கோடம்பாக்கத்து பொம்மைக் கல்யாணங்கள்

'சிவாஜி' பரபரப்பையும் ஓரம்கட்டி, கடந்த பல நாட்களாக கோடம்பாக்கத்தின் ஹாட் டாப்பிக்காக இருக்கும் இரண்டு தம்பதிகள் ஸ்ரீகாந்த் - வந்தனா, பிரசாந்த் - கிரகலட்சுமி! இரண்டு தம்பதிகளின் மண வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கத்தையும் செய்தித்தாள்கள் தினம் தினம் கொட்டை எழுத்துக்களில் வெளியிட்டுக் கொண்டு இருக்கின்றன.

ஸ்ரீகாந்த்துக்கும் வந்தனாவுக்கும் திருமணத் தேதி குறித்த நிலையில், வந்தனா குடும்பத்தின் மீது இருக்கும் வங்கி மோசடி வழக்குகளை சி.பி.ஐ. விசாரிப்பதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் குடும்பம் கல்யாணத்தை நிறுத்தியது. அடுத்த அதிரடியாக வந்தனா ஸ்ரீகாந்த் வீட்டுக்குள் புகுந்து, ‘‘நான் இந்த வீட்டு மருமகள். எனக்கும் ஸ்ரீகாந்த்துக்கும் ஏற்கெனவே கல்யாணம் முடிந்துவிட்டது’’ என்று சொல்லி அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டார். ‘‘கல்யாணம் நடந்தது உண்மைதான். ஆனால், குடும்பத்தின் மீதுள்ள சி.பி.ஐ. வழக்குகளை வந்தனா என்னி டம் மறைத்தது ஏன்? சட்டப்படி விவாகரத்து பெறவிருக்கிறேன்’’ என்று ஸ்ரீகாந்த் சொல்லியிருக்கிறார். ஏன் இத்தனை அவசரமாக, ரகசியமாக வந்தனாவைத் திருமணம் செய்துகொண்டார், மாதக்கணக்கில் அந்த உறவை ஏன் மறைத்து வைத்தார் என்பதெல்லாம் இன்றுவரை விடை கிடைக்காத மர்மங்கள்!

இன்னொரு பக்கம் நடிகர் பிரசாந்த் அவர் மனைவி மீது குடும்பநல கோர்ட்டில் தொடுத்த வழக்கு திடீரென பல திருப்பங்களைச் சந்தித்தது. தொடர்ந்து பணம் கேட்டுத் தன்னை பிரசாந்த் குடும்பத்தினர் துன்புறுத்து வதாகவும் கிரகலட்சுமி சொல்ல, கிரகலட்சுமியோடு தான் சேர்ந்து வாழவே விரும்புவதாகச் சொல்லிக் கொண்டு இருந்த பிரசாந்த், அதிரடியாக புது திருப்பத்துக்கு அடி போட்டார்!

Ô‘கிரகலட்சுமி ஏற்கெனவே திருமணமான விவரங்களை மறைத்து என்னைத் திருமணம் செய்துகொண்டார்’Õ என்ற அவர், பதிவுத் திருமண சான்றிதழை ஆதாரமாகக் காட்ட, அதுவரை கிரகலட்சுமி பக்கம் வீசிய அனுதாப அலை திசை திரும்பியது. அவருடைய முதல் கணவர் என்று சொல்லப்படும் நாராயணன் வேணுபிரசாத் காவல் நிலையத்தில் ஆஜராகி பழங்கதைகளை எடுத்து வைக்க, விவகாரம் முன்னிலும் பரபரவென கொழுந்துவிட்டது.

ஊருக்கே உபதேசம் செய்யும் நடிகர்கள், பெண் பார்க்கும் விஷயத்தில் இவ்வளவு பெரிய கோட்டை விடுவது ஏன்? பல சினிமா தம்பதிகளின் திருமண பந்தம் விவாகரத்தில் முடியும் சோகம் தொடர்வது ஏன்? இந்தக் கேள்விகளுக்கு விடைதேடி கோடம்பாக்கத்தை வலம் வந்தோம்.

தமிழ் சினிமாக்களில் சாதனை படைத்து இப்போது பார்வையாளராக கோலிவுட்டை கவனித்துக் கொண்டு இருக்கும் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் நம்மிடம் பேசும்போது, ‘‘ஏற்கெனவே விவாகரத்தில் முடிந்த பல நட்சத்திரத் திருமணங்களை ஆராய்ந்தால், பணத்துக்காகவும், தன்னைச் சுற்றியிருக்கும் தவறான மனிதர்களை நம்பியும் தப்பான துணையைப் பலர் தேடிக்கொண்டது தெரியும். வெளியில் வரும் மோதல்கள் ஒன்றிரண்டுதான். உள்ளுக்குள் இன்னும் பல சினிமா குடும்பங்களில் சிக்கல் உச்சகட்டத்தில் இருக்கிறது’’ என்றவர், சினிமாவில் தமிழுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஓர் இயக்குநரின் பல நாள் வேதனைக் கதையையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்...

"நடிகராகவும் தன்னை வெளிப்படுத்தி ஆச்சர்யப்பட வைத்தவர் அந்த இயக்குநர். அவர் கலைத்துறைப் பெண்ணைத்தான் காதலித்து கல்யாணம் செய்துகொண்டார். எந்த உரசலோ, ஊடலோ இல்லாதவர்கள் என்பதுதான் அந்தத் தம்பதி பற்றி வெளியில் பரவியிருக்கும் செய்தி. ஆனால், தினம் தினம் அந்த இயக்குநர் தன் காதல் மனைவியிடம் படும் அவஸ்தைகள் எங்களைப் போன்றவர் களையே நோகடிக்கிறது. மதுபானம் உள்ளே போய்விட்டால் போதும், பக்கத்தில் இருக்கும் நபர்களை அடித்து துவம்சம் செய்வது, காது கூசும் கெட்ட வார்த்தைகளை உரக்கச் சொல்வது என்று ரகளையின் உச்சத்துக்கே போய்விடுவார் அந்தப் பெண்மணி. வீட்டில் தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை இருந்தாலும், அவரது நடவடிக்கையில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. வீட்டிலேயே நட்சத்திர ஓட்டல் பார் அளவுக்கு சகல அயிட்டங்களும் உள்ளன. இரவு முழுவதும் வீட்டை ரண களப்படுத்திவிட்டுப் பின்னிர வில்தான் தூங்கப் போவார் அந்த நடிகை. இதனாலேயே, பெரும்பாலான நாட்கள் வெளியில் எங்காவது தங்கிப் பொழுதைக் கழித்துவிட்டு, அதிகாலையில்தான் வீட்டுக்குப் போகிறார் அந்த இயக்குநர். இமேஜ் என்ற ஒற்றைக் கயிறுதான் இருவருக்குமான பந்தத்தை இன்று வரை நீட்டித்திருக்கிறது!’’ என்றார் அவர்.

தமிழ் சினிமாவில் ‘சி’ சென்டர் நாயகனாகக் கொடி நாட்டி, முதன் முதலாகக் கோடிகளைச் சம்பளமாகப் பெற்ற அந்த நடிகரின் சோகக் கதையைப் புட்டுப் புட்டு வைத்தார், கிராமத்து அழகைத் தனது யதார்த்த கேமரா மூலம் கண்முன் நிறுத்திப் பெயர் பெற்ற அந்த ஒளிப்பதிவாளர்.

‘‘எனக்கு மிகவும் நெருங்கிய நண்பராக இருந்தார் அந்த நாயகன். சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தவரை கோடம்பாக்கம் ஹீரோவாகக் கொண்டாடியது. ஹீரோவாக ஒரு படம் நடித்திருந்த நிலையில்தான் அந்த நடிகையின் அம்மா, இவரை வளைத்துப் போட்டார். உண்மையில் வடபழனி ஏரியாவில் ஏற்கெனவே பிரபலம் ஆகிவிட்ட குடும்பம் அது. தன்னைச் சார்ந்தவர்கள் கஷ்டப்படக் கூடாது என்று நிஜமாகவே நினைப்பவர் அந்த ஹீரோ. அதைப் பயன்படுத்திக்கொண்ட நடிகையின் குடும்பம் அந்த ஹீரோவின் சொத்துக்களைப் பிடுங்கிக் கொண்டு, கிட்டத்தட்ட அவரைக் கைகழுவி விட்டது.

இப்போது அந்த நடிகை தனது குழந்தைகளுடன் வசதியாகவே இருக்க, பாவம்... ஹீரோதான் வாய்ப்புகள் எதுவும் இன்றி, வீட்டில் முடங்கிக் கிடக்கிறார். வாழ்க்கையில் யதார்த்தத்தைப் புரிந்துகொள் ளாத குற்றத்துக்காகத் திருமணத்தையும் தொலைத்து, எதிர்காலத்தையும் இழந்து தவிக் கிறார் அந்த ஹீரோ’’ என்று வருத்தப்பட்டார் அந்த ஒளிப்பதிவாளர்.

‘‘போன தலைமுறை நடிகர்களை விடுங்கள். துறுதுறுப்பான ஒரு நடிகரின் மணவாழ்க்கையிலும் தினம் தினம் புயல் வீசிக்கொண்டுதான் இருக்கிறது. எந்நேரத்திலும் அந்தப் புயலில் திருமண வாழ்க்கை சிதறக் கூடும்’’ என்று சொல்கிறது கோடம் பாக்கத்தில் ஒரு கோஷ்டி. அவர்களை அணுகிப் பேச்சுக் கொடுத்தால், பகீர் தகவல்களை அள்ளிக் கொட்டு கிறார்கள்.

‘‘அப்பா அம்மா பார்த்து வைத்த பெண்ணைத்தான் அந்த நடிகரும் கல்யாணம் கட்டிக்கிட்டார். பார்க்க, சாந்த சொரூபியா இருக்கிற அந்தப் பொண்ணுக்கு ஏற்கெனவே வேறு ஒருவருடன் பழக்கம் இருந்திருக்கிறது. இது தெரியவந்ததும், நடிகர் படு அப்செட்! அன்றிலிருந்து அடிக்கடி அந்த வீட்டுக்குள் மோதல் சத்தங்கள் எழுவதும், மனைவி கோபித்துக் கொண்டு வெளியே போவதும், பின் அவரைச் சமாதானப்படுத்தி அழைத்து வருவதும் தொடர்கிறது. அவ்வப்போது தன் மனவலிக்கு மருந்து தேட ஆரம்பித்துவிட்டார். அந்த நடிகர். அவர் அப்படியரு பிடியில் இருப்பது வெளியே யாருக்கும் துளிகூடத் தெரியாது. தொழில் விஷயத்தில் அவர் அத்தனை பர்ஃபெக்ட்!’’ என்கி றார்கள்.

"புகழ் இழந்து வீட்டுக்குள்ளேயே முடங்க வேண்டியநிலை வருமபோது சில சினிமா பிரபலங்கள், தங்கள் ஆற்றாமையை வாழ்க்கைத் துணையிடம் காட்டுவதும் நடக்கிறது. கணவர் அல்லது மனைவியின் மன வெறுமையைப் புரிந்துகொண்டு, அதைத் திசை திருப்பி, வேறு லாபகரமான வியாபாரங்களில் அவரை ஈடுபடச் செய்தும், இல்வாழ்க்கையை கலகலப்பாக்கியும் குடும்பத்தை வெற்றிகரமாக நடத்திச் செல்பவர்களும் ஏராளமாக இருக்கத்தான் செய்கிறார் கள். அமைதியாக நல்ல வாழ்க்கை நடத்தும் உதாரணங்கள் வெளியே அதிகம் தெரிவதில்லை. சண்டையும் சச்சரவுகளும்தானே செய்திகள் ஆகின்றன?!" என்று வருந்துகிறார் பல நடிகர்களை வெற்றிகரமாக இயக்கிய இயக்குநர் ஒருவர்.

மொத்தத்தில்... ஒளியை உமிழும் பிரகாசமான விளக்குகளின் பின்னால் அடர்த்தியான இருள் இருப்பது போல, பல நட்சத்திரங்களின் வாழ்க்கையிலும் சோக இருள் கவிந்தே இருக்கிறது!

நன்றி - விகடன்

0 comments: