமாக இருக்கிறார். அவர் சொன்னது அத்தனைக்கும் ஆதாரம் இருக்கிறது. என் கண்ணிலேயே மண்ணைத் தூவி விட்டு இவ்வளவு வேலைகள் நடந்திருப்பது வேதனையாக இருக்கிறது. உடனே இதற்கு விசாரணை கமிஷன் அமைக்கப்படும்’ என அறிவித்தார்.

எப்படி ராமாயணத்தில் வரும் வானர அரசன் வாலிக்கு, தன்னை எதிர்ப்பவர்களின் பலத்தில் பாதி போகுமோ அது போலத்தான் கலைஞருக்கும். அதுதான் அவரது வெற்றியின் ரகசியமே’’ என்கிறார் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்.

----------------------

நன்றி ஜூனியர் விகடன்.

3 comments:

கோவி.கண்ணன் said...

கலைஞர் பற்றிய சிறப்புக் கட்டுரை சுவையாக இருக்கிறது. பாராட்டுக்கள்

கலைஞரின் வயது நூற்றாண்டுகளைத் தொடட்டும்.

உண்மைத்தமிழன் said...

//‘கனிமொழி என் மகள். கனிமொழியின் தாயார் ராஜாத்திஅம்மாள்...’ என்று சொல்லி விட்டு அமர்ந்துகொள்ள, அவையில் அடக்க முடியாத சிரிப்பாம். இப்படி ஒரு பெரிய பிரச்னையைக்கூட சமயோஜிதமாக யோசித்து, சிக்கலை சாதுர்யமாக தவிர்க்கும் கலை அவருக்கே உரியது. அதேபோல, டைமிங் ஜோக் அடிப்பதில் அவருக்கு நிகர் அவரேதான்..!//

"ஒரு அரசு ஊழியர் முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே இரண்டாவது திருமணம் செய்தால் அது சட்டப்படி குற்றம். அவர் அரசு வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவார்." - இது தமிழ்நாடு அரசு ஊழியருக்கான நடத்தை விதிமுறைகளில் உள்ள ஒரு பகுதி.

//உடனே எழுந்த கலைஞர், ‘பேராசிரியருக்கு முதுகெலும்பு இருக்கா இல்லையான்னு அவரோட பொண்டாட்டிக்குத்தானே தெரியும். அனந்தநாயகிக்கு எப்படி தெரியும்?’னு போட்டாரே ஒரு போடு. அவையில் சிரிப்பு சத்தம் அடங்க கிட்டத்தட்ட பத்து நிமிஷம் ஆச்சு..’’//

உள்மனதில் எப்போதும் என்ன இருக்கிறதோ அதுதானே வெளியில் வரும்..

இங்கே பேசுபவருக்கும் வெட்கமில்லை. கேட்பவருக்கும் வெட்கமில்லை. 'பகுத்தறிவின்' விளைவுதான் இந்த வெட்கம்கெட்டத்தனம்.. வேறு என்ன சொல்வது?

ஜோ/Joe said...

ஐயா!
ஜீ.வி.க்கு ஒரு நன்றி-ன்னாவது போடக்கூடாதா?