கணக்கை நேர் செய்யும் கலாநிதி மாறன்

தங்கள் இயல்புக்கு மாறான ஒரு விஷயத்தைச் செய்து பார்க்கத் தயாராகிவிட்டார்கள் மாறன் சகோதரர்கள். ஆம்... அரசியல் களத்திலும், தொழிலிலும் உயர்ந்தே பழக்கப்பட்டவர்கள், கலைஞருடனான சமாதானத்திற்காக எதையும் செய்யத் தயார் என்று கீழே இறங்கி வந்திருக்கிறார்கள்!

இதில் முதல் விஷயமாக மதுரை தினகரன் அலுவலகம் மீதான தாக்குதல் பற்றி விசாரிக்கும் சி.பி.ஐ.க்கு தங்களின் ஒத்துழைப்பைத் தருவதை தவிர்க்கும் சன் டி.வி. நிர்வாகத்தின் போக்கைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

மே_9 அன்று மதுரையில் நடந்த வன்முறையில் மூன்று பேர் பலியான தகவல் கேட்டு உடனடியாக மதுரைக்குப் போன கலாநிதிமாறன், ‘இந்த வன்முறைக்கு எதிராகப் போராடும் உங்களுடன் நானும் துணை இருப்பேன்’ என்று தனது ஊழியர்களுக்கு உறுதியளித்தார். அதோடு நிற்காமல், தமிழக போலீஸார் இந்த வழக்கை விசாரித்தால் நியாயம் கிடைக்காது. ‘உண்மைக்குற்றவாளிகள்’ தப்பிவிடுவார்கள் என்று சொல்லி, சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்ற வாதத்தையும் முன்வைத்தார்கள் சன் டி.வி. நிர்வாகத்தினர்.

இவர்களின் வாதத்திற்கு வலு சேர்க்கும் விதமாக சில பத்திரிகையாளர்கள் சங்கங்களும் சி.பி.ஐ. விசாரணை கேட்டுப் போராடின. கடைசியில் அதற்கு ஒப்புக்கொண்டு, உத்தரவிட்டார் கலைஞர். அதுநாள் வரை அழகிரியின் பெயரை வெளிப்படையாகவே குறிப்பிட்டு வன்முறையாளர், ரவுடி என்கிற அர்த்தத்தில் அழகிரியின் மீதான விமர்சனத்தைத் தொடர்ந்தன சன் டி.வி.யும், தினகரன் நாளிதழும்.

ஆனால், சி.பி.ஐ. களத்தில் இறங்கிய பிறகு எல்லாம் மாறிவிட்டன. சி.பி.ஐ. தனது விசாரணையைத் தொடங்கி இரண்டு வாரங்களைத் தாண்டிவிட்ட நிலையிலும் அந்த விசாரணையை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை சன் டி.வி.நிர்வாகம். ‘இந்த விசாரணையில் என்ன நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்... எந்தளவுக்கு அந்த விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச அறிவுரையைக் கூட மதுரையிலுள்ள தினகரன் ஊழியர்களுக்குச் சொல்லவில்லை சன் நிர்வாகம்’ என்கிறார்கள் தகவலறிந்தவர்கள்.

மதுரையிலுள்ள ஊழியர்களுக்கு வேண்டுமானால் இது அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், சென்னையில் நடப்பவற்றை கவனிப்பவர்களுக்கு இதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. அதற்கான காரணமும் புதிதல்ல.

எத்தனையோ விமர்சனங்களைத் தாண்டி தயாநிதி மாறனை அரவணைத்து வந்த கலைஞர், இன்று ஒரே நாளில் கொதித்தெழுந்து, கோபம் கொண்டு, தயாநிதியின் முகத்தைக்கூடப் பார்க்க மறுக்கக் காரணம், தினகரன் வெளியிட்ட சர்வேயை விட, அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுக்குக் காரணம் அழகிரிதான் என்று தொடர்ந்து சொல்லியதுதான் என்கிறார்கள் கலைஞருக்கு நெருக்கமானவர்கள்.

‘‘அழகிரியின் மீது எடுத்த எடுப்பில் இவர்களே இப்படியரு பழியை இவ்வளவு தீர்க்கமாகச் சுமத்தியதை கலைஞரால் ஏற்கவே முடியவில்லை. ‘மற்றவர்கள் சொல்லலாம்... இவர்கள் சொல்லலாமா?’ என்றே தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாராம் கலைஞர். அந்த வேதனையின் வலிகள் இன்னும் இருப்பதால்தான், சமாதானம் என்ற வார்த்தையோடு யார் வந்தாலும் தன் இரண்டு காதுகளையும் பொத்திக் கொள்கிறார் கலைஞர்’’ என்கிறார்கள் அவர்கள்.

இதை பல கசப்பான அனுபவங்களுக்குப் பின் உணர்ந்துகொண்ட மாறன் சகோதரர்கள், அதன்பிறகே அழகிரிக்கு எதிரான தங்களின் வேகத்தைக் குறைத்துக் கொண்டார்கள். இப்போதோ... அழகிரிக்கு எதிராக ஒரு சிறு விமர்சனத்தைக் கூட தினகரனிலோ சன் டி.வி.யிலோ பார்க்க முடிவதில்லை. மாறாக... மதுரை சம்பவத்திற்குப் பின் சில நாட்கள் அழகிரியின் படமும் பெயரும் வருவதைத் தவிர்த்து வந்த தினகரனும் சன் டி.வி.யும், இன்று எங்கெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ அங்கெல்லாம் அழகிரியின் செய்திகளை முக்கியத்துவம் தந்து வெளியிடுகின்றன. சமீபத்தில் மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ் வேட்பாளருடன் அழகிரியும் பிரதானமாக நிற்கும் படம் தினகரனின் அனைத்துப் பதிப்புகளிலும் முதல் பக்கத்தில் வெளியானதே இதற்கு சாட்சி! சன் டி.வி.யிலும் அழகிரி கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியின் கவரேஜை குறைவில்லாமல் காட்டினார்கள்.

இந்த மாற்றத்திற்குப் பிறகுதான் சன் நிர்வாகத்தினர் அழகிரியுடனான சமாதானத்திற்குத் தயாராகிவிட்டதை உறுதிப்படுத்திக்கொண்டார்கள் தினகரன் ஊழியர்கள். மூன்று பேரின் உயிரைப் பறிகொடுத்த அதிர்ச்சியே இன்னும் மீளாத நிலையில், இந்தச் சமாதான முயற்சிகள் நடப்பதை அறிந்து அவர்களுக்கு இன்னும் அதிர்ச்சி.

இந்த நிலையில்தான் இவர்களுக்கு ஆதரவாகக் களம் இறங்கியிருக்கிறது_மனித உரிமைப் பாதுகாவலர்களின் கண்காணிப்பு மற்றும் போராட்டக்குழு. கடந்த 9_ம் தேதியன்று சென்னையில் ஓர் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்கள் இந்த அமைப்பினர். ஹென்றி டிஃபேன், ராசன், பரந்தாமன் உள்ளிட்ட மனித உரிமை ஆர்வலர்கள் இதில் கலந்து கொண்டார்கள். ‘‘மதுரையில் நடைபெற்ற வன்முறை பற்றி விசாரித்து வரும் சி.பி.ஐ. மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. காரணம், இச்சம்பவத்திற்கு மூலகாரணம் அழகிரிதான் என்று பாதிக்கப்பட்ட தரப்பு மட்டுமின்றி அனைத்துப் பத்திரிகைகளும் எடுத்துச் சொல்லியும், அவரை இதுநாள்வரை விசாரிக்கக்கூட இல்லை.

தங்கள் கண்முன்னால் இவ்வளவு பெரிய வன்முறை நடந்தும் அதைக் கைகட்டி வேடிக்கை பார்த்த காவல்துறை அதிகாரிகள் யாரையும் இதுவரை நேரில் அழைத்து விசாரிக்கவில்லை. இனியும் இவர்களை நம்பிப் பயனில்லை.

ஆரம்பத்தில் புகார் தந்த தினகரன் நிர்வாகமே இப்போது போதிய ஒத்துழைப்பை வழங்கவில்லை என்பது பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. மதுரையில் பாதுகாப்பான, சகஜமான சூழ்நிலை நிலவ வேண்டுமானால் இந்த விசாரணை நியாயமாக நடைபெற வேண்டும். எனவே இதுவரை நடந்த விசாரணையின் போக்கை தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வோம். அழகிரி உள்ளிட்டவர்களைக் கைது செய்யாதவரை இந்த விசாரணையை நம்பமுடியாது. இதை வலியுறுத்தி, வரும் 23_ம் தேதியன்று சென்னையில் பொதுக்கூட்டம் நடத்தப்போகிறோம்’’ என்று இக்கூட்ட முடிவில் அறிவித்தார்கள் இந்த போராட்டக் குழுவினர்.

இவர்களின் இந்தத் திடீர் தலையீடு பற்றியோ, தினகரன் ஊழியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் பற்றியோ கவலைப்படாமல் தங்களின் சமாதான முயற்சிகளின் அடுத்த கட்டத்தில் குதித்திருக்கிறது சன் டி.வி. நிர்வாகம். அது பணம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்று சொல்லும் அறிவாலய வட்டாரத்தின் சில பின்னணித் தகவல்களோடு இந்த விவரத்தையும் நமக்குச் சொன்னார்கள்.

2005_ல் தன்னிடம் இருந்த சன் டி.வி.யின் 20 சதவிகிதப் பங்குகளை மாறன் குடும்பத்திற்கே விற்றார் கலைஞரின் மனைவி தயாளு அம்மாள். அதில் சில மனஸ்தாபங்கள் எழுந்தன என்று ஏற்கெனவே நாம் சொல்லியிருக்கிறோம். இப்போது அது பற்றிய கூடுதல் விவரங்கள் கிடைத்துள்ளன.

இந்தப் பங்குப் பரிவர்த்தனை தொடர்பான பேச்சு நடக்கும்போது, கலைஞர் குடும்பத்தில் கலைஞர், தயாளுஅம்மாள், அழகிரி ஸ்டாலின் ஆகியோரும், மாறன் குடும்பத்தின் சார்பில் கலாநிதி, தயாநிதி ஆகியோரும் இருந்திருக்கிறார்கள். முரசொலி செல்வம் உள்ளிட்ட மேலும் சில முக்கியஸ்தர்களும் அப்போது இருந்திருக்கிறார்கள்.

‘இன்றைய மார்க்கெட் நிலவரத்தை வைத்துப் பார்த்தால் 20 சதவிகிதப் பங்குகளுக்கு 95 கோடி ரூபாய் தரலாம்’ என்று சொல்லியிருக்கிறார் கலாநிதி. அவ்வளவு சுத்தமாக கணக்குப் பார்க்காமல் ‘ரவுண்டாக’ நூறுகோடியாகத் தாருங்கள் என்று சொல்லியிருக்கிறார் கலைஞர். ‘அதெப்படி...? வியாபாரத்தை வியாபாரமாகத்தான் பேசவேண்டும். மார்க்கெட் நிலவரப்படி 95 கோடிதான் தர வேண்டியுள்ளது’ என்று தயாநிதி குறுக்கிட்டுச் சொல்ல... ஆவேசமான அழகிரி, ‘யாரிடம் பேசுகிறாய்? உன்னை மந்திரியாக்கியது யார்? சன் டி.வி.யை இவ்வளவு பெரிய நிறுவனமாக மாற்ற பின்புலமாக இருந்தது யார்? அவரைப் பார்த்தா வியாபாரம் பேசுகிறாய்?’ என்றெல்லாம் கேட்க, வார்த்தைகள் தடித்து, கைகளும் நீண்டதாகச் சொல்கிறார்கள்.

அப்போதிருந்தே அழகிரிக்கு மாறன் சகோதரர்களுடன் ஒருவித மனக்கசப்பு இருந்து கொண்டே இருந்தது. சமீபத்திய சர்ச்சைகளின் போதும் இந்தப் பங்குப் பரிவர்த்தனை விஷயத்தைக் கிளறிய அழகிரி, ‘நாம் ரொம்பவே ஏமாற்றப்பட்டிருக்கிறோம்’, என்பதை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். ‘நமக்கு குறைந்த விலை நிர்ணயம் செய்து பங்குகளை வாங்கிக்கொண்டு, அடுத்த ஒரே ஆண்டில் பங்குச் சந்தைக்குள் நுழைந்து பல மடங்கு விலை நிர்ணயம் செய்து பங்குகளை வெளியிட்டது சன் நிர்வாகம்’ என்பது அழகிரியின் வாதம்.

இதுதான் சன் நிர்வாகத்தின் சமாதானத் திட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட இரண்டாவது விஷயம். ‘நான் தயாநிதியைச் சந்திக்க வேண்டுமானால் முதலில் அழகிரி சமாதானமடைந்து சம்மதிக்க வேண்டும்’ என்று கலைஞர் போட்ட கண்டிஷன் நினைவிலேயே இருக்க, இந்தப் பண விவகாரத்தால் எழுந்த மனஸ்தாபங்களைச் சரி செய்ய முன்வந்திருக்கிறதாம் சன் டி.வி. நிர்வாகம். இதற்காக சில நூறு கோடி ரூபாய்கள் வரை (அந்த 20 சதவிகித பங்குகளுக்காக) கூடுதலாகத் தரவும் சம்மதித்து விட்டதாகத் தகவல். இதற்கான முடிவு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

தவிர, முன்பு பங்குப் பரிவர்த்தனை நடந்தபோதே, பிற்காலத்தில் தி.மு.க.வுக்கும் சன் டி.வி.க்கும் உறவு பாதிக்கப்பட்டாலோ.. சுமுகமாகப் பிரிந்து கொண்டாலோ, கட்சிக்கென தனியாக ஒரு சேனலை தொடங்கித் தரவேண்டிய பொறுப்பும் எங்களுடையது என்று உறுதி தந்தார்களாம் மாறன் சகோதரர்கள். அதை இப்போது இவர்களே நினைவுபடுத்தி, புதிய சேனலுக்காக தங்களின் பங்களிப்பையும் செய்து தந்து நிலைமையைச் சீராக்க முயற்சிக்கிறார்களாம்!

‘‘இந்த வகையில் சமாதான முயற்சிகள் தொடர்வதால்தான் தனது பிறந்தநாளான ஜூன்_3 அன்று கலைஞர் டி.வி. பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கலைஞரே சொல்லியும் அதற்கான அறிவிப்பு அன்றைய தினம் வெளியாகவில்லை. சன் டி.வி. அலுவலகத்தை அறிவாலயத்திலிருந்து மாற்றும்படியும் எந்த நிர்ப்பந்தத்தையும் ஏற்படுத்தவில்லை’’ என்கிறார்கள் சன் டி.வி. தரப்பில்.

ஆனால், கலைஞர் குடும்பத்திற்கு நெருக்கமானவர்களிடமிருந்து வேறு மாதிரி குரல் கேட்கிறது. ‘‘அழகிரியை சமாதானப்படுத்தும் வகையில் அவரது படத்தையும், அவர் தொடர்பான செய்தியையும் மீண்டும் போட ஆரம்பித்திருப்பது, பங்குப் பரிவர்த்தனையில் கூடுதல் பணம் தர முன்வந்திருப்பது.. இவையெல்லாம் அவர்கள் (மாறன் சகோதரர்கள்) செய்த தவறுக்கான பரிகாரங்களே. இது எந்த வகையிலும் சமாதான முயற்சியாக உருவெடுக்க வாய்ப்பில்லை.

தனியாக டி.வி. தொடங்குவதில் கலைஞர் உறுதியாக இருக்கிறார். அறிவாலயத்தில் வைத்து உடனடியாகத் தொடங்கும் வகையில் இடவசதி இல்லை என்பதால்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று முரசொலி அலுவலகத்திற்குப் போய் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்தார். வேறு இடங்கள் அமையாத பட்சத்தில், முரசொலி வளாகத்திலேயே கலைஞர் டி.வி. திட்டமிட்டபடி தொடங்கப்படும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதேபோல கண்ணுக்கெட்டிய தூரம் வரை கலைஞர்_மாறன் குடும்பத்தினரிடையே சமாதானம் ஏற்படும் என்ற நம்பிக்கையும் எங்களுக்கில்லை’’ என்கிறார்கள் அவர்கள்.

ஆனாலும் எதையும் துணிச்சலாக எதிர்கொண்டு நின்று, வெற்றிகண்டு பழக்கப்பட்ட மாறன் சகோதரர்கள், தங்களின் வழக்கமான இயல்பைக் கைவிட்டு சமாதானத்திற்காக இவ்வளவு தூரம் இறங்கி வந்திருக்கிறார்கள். நிச்சயம் தங்களின் நோக்கத்தில் அவர்கள் வெற்றிபெறாமல் விடமாட்டார்கள் என்ற குரலும் இன்னொருபுறம் சேர்ந்தே கேட்கிறது. என்ன நடக்கும் என்பதைக் காலம்தான் தீர்மானிக்கும்.

நன்றி - ரிப்போர்ட்டர்

2 comments:

வவ்வால் said...

மோஹன் தாஸ் ஜெராக்ஸ் கடை வைத்து இருக்கிங்களா? ஆனாலும் ஆசாத்திய பொறுமை உங்களுக்கு தட்டச்சு செய்து நேத்து வந்த ரிப்போர்ட்டரை சுட சுட வலையில் போட்டு இருக்கிங்க!

Anonymous said...

//‘மற்றவர்கள் சொல்லலாம்... இவர்கள் சொல்லலாமா?’ என்றே தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாராம் கலைஞர். அந்த வேதனையின் வலிகள் இன்னும் இருப்பதால்தான், //

ஏதோ ராமனைக் காட்டுக்கு அனுப்பிவிட்டு சோகத்திலாழ்ந்த தசரதன் ரேட்டுக்கு எழுதியிருக்கிறார்கள். இது பாசம், கண்ணையும், தர்மத்தையும் மறைக்கும் திருதராஷ்டிரனின் சோகம். ஆத்திரம். மகனைக் கொன்ற பீமனை நொறுக்கும் ஆவேசம்.

எல்லாம் பணம் செய்யும் வேலை. இதில் மாட்டிக்கொண்டு உயிரிழந்தவர்கள்தான் பாவம். அதிலும் பாவம் இப்பேர்ப்பட்ட அரசியல்வாதிகளை சாபமாகப் பெற்ற தமிழகம்.

ஆங்கிலத்தில் சொல்வதுபோல - between the devil and the deep sea!

எப்போதுதான் விடிவுகாலமோ?