தயாநிதி, கலாநிதி, சன் டிவி, தினகரன் - கனிமொழி

இந்த மே மாதத்தில் இரு தினங்கள் கலைஞர் எரிமலையாய்ப் பொங்கி வெடித்ததையும், குற்றால அருவியாய்க் குளிர்ந்ததையும் தி.மு.க. வரலாறு மட்டுமல்ல, அகில இந்திய அரசியல் வரலாறும் கவனமுடன் பதிவு செய்து கொண்டது.

மே 13 அன்று தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் கூடிய கட்சியின் உயர்மட்ட நிர்வாகக் குழு, மத்திய அமைச்சரவையிலிருந்து தயாநிதிமாறனை விலக்கிக் கொள்ளும் அதிகாரத்தை தலைவருக்கும், பொதுச் செயலாளருக்கும் வழங்கி தீர்மானம் நிறைவேற்றியது. அன்றைய தினம் கனத்த இதயத்துடன் கூட்டரங்கத்தை விட்டு வெளியேறிய கலைஞர், பத்திரிகையாளர்கள் சந்திப்பைத் தவிர்த்தார்.



அந்தச் செய்தி நாடு முழுவதிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்து பதின்மூன்று நாட்களுக்குப் பிறகு, மே 27ம் தேதி தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக்குழு கலைஞர் தலைமையில் கூடி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.

இந்தத் தீர்மானம், கலைஞர் மனதில் தீராத வேதனையாக இருந்த மே 13ம் நாள் வேதனைகளுக்கு, மயிலிறகால் ஒத்தடம் தருவதைப் போல அமைந்தது. அந்த மகிழ்ச்சியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கலைஞர், ராஜ்ய சபா வேட்பாளராக திருச்சி சிவாவும், கவிஞர் கனிமொழியும் நிறுத்தப்படுவதாக அறிவித்தார்.

அந்த அறிவிப்பு தமிழக மீடியாக்களில் மட்டுமல்லாமல், அனைத்திந்திய மீடியாக்களிலும் வெளியிடப்பட்டு விவாதிக்கப்பட்டன.

அன்றிரவு முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை சி.ஐ.டி. காலனியிலுள்ள கனிமொழியின் இல்லத்தில் நாம் அவரைப் பேட்டி கண்ட நிமிடம் வரை, தி.மு.க. பிரமுகர்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரின் வாழ்த்து மழையில் கனிமொழி நனைந்து கொண்டேயிருந்தார். வாழ்த்துக்களுக்கிடையில் நம்மிடமும் பேசினார்.

‘‘கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே நான் அரசியலுக்கு வருவதாக முதன்முதலில் குமுதம் ரிப்போர்ட்டரில்தான் செய்தி வெளியிட்டிருந்தீர்கள். அந்த நினைவலைகளுடனேயே உங்கள் கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறேன்!’’ என்று நமது கேள்விகளை எதிர் கொண்டார் கனிமொழி...

ராஜ்ய சபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளீர்கள். தி.மு.க.விலுள்ள எல்லா தலைவர்களின் வாழ்த்துகளும், வரவேற்பும் உங்களுக்குக் கிடைத்திருக்கிறதா?

‘‘தி.மு.க.விலுள்ள பலரும் எனக்குத் தொடர்ந்து வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.’’

கலைஞர் குடும்பத்திலிருந்து முதன் முறையாக, பெண் வாரிசாக டெல்லிக்குச் சென்று குரல் கொடுக்கப் போகிறீர்கள்...

(கேள்வியை முடிக்கும் முன்பே இடைமறித்து பதிலளித்தார் கனிமொழி)

‘‘இந்தக் கேள்வியை எதற்காகக் கேட்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. பெண் வாரிசுக்கும் குரல் கொடுப்பதற்கும் என்ன சம்பந்தம்? ‘என்னால் குரல் கொடுக்க முடியுமா?’ என்று கேட்டால், பதில் சொல்ல நான் தயாராக இருக்கிறேன். பெண் வாரிசு, ஆண் வாரிசு என்று வித்தியாசப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை.’’

கலைஞர் குடும்பத்திலிருந்து நேரடியாக தமிழ்நாட்டு அரசியலுக்கு வராமல் டெல்லி அரசியலுக்குச் செல்கிறீர்கள். கடந்த அறுபதாண்டுகளுக்கு மேலாக கலைஞரும், தி.மு.க.வும் போராடி வரும் கொள்கைகளுக்காக உங்களால் டெல்லியில் குரல் கொடுக்க முடியுமென்று நம்புகிறீர்களா?

‘‘நிச்சயமாக முடியும். திராவிடக் கொள்கைகள் என் ரத்தத்திலும் ஊறியிருக்கும் ஒரு விஷயம்தான். தி.மு.க.வும், கலைஞரும் வலியுறுத்தும் இட ஒதுக்கீடு, தமிழ் மொழி ஆளுமை உள்ளிட்ட பல விஷயங்கள் நான் இங்கேயே பல்வேறு மேடைகளில், போராட்டங்களில் வலியுறுத்தி வருகிற விஷயங்கள்தான். எனக்கு உடன்பாடில்லாத எந்த விஷயத்தையும் நான் பேசுவதில்லை. திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கும் எனக்கும் எந்த மாறுபாடும் இல்லை. அதனால், இத்தனை வருடங்களாக தமிழ்நாட்டில் குரல் கொடுத்து வரும் நான் டெல்லியிலும் போய்ப் பேசுவேன். இதில், எந்தவிதமான மாறுபாடும் இருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை.’’

‘தேர்தல் மூலம் மக்களை நேரடியாகச் சந்திக்காமல், அரசியல் வாரிசுகள் பின்வாசல் வழியாக அதிகார மையங்களுக்குச் செல்கின்றனர்’ என்ற விமர்சனம் உண்டு. இது உங்களுக்கும் பொருந்தும் அல்லவா?

‘‘எந்த அரசியல் தலைவரின் வாரிசுகள் பின்வாசல் வழியாக வருகிறார்கள்? அண்ணா (மு.க.ஸ்டாலின்) இருக்கிறார். எல்லா முறையும் அவர் தேர்தலைச் சந்தித்துத்தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவர் ஒருமுறைகூட வேறு வாசல் வழியாக வரவில்லை. இப்போது தயாநிதி மாறன் தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுத்தான் பதவிக்கு வந்தார். பல வாரிசுகள் இப்படித்தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால், இதையரு அரசியல் விமர்சனமாக எடுத்துக்கொள்ள முடியாது. அதே நேரத்தில் ராஜ்ய சபாவுக்குப் போவதென்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம் இல்லை. அறிஞர் அண்ணாவாகட்டும், முரசொலிமாறனாகட்டும், வைகோவாகட்டும், மற்ற தலைவர்களாகட்டும் எல்லோரும் ராஜ்ய சபாவிற்குப் போயிருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன்... மக்களைச் சந்தித்து அவர்களால் தேர்ந்தெடுக்கப்படுவதுதான் எனக்கும் உடன்பாடான விஷயமாக இருக்க முடியுமென்று சொல்லியிருக்கிறேன். ஆனால், சில சூழல்களில் நமக்குப் பிடித்ததுதான் முடிவு என்கிற நிலைப்பாட்டையும் நம்மால் எடுக்க முடியாது. அதனால், கடைசியாக நாம் சாதிக்க வேண்டிய விஷயம் என்ன என்பதுதான் முக்கியமே தவிர, எந்த வழி என்பதெல்லாம் இரண்டாம் பட்சமாகக் கருத வேண்டிய கட்டாயமும் சில சமயங்களில் நமக்கு ஏற்பட்டு விடுகிறது.’’

டாக்டர் ராமதாஸின் மகன் டாக்டர் அன்புமணி பின்வாசல் வழியாகத்தான் அரசியலுக்குள் நுழைந்தார் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விமர்சனம் செய்தார். அந்த மாதிரியான விமர்சனம் உங்களுக்கு எதிராகவும் கூறப்படும்போது உங்களுக்கு மன வருத்தம் ஏற்படாதா?

‘‘டாக்டர் அன்புமணிக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற பொறுப்பை நன்றாகச் செய்து கொண்டிருக்கிறார் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லையே. அவர் எப்படிப் போனார், எப்படி வந்தார் என்பதையும் தாண்டி அவருடைய செயல்பாடுகள்தான் முடிவு செய்ய வேண்டும். இந்த மாதிரியான விமர்சனங்களுக்குக் கவலைப்பட வேண்டியதில்லை. அதற்கெல்லாம் நாம் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் பொது வாழ்க்கைக்கே வர முடியாது.’’

தயாநிதி மாறன் மீதான நடவடிக்கைக்குப் பிறகு தி.மு.க.வில் ஏற்பட்ட நெருக்கடியான சூழலில் ராஜ்ய சபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளீர்கள். இந்த அறிவிப்பிற்கு முன்பு இதுகுறித்து கலைஞர் உங்களிடம் பேசினாரா? சம்மதம் பெற்றாரா?

‘‘தி.மு.க.விற்கு இப்போது எந்த நெருக்கடியும் ஏற்பட்டதாக நான் கருதவில்லை. ஒரு வாதத்திற்காக அப்படியரு நெருக்கடி வந்திருப்பதாக வைத்துக்கொண்டாலும் கூட, அதையெல்லாம் தீர்த்து வைக்கிற ஓர் இடத்தில் நான் இருப்பதாக, என்னைப் பற்றி பெரிதாக நினைத்துக் கொள்ளவும் நான் தயாராக இல்லை. கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டால், அதற்குப் பல முக்கியத் தலைவர்களும் இத்தனை வருடம் அரசியலிலிருந்து பல விஷயங்களைச் சந்தித்த தலைவர்களும் உறுப்பினர்களும் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் தாண்டி வந்து நான் எந்தத் தீர்வையும் முன் வைத்துவிடப் போவதில்லை. அதனால், எந்த நெருக்கடியிலும் நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை. என்னை வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்பு அப்பா என்னிடம் பேசினார். அவரின் முடிவை நான் ஏற்றுக் கொண்டேன்.’’

கடந்த பல ஆண்டுகளாக நீங்கள் தீவிர அரசியலுக்கு வர வேண்டுமென்று பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வந்தனர். அப்போதெல்லாம் நீங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால், தயாநிதி மாறன் விலகலுக்குப் பிறகுதான் அந்த இடத்தை நிரப்புவதற்காக மு.க. ஸ்டாலின், மு.க. அழகிரி மற்றும் கலைஞரின் குடும்ப உறவுகளின் முழு ஆதரவோடு உங்களைத் தீவிர அரசியலுக்கு அழைத்து வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறதே?

‘‘இல்லை. இல்லை. அப்படியரு கட்டாயச் சூழல் எதுவும் இல்லை. எங்கள் வீட்டில் இதுவரை எந்த விஷயத்திலும் யாரும் யாரையும் ஒரு நெருக்கடி ஏற்படுத்தித் திணித்தது கிடையாது. நான் எப்படி தயாநிதி மாறனுக்கு மாற்றாக முடியும்? அவருடைய நம்பிக்கைகள், அவர் முன்வைத்து மக்களைச் சந்தித்த விஷயங்கள் எல்லாமே வேறுவேறான விஷயங்கள். நான் நம்பும் விஷயங்களும், நான் முன் வைக்க நினைக்கும் விஷயங்களும் வேறானவை. நான் எப்படி அவருக்கு மாற்றாக முடியும்? அரசியலைப் பொறுத்தவரை யாரும் யாருக்கும் மாற்றாக முடியாது.’’

நீங்கள் பத்திரிகையாளராக சில ஆண்டுகள் ‘இந்து’வில் பணியாற்றியுள்ளீர்கள். குங்குமத்திலும் உங்கள் பங்களிப்பு உண்டு. ஆனால், சமீபகாலத்தில் உங்களின் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கத்தில்தான் உங்களைப் பற்றிய செய்திகள் தினகரனிலோ, சன் டி.வி.யிலோ வெளியிடாமல் இருட்டடிப்புச் செய்யப்பட்டது என்று விவாதம் நடந்தது. அதுபற்றி உங்கள் பதில் என்ன?

‘‘அது பத்திரிகைகளுடைய சுதந்திரம். யாரைப் பற்றி, எந்த விஷயத்தைப் பற்றி, என்ன செய்தியைப் போடவேண்டும் என்பதைப் பற்றி அந்தந்த நிர்வாகம் தீர்மானிக்கிற விஷயம். அதனால், இந்த மாதிரியான செய்திகளைப் போட வேண்டுமென்று அந்த நிர்வாகத்தைக் கட்டாயப்படுத்தும் உரிமை யாருக்கும் கிடையாது. அவர்களுக்கு விருப்பமில்லாத ஒரு செய்தியை அவர்கள் போடாமல் இருக்கலாம். அதுதான் பத்திரிகைச் சுதந்திரம். அதில் முழு நம்பிக்கையும், மரியாதையும் உடையவள் நான். அதனால், என் வளர்ச்சியைப் பிடிக்காமல், தடுப்பதாக நினைத்து, அவர்கள் எனது செய்தியைப் போடவில்லையென்று நான் எடுத்துக் கொள்ளவில்லை.’’

நீங்கள் சுய சிந்தனையாளர், சுதந்திரமான கவிஞர். கருத்துச் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கக் கூடியவர். உங்களுடைய கொள்கைகளுக்கும், தி.மு.க. கொள்கைகளுக்கும் இடையே வேறுபாடுகள் உண்டு. இந்நிலையில் தி.மு.க. ராஜ்யசபா உறுப்பினராக நீங்கள் பணியாற்றும்போது, உங்கள் கருத்துச் சுதந்திரத்திற்குப் பாதிப்பு ஏற்படாதா?

‘‘தி.மு.க.வின் அடிப்படைக் கொள்கைகளுடன் எனக்கு எந்த மாறுபாடும் கிடையாது. அந்தக் கொள்கைகளுக்கு மாறாக நான் என்றைக்கும் என் வாழ்நாளில் பேசியது கிடையாது. ஒரு ஜனநாயக அமைப்பில் சில விஷயங்களில் வேறுபட்ட கருத்துக்கள் இருக்கத்தான் செய்யும். அது ஒரு பெரிய குற்றமாகவோ, இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு வேறுபடுகிற விஷயமாகவோ அது மாற வேண்டிய அவசியமில்லை. பொதுவாகவே, தி.மு.க. என்பது நிச்சயமாக ஒரு சுதந்திரமான அமைப்புத்தான். அதனால், என்னுடைய நம்பிக்கைகள், என்னுடைய கருத்துகளை விட்டுக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுமென்று நான் நினைக்கவில்லை.’’

உங்களை ராஜ்ய சபா உறுப்பினராக்குவதே தி.மு.க.விற்கும் டெல்லிக்கும் இடையே பலமான உறவுப் பாலத்தை அமைக்கும் நோக்கத்தில்தான் என்று கூறப்படுகிறதே?

‘‘அப்படியெல்லாம் இல்லை. தேசியத் தலைவர்களோடு உறவுப் பாலத்தை ஏற்படுத்துவதற்கு தி.மு.க.வில் பல ஆண்டுகளாக டெல்லியில் பணியாற்றி வரும் முக்கியமான தலைவர்கள் பலர் இருக்கிறார்கள். அதனால், அதற்காக என்னை அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் தி.மு.க. இல்லை. தி.மு.க. என்பது மிகமிகச் செழுமையான ஒரு கட்சி. அதனால் டெல்லிக்கும் தனக்கும் ஓர் உறவுப் பாலத்தை அமைக்க மிகப்பெரிய தேடலைத் தேடக்கூடிய நிர்ப்பந்தத்தில் தி.மு.க. இல்லை.’’

உங்களை முன்னிலைப்படுத்துவதற்குக் காரணம் ஆங்கிலம் தெரியும், ஹிந்தி தெரியும் என்று கூறப்படுவதுதானா?

(பலமாகச் சிரிக்கிறார்). ‘‘ஆங்கிலம் நன்றாகவே தெரியும். ஆனால் ஹிந்தியில் நாலு வார்த்தை சேர்ந்த மாதிரி பேசக்கூட தெரியாது.’’

தி.மு.க.வில் குடும்ப அரசியலுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்ற விமர்சனம் ஏற்கெனவே இருந்துவரும் நிலையில், உங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பும் விமர்சனத்திற்கு உரியதுதானே?

‘‘உலகம் முழுவதிலும் அரசியல் தலைவர்களின் வாரிசுகள் அரசியலுக்கு வருவதென்பது சாதாரணமாக நடந்து கொண்டுதான் வருகிறது. இதையெல்லாம் எதிர்க்கும் சிங்கப்பூரில் கூட லீகுவான் யூ மகன்தான் பிரதம மந்திரியாக இருக்கிறார். அவருடைய மகன் என்கிற ஒரே காரணத்தினாலேயே அந்த இடத்திற்கு அவர் வந்து விடவில்லை. மக்கள் தேர்ந்தெடுத்ததால்தான் அந்தப் பதவிக்கு அவரால் வர முடிந்திருக்கிறது.

இதையெல்லாம் தாண்டி பெற்றோர்களுக்கு ஈடுபாடுள்ள துறைகளில் அவர்களின் குழந்தைகளுக்கும் ஆர்வம் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள்தான் அதிகமாக உள்ளன. ஒரு மருத்துவரின் பிள்ளைக்கோ அல்லது மற்ற துறைகளைச் சார்ந்தவர்களின் பிள்ளைகளுக்கோ அரசியலில் ஈடுபட மனத்தடையும் இருக்கிறது. அவர்களெல்லாம் அரசியலுக்கு வருவது கிடையாது. ஆனால், எங்களுக்கு _ அரசியல் சூழலிலேயே வாழ்கிற எங்களுக்கு மனத்தடை இருப்பதில்லை. இதிலிருந்து விலகி பல விஷயங்களுக்குப் போகிறபோதுகூட எங்களுக்கு மனத்தடை ஏற்படுவதில்லை.

மற்ற துறையைச் சேர்ந்த பெற்றோர்களிடம் உங்கள் குழந்தைகளை அரசியலுக்கு அனுப்புவீர்களா என்று கேட்டால், அவர்களுக்கு விருப்பமில்லை என்பதுதான் பதிலாகக் கிடைக்கும். ஏனெனில், அரசியல் என்பது பாதுகாப்பு இல்லாத வாழ்க்கையாகத்தான் அவர்களுக்குப் படுகிறது. எதிர்காலம் என்னாகும் என்று உறுதியாகச் சொல்ல முடியாத வாழ்க்கையாகத்தான் அரசியல் இருக்கிறது. இந்த மாதிரியான நிலையை, பல நாடுகளில் நாம் கண்கூடாகப் பார்க்கலாம். அரசியலுக்கு வர அதிகளவு விருப்பமுள்ளவர்களாக இருப்பதுதான் நாங்கள் அரசியலுக்கு வரக் காரணமே தவிர, எங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கிறது என்ற காரணமோ, வாதமோ வலுவானதல்ல.’’

சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் உங்கள் உழைப்பையும் ஈடுபாட்டையும் பார்த்து தனது ‘கலையுலக வாரிசு’ என்று உங்களை அறிவித்தார் கலைஞர். இப்போது அரசியலுக்கு வந்துள்ளீர்கள். இதில் உங்களின் செயல்பாட்டைப் பார்த்து எதிர்காலத்தில் எனது ‘அரசியல் வாரிசு’ கனிமொழிதான் என்று கலைஞர் பாராட்டுப் பெறும் அளவிற்கு உங்கள் பணி அமையுமா?

‘‘சங்கமம் விழா என்பது என்னுடைய தனிப்பட்ட உழைப்பு என்று சொல்லிவிட முடியாது. அதுவொரு கூட்டு முயற்சி. என்றாலும், எனக்கு அது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. அந்த விழாவில் அப்பா செய்த அறிவிப்பு என்னை நெகிழ வைத்தது. இருந்தபோதிலும் அந்தப் பெருமையின் உச்சியில் நான் இல்லை. முதல்படியில் இருப்பதாகவே உணருகிறேன். ஆனால், அரசியல் வாழ்வில் நிச்சயமாக முழுப் பெருமை சேர்க்கும் விதத்தில், என்னுடைய செயல்பாடுகள் அவருக்கு மகிழ்ச்சி தரும் விதத்தில் இருக்க வேண்டுமென்று விருப்பப்படுகிறேன்.’’

மாறன் சகோதரர்களால் கலைஞருக்கு ஏற்பட்ட மனவருத்தம் உங்களை எந்த வகையில் பாதித்துள்ளது?

‘‘ஒரு குடும்பத்திற்குள் சில மனக்கஷ்டங்கள் வரும் போது, குடும்ப உறுப்பினர்களுக்கு என்னென்ன பாதிப்புகள் மனவருத்தங்கள் ஏற்படுமோ அந்த வகையான பாதிப்புதான் எனக்கும் ஏற்பட்டது.’’

அரசியலுக்கு அப்பாற்பட்டு தொழில் ரீதியாக கலைஞர் தொலைக்காட்சி உருவாக்கப்படுகிறது. அதில் உங்கள் பங்களிப்பு உண்டா?

‘‘ஓரளவிற்கு இருக்கிறது. போகப் போக என்னுடைய பங்களிப்பு அதிகரிக்கக் கூடும்.’’

விரைவில் உங்களுக்கு கேபினட் அந்தஸ்துடன் கூடிய மத்திய அமைச்சர் பதவி தரப்படுமென்றும், மறைந்த முரசொலிமாறன் நிர்வகித்த வர்த்தகத் துறையே உங்களுக்குக் கிடைக்குமென்றும் கூறப்படுகிறதே?

‘‘வளமான கற்பனையில் தோன்றிய நல்ல விஷயமிது. அதற்கு மேல் ஒன்றும் சொல்ல முடியாது. இது குறித்து தலைவரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது கூட, அவர் தெளிவாகப் பதில் சொல்லியிருக்கிறார்.’’

மத்திய அமைச்சர் பதவி கொடுத்தால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?

‘‘படிப்படியாகப் போகலாமே!’’

அழகிரி, ஸ்டாலின் ஆகியோரின் ஆதரவு உங்களுக்கு எந்தளவிற்கு உள்ளது?

‘‘அண்ணன்கள் தங்களுடைய தங்கையின் வளர்ச்சிக்கு எந்தெந்த வகையில் உதவுவார்களோ, அந்த வகையில் என்னுடைய அண்ணன்களும் எனக்கு உதவி வருகிறார்கள்.’’

ராஜ்ய சபா உறுப்பினரானதால் எதிர்காலத்தில் சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி விழுமோ?

‘‘இல்லவே இல்லை. இன்னும் சில ஆண்டுகள் அதை ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவதில் என் பங்களிப்பு நிச்சயம் இருக்கும். டிசம்பர் மாதத்தில் நடைபெறும் கர்நாடக சங்கீத நிகழ்ச்சிகள் போல, தமிழ்ப் பண்பாட்டை அடையாளப்படுத்தும் கிராமிய கலை நிகழ்ச்சிகளும் மக்களின் பங்களிப்போடு தொடர்ந்து நடைபெறும் அளவிற்கு, ஆழமான அடித்தளம் அமைக்கும் வரை என் பணி ஓயாது.’’

நன்றி ரிப்போர்ட்டர்.

5 comments:

Mookku Sundar said...

முதிர்ச்சியான மனவோட்டத்தை பிரதிபலிக்கக்கூடிய பக்குவமான பேட்டி. அண்ணன்கள் எல்லாரும் இன்னமும் விடலைப்பையன்களாகவே சுற்றிக் கொண்டிருக்க இந்தப் பெண்ணுக்கு மட்டும் இத்தனை சாதுரியமா..??

கலைஞர் பெண்ணாக இவர் பிறந்து வழக்கமான வாரிசு அரசியல் குற்றச்சாட்டுக்கு இவரும் ஆளாவது பரிதாபம்தான்.

வெட்டி ஒட்டலுக்கு நன்றி மோகன்

Sridhar Sivaraman said...

//நீங்கள் சுய சிந்தனையாளர், சுதந்திரமான கவிஞர். கருத்துச் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கக் கூடியவர்.//

பேச்சில் தெரிகிறது!!!!!

Anonymous said...

சூப்பர் பேட்டி... மோகன் தாஸ்.. நன்றி

Unknown said...

Kanimozhi seems like pacifist. I do not agree with her statement that "to publish or not to publish a news item is the freedom of the press". To publish things the publisher likes could be their prerogative not their freedom. Freedom of the press means to publish things without fear or favor. Sorry I dont have tamil font.
Meera Danday

Anonymous said...

ஸ்டாலின், அழகிரி இருவரையும் வீட்டிற்கு அனுப்பி விட்டு, (சிந்திக்க தெரிந்த) கனிமொழி, (செயலாற்ற முடிந்த) மாறன் இருவரையும் திமுக முன்னிலைப் படுத்தலாம்.