பிரசாந்த்தை மிரட்டும் வி.ஐ.பி.க்கள்!

நடிகர் பிரசாந்த்தும் கிரஹலட்சுமியும் ஒருவர் மாறி ஒருவர் கோர்ட் படிக்கட்டுகளில் ஏறி இறங்க... அதற்கேற்ப அவர்களுக்கு இடையி லான பிரச்னைகளும் புதுப்புது திசைகளில் பயணித்துக் கொண்டிருக்கின்றன.

‘கிரஹலட்சுமி நல்ல குடும்பத்துப் பெண், தமிழ்ப் பண்பாட்டை மதிக்கக் கூடியவர் என்றெல்லாம் நினைத்திருந்தேன். அவரோ என்னை மணப்பதற்கு முன்பு 1998 - ம் வருடமே வேணு பிரசாத் என்பவரைப் பதிவுத் திருமணம் செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி, என்னைப் பற்றி தவறான விஷயங்களைச் சொல்லி என் வாழ்வையே நாசப்படுத்திவிட்டார். இனி கிரஹலட்சுமியுடன் இணைந்து வாழ்வதை கனவிலும் நினைக்கமுடியாது’ என தீர்மானமாக சொல்லிக் கொண்டிருக்கிறார் நடிகர் பிரசாந்த்.

கிரஹலட்சுமியின் தரப்போ, ‘கிரஹலட்சுமியை கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக பிரசாந்த் சித்ரவதை செய்திருக்கிறார். அதுதான் உண்மை! ஆனால், இந்த உண்மையை திசைதிருப்ப வேண்டும் என்றுதான் பதிவுத் திருமணம் கதையை அவிழ்த்து விட்டிருக் கிறார். அதோடு ‘கிரஹலட்சுமி குடிகாரர்... பண்பாடு தெரியாதவர்’ என்றெல்லாம் சொல்லி வருகிறார். சட்டப் படி அனைத்தையும் நாங்கள் எதிர்கொள்வோம்...’ என்று கிளிப்பிள்ளையைப் போல் சொல்லிக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் கிரஹலட்சுமியின் முதல் கணவர் நாரயணன் வேணு பிரசாத், கடந்த 19 - ம் தேதி சென்னை தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரானார். அங்கு நடந்த போலீஸ் விசாரணையில்,

‘தனது தங்கையின் நண்பர்கள் மூலமாகத்தான் முதன்முதலில் கிரஹலட்சுமி எனக்கு அறிமுகமானார். அதுவே நாளடைவில் காதலாக மாறியது. அதைத் தொடர்ந்து, கடந்த 1998&ம் ஆண்டு பெற்றோர்களுக்குத் தெரியாமல் சென்னையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். காலம் எல்லாவற்றையும் குணப்படுத்தி விடும் என்று நம்பினோம். அதனால், திருமணம் முடித்தும் நாங்கள் தாம்பத்ய வாழ்க்கை நடத்தவில்லை. அதன்பிறகு கிரஹலட்சுமியின் பெற்றோர் சம்மதத்துடன் ஊரறிய திருமணம் செய்துகொள்ள முயற்சி செய்தேன். அது நடக்கவில்லை.

ஆகவே, நானும் கிரஹலட்சுமியும் பிரிவது என தீர்மானித்தோம். அதன்பிறகு, என்னுடன் பணிபுரிந்த ஒரு பெண்ணை நான் திருமணம் செய்துகொண்டேன். ஆனால், ஏற்கெனவே செய்த பதிவுத் திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் என்கிற சட்டம் எனக்குத் தெரியாமல் போய்விட்டது. அதனால்தான் இன்றைக்கு இத்தனை சிக்கல் ஏற்பட்டு விட்டது. கிரஹலட்சுமியை நான் ஒருபோதும் ஆசைக்குக்கூட தொட்டதில்லை. இப்போது அவருக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து வேதனைப்படுகிறேன்...’ என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

இந்த முதல் திருமணம் குறித்து முழுமையாக விசாரித்த போலீஸார், திருமணம் நடந்தது உண்மை என்று கண்டறிந்திருக்கிறார்கள். அதோடு கிரஹலட்சுமி - நாரயணன் வேணுபிரசாத் திருமணம் தொடர்பான அத்தனை ஆவணங்களையும் பதிவுத் துறை அலுவலத்தில் இருந்து பெற்றுத் திரும்பியிருக்கிறார்கள்.

அந்த ஆவணங்களில் கிரஹலட்சுமி தன்னுடைய அடையாளத்துக்காக வழங்கிய பாஸ்போர்ட் நகல், பள்ளி சான்றிதழ்களும் அடக்கம்.

இத்தனைக்குப் பிறகும் கிரஹலட்சுமி, ‘நான் ஒருபோதும் நாரயணன் வேணு பிரசாத்தைப் பதிவுத் திருமணம் செய்து கொள்ளவில்லை. பிரசாந்த் வெளியிட்டிருக்கும் பதிவுத் திருமண சான்றிதழ் உட்பட எல்லாமே போலியானவை’ என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பதுதான், அவர் மீது போலீஸுக்கு கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கிடையில், தான் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றிருக்கிறார் கிரஹலட்சுமி. அவரின் வழக்கறிஞர் சுதா ராமலிங்கத்திடம் பேசினோம். ‘‘விவகாரம் நீதிமன்றத்திலும், போலீஸ் விசாரணையிலும் இருப்பதால் இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கில்லை’’ என்றார் ஒற்றை வரியில்.

பிரசாந்த், கிரஹலட்சுமி இருவருடைய புகார்களை விசாரித்துக் கொண்டிருக்கும் தி.நகர் காவல்துறை துணை ஆணையர் பாஸ்கரனிடம் பேசினோம்.

‘‘பிரசாந்த், 'என் மனைவிக்கு ஏற்கெனவே நாராயணன் வேணு பிரசாத்துடன் திருமணமாகிவிட்டது, என்னை ஏமாற்றிவிட்டார்கள்' என்றும், ‘எனக்குத் திருமணமானதாக பிரசாந்த் கொடுத்திருக்கும் ஆதாரங்கள் போலியானவை’ என கிரஹலட்சுமியும் புகார் கொடுத்திருக்கிறார்கள். பதிவுத் துறை அலுவலகத்திலிருந்து பெற்ற ஆவணங்களில் கிரஹலட்சுமி கையெழுத்திட்டிருப்பது ஊர்ஜிதமாகி இருக்கிறது. அந்த ஆவணங்களைத் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். கிரஹலட்சுமியிடமும் விசாரிக்கப் போகிறோம். அதன்பிறகே இந்த விவகாரத்தில் நடவடிக்கை என்ன என்பது முடிவாகும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு கோர்ட் மூலம் தண்டனை வாங்கித் தருவோம்’’ என்றார்.

இப்படி விசாரணை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, கிரஹலட்சுமியை நன்கு அறிந்தவர்கள் வட்டாரத்தில் இருந்து வேறுசில செய்திகளும் இப்போது உலாவரத் தொடங்கியிருக்கின்றன.

‘‘கிரஹலட்சுமி ஆடம்பர மோகம் கொண்டவர். சென்னையில் பல கிளப்புகளில் அவரது குடும்பத்தினர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அங்கெல்லாம் அடிக்கடி சென்று அவர்கள் விருப்பப்படி பொழுதைப் போக்குவார்கள். கிண்டி ரேஸ் கிளப்புக்கும் அவர்கள் குடும்பம் வாடிக்கையாக செல்லும். கிரஹலட்சுமியின் இன்றைய நிலைமைக்கு முக்கியக் காரணம் அவரது தந்தைதான்.

கிரஹலட்சுமியின் காதல் விவகாரம் அவர்களது குடும்பத்துக்கு நன்றாகவே தெரியும். அப்போதே நாராயணன் வேணுபிரசாத்& கிரஹலட்சுமி திருமணத்தை அவர்கள் அங்கீகரித்திருந்தால், இந்த விவகாரங்கள் எதுவுமே வந்திருக்காது’’ என்கிறது அந்த நட்பு வட்டாரம்.

இதற்கிடையில், கிரஹலட்சுமி நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருந்த சில புகைப்படங்கள் எப்படியோ வெளியே வந்திருக்கிறது. தற்போது அதனையும் கைப்பற்றியிருக்கும் போலீ ஸார், அந்தப் படங்களையும் இந்த வழக்குக்கு ஆதாரமாகப் பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறார்களாம். அதே நேரம் அந்த படங்களை பத்திரிகை அலுவலகங்களுக்கும் மின் அஞ்ச லில் அனுப்பியிருக்கிறார்கள் சிலர். அப்படியரு படம் நமக்கும் வந்து சேர்ந்தது.

இந்த விவகாரம் குறித்தெல்லாம் பிரசாந்த்தின் வழக்கறிஞர் ஆனந்தனிடம் பேசியபோது, ‘‘கிரஹலட்சுமிக்கு ஏற்கெனவே திருமணம் நடந்திருக்கிறது என்ற உண்மையை ஆதாரத்துடன் வெளியே கொண்டுவந்து விட்டோம். இந்தத் திருமணத்தை அப்படியே மறைத்துவிட்டு, நடிகர் பிரசாந்த்திடம் கோடிக்கணக்கில் பணத்தைப் பறிக்கவே, கிரஹலட்சுமி குடும்பத்தினர் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள். இந்த முயற்சிகளுக்குப் பின்னால் அரசியல் ரீதியாகவும் பணரீதியாகவும் செல்வாக்குப் படைத்த பலர் இருக்கின்றனர். அவர்கள், ‘கிரஹலட்சுமி குடும்பத்தாரிடம் தேவையில்லாமல் மோதினால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்’ என்று பிரசாந்த்தை அச்சுறுத்துகின்றனர். அவர்கள் எல்லா மட்டங்களிலும் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலை தொடரு மானால் அவர்கள் யார் என்பதை வெளியிட்டு விடுவோம்’’ என்றார் எச்சரிக்கும் குரலில்.

நடிகர் பிரசாந்த்தை மையமாக வைத்து இந்த விவகாரம் தொடருவதால், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை ஆவலோடு உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது கோடம்பாக்க வட்டாரம்.

நன்றி - ஜூனியர் விகடன்

0 comments: